ஸஜ்தா வசனங்கள் எத்தனை?

 

திருக்குர்ஆனில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று எழுதப்பட்டிருக்கும். இவ்வசனங்களை நாம் ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறு அச்சிடும் வழக்கம் ஏற்பட்டது.

 

அந்த வசனங்கள் வருமாறு:

 

7:206, 13:15, 16:49, 17:107, 19:58, 22:18, 22:77, 25:60, 27:25, 32:15, 38:24, 41:37, 53:59, 84:21, 96:19

 

இப்படி 15 இடங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று அச்சிட்டாலும் நமது நாட்டில் உள்ள ஷாஃபி, ஹனஃபி மத்ஹபினர் 14 இடங்களில் மட்டும் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

 

22ஆம் அத்தியாயத்தில் இரண்டு இடங்களில் ஸஜ்தா எனக் குறிப்பிட்டிருப்பார்கள். இதில் இரண்டாவது இடமாகிய 77வது வசனத்தில், “இது ஷாஃபி இமாம் கருத்துப்படி ஸஜ்தாச் செய்யும் இடம்” என்று அச்சிட்டுள்ளனர். அந்த வசனத்தை ஓதும்போது ஹனஃபிகள் ஸஜ்தாச் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கான ஸஜ்தா வசனங்கள் 14 தான்.

 

அது போல் 38:24 வசனத்தில் ஸஜ்தா என்று அச்சிடப்பட்டாலும் அந்த வசனத்தை ஓதும்போது ஷாஃபி மத்ஹபினர் ஸஜ்தாச் செய்வதில்லை. எனவே இவர்களுக்கும் 14 ஸஜ்தா வசனங்கள் தாம்.

 

திருக்குர்ஆனின் ஓரத்தில் இவ்வாறு குறிப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் திரட்டிய திருக்குர்ஆனின் மூலப் பிரதியின் ஓரத்தில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

 

ஷாஃபிகளும், ஹனஃபிகளும் 14 வசனங்களில் ஸஜ்தாச் செய்யுமாறு கூறுகின்றனர். குர்ஆன் ஓரங்களில் அச்சிடவும் செய்கின்றனர் என்றால் இதற்குத் தக்க சான்று இருக்க வேண்டும்.

 

திருக்குர்ஆனில் 14 இடங்களில் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் கூட இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை குர்ஆனின் ஓரங்களில் எவ்வாறு அச்சிடத் துணிந்தனர் என்று நமக்குப் புரியவில்லை.

 

15 வசனங்களில் (14 அல்ல) ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று அபூதாவூத் 1193, இப்னு மாஜா 1047 ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் உள்ளது. இது பலவீனமான ஹதீஸாகும்.

 

இந்த ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முனைன் என்பார் யாரென அறியப்படாதவர். அவர் வழியாக அறிவிக்கும் ஹாரிஸ் பின் ஸஅத் என்பாரும் யாரென அறியப்படாதவர். எனவே இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

 

மேலும் இந்த ஹதீஸில் 15 ஸஜ்தாக்கள் எவை என்ற பட்டியல் ஏதும் இல்லை. ஹஜ் என்ற அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் என்பது மட்டும் தான் கூறப்பட்டுள்ளது. மீதி 13 வசனங்கள் யாவை என்பது கூறப்படவில்லை. எனவே இவர்கள் அச்சிட்டு வெளியிடும் பட்டியல் இவர்களாகக் கற்பனை செய்ததாகும்.

 

மேலும் இதில் ஸஜ்தா வசனங்கள் 15 என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு மத்ஹபுக்காரர்களும் 14 என்று கூறுகின்றனர். இந்தப் பலவீனமான ஹதீஸை இவர்களே மீறுகின்றனர்.

 

மற்றொரு ஹதீஸில், “11 வசனங்களை ஓதியபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் ஸஜ்தாச் செய்துள்ளேன்” என்று கூறப்படுகின்றது. (திர்மிதீ 519, இப்னு மாஜா 1054)

 

இதுவும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளராக இடம் பெறும் உமர் திமிஷ்கீ என்பவர் யாரென்று அறியப்படாதவர்.

 

இப்னு மாஜாவின் மற்றொரு அறிவிப்பில், 7வது அத்தியாயமான அஃராஃப், 13வது அத்தியாயமான ரஅத், 16வது அத்தியாயமான அநஹ்ல், 17வது அத்தியாயமான பனீ இஸ்ராயீல், 19வது அத்தியாயமான மர்யம், 22வது அத்தியாயமான ஹஜ் அத்தியாயத்தில் இரு இடங்கள், 25 வது அத்தியாயமான அல்ஃபுர்கான், 27வது அத்தியாயமான நம்ல், 32வது அத்தியாயமான ஸஜ்தா, 38 வது அத்தியாயமான ஸாத், 41 வது அத்தியாயமான ஹாமீம் ஸஜ்தா ஆகிய அத்தியாயங்கள் என்று விபரமாகக் கூறப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பில் உஸ்மான் பின் ஃபாயித் என்பார் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

 

எனவே 11 ஸஜ்தா வசனங்கள் என்பதற்கும் ஏற்கத்தக்க சான்று ஏதும் இல்லை.

 

ஹதீஸ்களில் நாம் தேடிப் பார்த்தால், நான்கு வசனங்களை ஓதும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்பதற்கு மட்டும் தான் சான்று கிடைக்கிறது. எனவே அந்த நான்கு வசனங்கள் மட்டுமே ஸஜ்தா வசனங்களாகும்.

 

96:19 வசனத்தை ஓதும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக முஸ்லிம் 1010, 1011 ஹதீஸ்களிலும்,

 

84:21 வசனத்தை ஓதும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக புகாரி 766, 768, 1074, 1078 ஹதீஸ்களிலும்,

 

53:62 வசனத்தை ஓதும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக புகாரி 1067, 1070, 3853, 3972, 4863 ஹதீஸ்களிலும்,

 

38:24 வசனத்தை ஓதும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக புகாரி 1069, 3422 ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.

 

எனவே 38:24, 53:62, 84:21, 96:19 ஆகிய நான்கு வசனங்கள் தவிர வேறு வசனங்களை ஓதும்போது ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed