ஸலஃப் -سلف
———————————
ஸலபி என்னும் வார்த்தை மூலம் மக்களைப் பலர் நிறையவே குழப்பி வருகிறார்கள்.

அகராதியில் ஸலஃபு எனும் சொல்லுக்கு முன்னோர்கள் என்பது பொருள். நம்முடைய தந்தையின் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஆதல் (அலை) அவர்கள் வரை வாழ்ந்த அனைவருமே அகராதிப்படி ஸலஃபுகள் ஆவார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் ஸலஃபிகளாக (முன்னோர்களாக) ஆவோம்.

குர்ஆனிலோ, நபி மொழியிலோ ஸலபுக் கொள்கை என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு ஏற்பட்ட போது தான் ஸலபுக் கொள்கை என்பது உருவாக்கப்பட்டது.

அல்லாஹ் தன்னைப் பற்றி பேசும் போது தனது ஆற்றலைப் பற்றியும் பேசுகிறான். தனது தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறான்.

ஆற்றலைப் பற்றிப் பேசும் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை.

எனது கை எனது முகம் என்பன போன்ற சொற்களை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ்வின் கை என்றால் கை என்றே நபித்தோழர்கள் காலத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. கை என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் என்று கருத்து கொடுக்கப்படவில்லை.

நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே பொருள் கொண்டனர். ஆனால் தபவுத் தாபியீன்கள் காலத்தில் இது போன்ற சொற்களுக்கு நேரடி அர்த்தம் கொள்ளாமல் வேறு கருத்தை சில அறிஞர்கள் கொடுக்கலானார்கள்.

அல்லாஹ்வைப் பற்றி நம்முடைய ஸலஃபுகள் அதாவது சஹாபாக்கள், தாபியீன்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் ஸலஃபு என்பதை கொள்கையுடன் தொடர்பு படுத்தி அஹ்மத் பின் ஹம்பல் பயன்படுத்தினார்கள்.

நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொண்டது போல் யார் புரிந்து கொண்டார்களோ அவர்கள் ஸலஃபுகள் என்று இதன் பின்னர் குறிப்பிடப்பட்டனர்.

இறைவன் தனக்கு எந்தத் தன்மைகள் இருப்பதாகக் கூறுகின்றானோ அவற்றுக்கு நாம் மாற்று விளக்கம் கொடுக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் தனக்கு இருப்பதாகக் கூறிய எந்த அம்சத்தையும் மறுத்துவிடக் கூடாது என்பதே நபித்தோழர்களின் நம்பிக்கை.

இறைவனுக்கு கைகள், கால்கள், முகம் ஆகிய உறுப்புகள் இருப்பதாகவும், உருவம் இருப்பதாகவும் குர்ஆன் கூறுகின்றது.

இறைவன் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் எனவும், அவன் பார்க்கின்றான்; கேட்கின்றான் எனவும், அவன் நடந்து வருவான் எனவும், மறுமையில் இறைவனை நல்லவர்கள் காண்பார்கள் எனவும் குர்ஆன் கூறுகின்றது.

இவ்விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும். இவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுப்பதோ, இவை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதோ கூடாது என்பதே சஹாபாக்களின் நம்பிக்கை.

ஆதம் (அலை) அவர்களை எனது கையால் படைத்தேன் என்று அல்லாஹ் சொல்வதை, கையால் படைத்தான் என்ற அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சஹாபாக்களின் நம்பிக்கை.

எனது வலிமையைக் கொண்டு படைத்தோம் என்றே அர்த்தம் செய்ய வேண்டும் என்று பிற்காலத்தவர்கள் விளக்கம் கூறினார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வுடைய பண்புகளில், தன்மைகளில், அல்லாஹ்வுடைய உருவம் சம்பந்தப்பட்டதாக வரும் விஷயங்களில் பிற்காலத்தவர்கள் வியாக்கியானம் கொடுத்து வந்தனர்.

ஸலஃபுகள் – அதாவது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் கண் என்பதற்கும் அல்லாஹ்வின் காது என்பதற்கும் வேறு வியாக்கியானம் செய்யாமல் புரிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது கூடாது. மறுமையில் அவனைக் காணும் போதே இந்த விபரங்கள் புலப்படும் என்று நபித்தோழர்கள் கூறி விட்டார்கள். இது தான் ஸலஃபிக் கொள்கையாகும்.

ஆனால் பின்னால் வந்த தாபியீன்கள் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் முகம் என்றால் திருப்தி என்றும் , கை என்றால் சக்தி என்றும், அர்ஷ் என்றால் அதிகாரம் என்றும் வியாக்கியானம் செய்தனர். இது கலஃபுகளின் அதாவது பின்வந்தவர்களின் கொள்கையாகும்.

இந்த விஷயத்தில் சஹபாக்கள் எடுத்த முடிவே சரியானது. இதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆக ஸலஃபி என்கிற வார்த்தை அல்லாஹ்வுடைய தோற்றம் பற்றிய விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவானதே தவிர இன்று பலரும் சொல்லி வருவது போல் எல்லா விஷயங்களிலும் ஸஹாபாக்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பது அல்ல.

சஹாபாக்கள் மார்க்கம் தொடர்பாக எதைக் கூறினாலும், எந்த விளக்கம் அளித்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் ஸலஃபிக் கொள்கை என்று தவறான தோற்றத்தை இன்றைக்கு சமுதாயத்தில் சிலர் ஏற்படுத்தப்பார்க்கின்றனர்.

சுருங்கச் சொல்வதென்றால் ஸஹாபாக்களைப் பின்பற்றுவது தான் ஸலஃபிக் கொள்கை என்று கூறுகின்றனர்.

பின்வரும் மக்கள் தன்னைப் பின்பற்ற வேண்டும் என எந்த நபித்தோழரும் கூறவில்லை. ஏனைய நபித்தோழர்களைப் பின்பற்றுமாறும் நபித்தோழர்கள் கூறவில்லை. ஏன் ஒரு நபித்தோழர் இன்னொரு நபித்தோழரைப் பின்பற்றவில்லை. மாறாக அவர்கள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்றச் சொன்னார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரம் என்ற நமது நிலைபாட்டிலேயே சஹாபாக்கள் இருந்தார்கள். இது தான் ஸலஃபுகளின் அதாவது நபித்தோழர்களின் கொள்கை.

குர்ஆன், ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதனை 80 களில் இருந்து நாம் கூறி வருகிறோம். தமிழகத்தில் பலரும் இதனைக் கூறி வந்தனர்.

ஜாக்கின் தலைவராக இருக்கும் எஸ்.கமாலுத்தீன் மதனீ குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாகத் தன் அப்போது இயக்கத்துக்கு பெயர் வைக்கும் போது ஜம்மியது அஹ்லில் குரான் வல் ஹதீஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. அதாவது குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவோர் சங்கம் என்பது இதன் பொருள். ஜம்மியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், வஸ்ஸலஃப் என்று பெயர் சூட்டவில்லை.

2000-ஆம் வரை கூட ஏகத்துவத்தைப் பேசும் அனைவரும் குர்ஆன் சுன்னாவைத் தவிர வேறு இல்லை என்று தான் கூறி வந்தார்கள்.

ஆனால் இன்றைக்கு இந்த இயக்கத்தினர் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டனர். குர்ஆன் ஹதீஸை அடுத்து ஸலஃபுகள் என்று மூன்றாவதாக ஸலஃபு மத்ஹபைக் கொண்டுவந்து விட்டனர்.

ஆரம்ப காலத்திலேயே தராவீஹ் பற்றி நாம் கூறும் போதும் இருபது ரக்அத்கள் இல்லை என்று மறுத்தோம்.,

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் 20 ரக்அத்கள் தொழப்பட்டாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறினோம்.

அப்போது அதனைச் சரி கண்டவர்கள் இன்று ஸஹாபாக்களைப் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இப்பொழுது அஸ்திவாரத்தையே மாற்றி விட்டார்கள். அல்லாஹ் இவர்களுக்கு நேரான வழியை காட்டுவானாக.
————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *