*வேத வசனங்களை மறைத்த யூதர்கள்*

*நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர்*. உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். *அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!’’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு*.

அல்குர்ஆன் 5:41

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சாட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, *விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?* என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் *ஆம்* என்று (பொய்) சொன்னார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து, *மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்.விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?* என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், *இல்லை; நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால், நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும், எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால், அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம்.*

(அதே குற்றத்திற்காக) *சாமானிய மக்களைப் பிடித்தால், அவர்கள்மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றுவோம் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்* என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *இறைவா! இவர்கள் உனது சட்டம் ஒன்றைச் சாகடித்து விட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்* என்று கூறிவிட்டு, சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், *தூதரே! (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்…* என்று தொடங்கும் வசனத்தை *அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப் பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்* (5:41) என்பதுவரை அருளினான்.

*அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி,கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால்* அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள்’ என்று யூதர்கள் கூறினர்.

மேலும் பின்வரும் மூன்று வசனங்களையும் அல்லாஹ் அருளினான்:
*அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் ஆவர்.* (5:44)

*அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள் ஆவர்*. (5:45)

*அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள் ஆவர்*. (5:47)

இந்த (5:47) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை ஆகும்.)

நூல்: முஸ்லிம் (3505)

*யூதர்களின் இழிசெயல்*

*இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.*

அல்குர்ஆன் 58:8

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, *அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க* (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் *வ அலைக்கும்’* (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று சொன்னார்கள். நான் *அலைக்குமுஸ் ஸாமு வத்தாமு* (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக இராதே* என்று கூறினார்கள். நான், *அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?* என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு *வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று பதில் சொல்லி விட்டேனே?* என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் அதில், *ஆயிஷா (ரலி) அவர்கள், யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) அவர்களை ஏசினார்கள்*. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *ஆயிஷா! நிதானம்! ஏனெனில், *அல்லாஹ் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை* என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் *(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்* (58:8) எனும் வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed