ஷைத்தானைப் பற்றி அறிந்துக்கொள்வோம் 

ஜின் இனத்தைச் சார்ந்தவன்

ஷைத்தான் ஜின் இனத்தைச் சார்ந்தவனாவான் என்று குர்ஆன் கூறுகிறது.

“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.

அல்குர்ஆன் (18 : 50)

ஷைத்தானின் உருவ அமைப்பு

நரகத்தில் ஸக்கூம் என்ற ஒரு கொடிய மரம் உள்ளது. இதனுடைய கொடூரமான வடிவத்தைப் பற்றி அல்லாஹ் விவரிக்கும் போது அது ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருக்கும் என்று உவமை காட்டுகிறான். இதிலிருந்து ஷைத்தான்களின் வடிவம் அருவருக்கத்தக்க வகையில் கொடூரமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 

இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.

அல்குர்ஆன் (37 : 62-65)

ஷைத்தானிற்கு கொம்புகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.

“இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள் (சிலர்), “எங்கள் நஜ்து (இராக்) நாட்டிலும் (சுபிட்சம் ஏற்படப் பிரார்த்தியுங்களேன்!)” என்று (மூன்று முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி-1037

நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மேலும், சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி-3273

ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன்

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!” என்று கூறினான்.

அல்குர்ஆன் (7 : 12)

“நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் (38 : 76)

ஷைத்தானின் உணவு

உணவு உண்பதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். இறைவனுடைய பெயரை கூறாமல் உணவு உட்கொண்டால் அந்த உணவு ஷைத்தானிற்கு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிஸ்மில்லாஹ் கூறப்படாமல் உண்ணப்படுகின்ற உணவு தான் ஷைத்தானின் உணவாகும்.

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலிலி) அவர்கள் கூறியதாவது : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலிலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளி விடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்-4105

பிஸ்மில்லாஹ் என்று கூறி உணவு உண்ணும் போது ஷைத்தானால் அந்த உணவை உண்ண முடியாது. அந்த உணவின் பலன் முழுமையாக பிஸ்மில்லாஹ் கூறி உண்டவருக்கே செல்கிறது. எனவே பிஸ்மில்லாஹ் என்று கூறி உண்ணுவதன் மூலம் நம்முடன் ஷைத்தானை உண்ணவிடாமல் தடுக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : முஸ்லிம்-4106

ஷைத்தான் அருந்தும் பானம்

உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட பொருளாக இருந்தாலும் இஸ்லாம் கற்றுத்தந்தவாறு உண்ண வேண்டும். இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக உட்கொண்டாலோ பருகினாலோ அந்த உணவும் பானமும் ஷைத்தானிற்கு செல்கிறது. இதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது.

நின்று பருகக்கூடிய ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் பார்த்த போது வாந்தி எடு என்று (பருகியவரைப் பார்த்துக்) கூறினார்கள். அவர் ஏன் என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீயும் பூனையும் ஒன்றாக சேர்ந்து பருகுவதை விரும்புவீரா என்று கேட்டார்கள். அவர் விரும்ப மாட்டேன் என்று கூறினார். (நீ நின்று குடித்த போது) பூனையை விட மோசமான ஷைத்தான் உன்னுடன் சோந்து பருகினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : அஹ்மத்-8003 (7662)

ஷைத்தானின் இருப்பிடம்

ஷைத்தான்கள் அசுத்தமான இடங்களில் வசிக்கின்றன. கழிப்பறைகள் ஷைத்தான்கள் வருகின்ற இடமாக இருப்பதால் அங்கு செல்லும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி-142

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : ஸைது பின் அர்கம் (ரலி),

நூல் : இப்னு மாஜா-296 (292)

இறைவனை ஞாபகப்படுத்தும் நற்காரியங்கள் எதுவும் வீடுகளில் செய்யப்படாமல் இருந்தால் அந்த வீடு ஷைத்தான்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக ஆகிவிடுகிறது.

குர்ஆன் ஓதுவது தொழுவது திக்ர் செய்வது போன்ற இறைவனை ஞாபகப்படுத்தும் காரியங்கள் வீடுகளில் அரங்கேறினால் ஷைத்தானும் அவனது கூட்டத்தாரும் அந்த வீட்டில் வசிக்க இயலாமல் அதை விட்டும் வெளியேறிவிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : முஸ்லிம்-4106

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம்-1430

இறைக் கட்டளையை மறுத்தான்

நல்லவனாக இருந்த ஷைத்தான் இறைவனுக்கு மாறுசெய்த ஒரே காரணத்திற்காக கெட்டவனாக மாறினான். இறைவன் ஒரு கட்டளையிட்டுவிட்டால் எந்த விருப்பு வெறுப்பின்றி கட்டுப்பட்டால் தான் முஸ்லிமாக இருக்க முடியும். வெற்றி பெற முடியும்.

இறைவன் ஷைத்தானிடம் ஆதம் (அலை) அவர்களுக்கு பணியுமாறு கூறும் போது இறைக்கட்டளைக்கு கட்டுப்படாமல் இறைவனை எதிர்த்துப் பேசினான். இறைமறுப்பாளனாக ஆனான்.

“சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்” என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக! “அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!” (என்று கூறினான்)

இப்லீஸைத் தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான். “இப்லீஸே! பணிந்தோருடன் நீ சேராமல் இருப்பது ஏன்?” என்று (இறைவன்) கேட்டான்.

சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை” என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் (15 :28-33)

பெருமையின் காரணத்தால் வழிகெட்டான்

அல்லாஹ் அல்லவா நமக்கு உத்தரவு இடுகிறான் என்று ஷைத்தான் கவனிக்காமல் ஆதம் உயர்ந்தவரா? நான் உயர்ந்தவனா? என்று யோசிக்க முற்பட்டான். அவனிடம் ஏற்பட்ட இந்த ஆணவம் தான் அவனை வழிகெடுத்தது. படைத்த இறைவனிடத்திலேயே திமரிப் பேசத் தூண்டியது.

“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

அல்குர்ஆன் (2 : 34)

“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். “களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?” என்று அவன் கேட்டான்.

அல்குர்ஆன் (17 : 61)

 

“எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.

“நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் (38 : 75)

வானவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்

ஷைத்தான் இறைக்கட்டளையை மீறுவதற்கு முன்பு வரை வானவர்களின் கூட்டத்தில் ஒருவனாகவே இருந்தான். இவைனுக்கு கட்டுப்பட மறுத்த உடன் வானவர்களின் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டான்.

“இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் (7 : 13)

இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்)

அல்குர்ஆன் (15 : 34, 35)

“இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் (38 : 77, 78)

அவகாசம் அளிக்கப்பட்டான்

தன்னை அழித்துவிடக்கூடாது. தனக்கு நீண்ட ஆயுளை அளிக்க வேண்டும் என்று ஷைத்தான் இறைவனிடம் கோரினான். ஷைத்தானுடைய இந்த கோரிக்கையை இறைவனும் ஏற்றுக்கொண்டு அவகாசம் அளித்தான்.

நீண்ட ஆயுள் ஷைத்தானிற்கு வழங்கப்பட்டாலும் உலகம் அழிக்கப்படும் போது ஷைத்தானும் அழிக்கப்படுவான். நிச்சயமாக அவனும் ஒரு நேரத்தில் மரணத்தை தழுவுவான்.

“அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் (7 : 14, 15)

இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் (15 : 36-38)

“என் இறைவா! அவர்கள் உயிர்ப்பிக் கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “அறியப்பட்ட நேரத்தை உள்ளடக்கிய நாள் வரை நீ அவகாசம் கொடுக்கப்பட்டவன்” என்று இறைவன் கூறினான்.

அல்குர்ஆன் (38 : 79-81)

ஷைத்தானின் சபதம்

ஆணவத்தால் வழிகெட்ட ஷைத்தான் ஆதமுடைய மக்கள் அனைவரையும் வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்தான். கடும் முயற்சி செய்து மக்கள் அனைவரையும் நரகத்தில் தள்ளுவது தான் ஷைத்தானுடைய முழு நோக்கமாகும். மக்களை வழிகெடுப்பதற்காகத் தான் அவன் இறைவனிடம் அவகாசம் கேட்டான்.

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். “உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்” என்று அவன் (இறைவனிடம்) கூறினான்.

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 118, 119)

“நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

அல்குர்ஆன் (7 : 16, 17)

“என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று கூறினான்.

“இதோ என்னிடம் நேரான வழி உள்ளது” என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அல்குர்ஆன் (15 : 39-42)

என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” எனவும் கூறினான்.

அல்குர்ஆன் (17 : 62)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (எனது இறைவா) உனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக ஆதமுடைய மக்கள் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களை நான் வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன் என்று இப்லீஸ் இறைவனிடம் கூறினான். அதற்கு இறைவன் எனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக அவர்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடும் காலமெல்லாம் அவர்களை நான் மன்னித்துக்கொண்டே இருப்பேன் என்று கூறினான்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : அஹ்மத்-11244 (10814)

ஷைத்தான் எப்படியெல்லாம் மனிதனை வழிகெடுப்பான் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின் வரும் ஹதீஸில் விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக ஷைத்தான் (நல்) வழிகளில் அமர்ந்துகொள்கிறான். அவனை வழிகெடுப்பதற்காக இஸ்லாம் என்ற (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது மார்க்கத்தையும் உனது தந்தையின் மார்க்கத்தையும் உனது பாட்டனாரின் மார்க்கத்தையும் விட்டுவிட்டு நீ இஸ்லாத்தை ஏற்கப்போகிறாயா? என்று கூறுவான். \

ஆதமுடைய மகன் ஷைத்தானிற்கு மாறுசெய்து இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவனை வழிகெடுப்பதற்காக ஹிஜ்ரத் (இறைவனுக்காக நாடுதுறத்தல்) என்ற (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது பூமியையும் உனது வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத் செய்யப்போகிறாயா? ஹிஜ்ரத் செய்தவர் கட்டிப்போடப்பட்ட குதிரையைப் போன்றவர் ஆவார் என்று கூறுவான். ஷைத்தானிற்கு மாறுசெய்து ஹிஜ்ரத் செய்துவிட்டால் ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக அறப்போர் என்ற (நல்) வழியில் ஷைத்தான் அமர்ந்துகொண்டு அறப்போரில் உயிரையும் பொருளையும் அற்பணிக்க வேண்டும்.

நீ போரிட்டு கொல்லப்பட்டுவிட்டால் (உன்) மனைவியை மற்றவர் மணமுடித்துக்கொள்வார். உனது செல்வம் பங்கிடப்பட்டு மற்றவரால் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறுவான். (உறுதியுள்ள மனிதன்) இவனுக்கு மாறு செய்து அறப்போரில் கலந்துகொள்வான். இந்த நல்ல காரியங்களை செய்தவராக யார் மரணிக்கிறாரோ அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது.

அறிவிப்பவர் : சப்ரா பின் அபீ ஃபாகிஹ் (ரலி),

நூல் : அஹ்மத்-15958 (15392)

முதன் முதலில் ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள்

ஷைத்தானுடைய சதியில் முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் விழுந்தார்கள். சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்த இவ்விருவருக்கும் பொய்யான தகவலை ஷைத்தான் தந்தான். அதை நம்பி அவ்விருவரும் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். இதனால் இறைவன் அவ்விருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டான்.

ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். அவன் உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!

இங்கே உமக்குப் பசிக்காது! நிர்வாணமாக மாட்டீர்! இங்கே உமக்குத் தாகமும் ஏற்படாது. உம்மீது வெயிலும் படாது! (என்று கூறினோம்).

அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

அல்குர்ஆன் (20 : 117-121)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed