ஸாபியீன்கள்

இவ்வசனங்களில் (2:62, 5:69, 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.

இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்தச் சான்றும் இல்லை.

மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயமே ஸாபியீன்கள் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். மேற்கண்ட வசனங்களில் ஸாபியீன்களின் நன்மைகளுக்குக் கூலி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நெருப்பை வணங்கும் சமுதாயத்தின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்ற உண்மைக்கு எதிராக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.

ஸாபியீன்கள் யார் என்று ஹதீஸ்களை ஆராயும்போது இறைத்தூதர்கள் அனுப்பப்படாதிருந்தும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் ஸாபியீன்கள் என்பது தெரிய வருகிறது. ஏகஇறைவனை விளங்கி அவனுக்கு இணைகற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருதுவதற்கு ஹதீஸ்களில் சான்றும் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்னபோது அவர்களை இறைத்தூதர் என்று நம்பாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வைத்த பெயர் ஸாபியீ என்பதாகும். இதன் பன்மை தான் ஸாபியீன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காதபோது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா? என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ‘ஆம் அவரிடம் தான்’ என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்.

(பார்க்க : புகாரி 344)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபியீ என்றுதான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்பதையும் இதில் இருந்து நாம் அறியலாம். இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித்தோழர்கள் அந்தப் பெண்ணிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம். 

அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள் இந்த ஸாபியீயை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள் என்று புகாரி 3522வது ஹதீஸில் காணலாம்.

இஸ்லாத்தை ஒருவர் ஏற்றால் அவருக்கு அந்த மக்கள் வைத்த பெயர் ஸாபியீ என்பது தான் என இதில் இருந்து அறியலாம்.

அதுபோல் ஒரு கூட்டத்தினருடன் நடந்த போரில் அவர்கள் சரணடைந்து இஸ்லாத்தை ஏற்க முன்வந்தனர். அப்போது நாங்கள் இஸ்லாத்தில் சேர்கிறோம் எனக் கூறாமல் நாங்கள் ஸாபியீ ஆகி விட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் இதை ஏற்காமல் தளபதி காலித் பின் வலீத் அவர்களுடன் போரைத் தொடர்ந்தார், இது பற்றி அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீதைக் கண்டித்தனர்.

(புகாரி 4339, 7189)

ஸாபியீ என்று சொல்லப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை என்பதில் இருந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த மக்கள் தான் ஸாபியீ என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏகஇறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத்தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.

இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். இறைவன் வழங்கிய அறிவே அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்குப் போதுமானதாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed