முஃமின்களின் பண்புகளும், சிறப்புகளும்
வெற்றி பெற்ற இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்
(அல்குர்ஆன் 23:1-11)
இறைவனையே சார்ந்திருப்பார்கள்
நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 3:122)
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 3:160)
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 5:11)
எதிரிகளைக் கண்டு பயப்பட மாட்டார்கள்
நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்டபோது “இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்” என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை.
(அல்குர்ஆன் 33:22)
இறைநம்பிக்கையாளர்களின் உயிர், செல்வங்களை அல்லாஹ் வாங்கியுள்ளான்
நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். . அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:111)
இத்தகைய இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன்,அருளுடையவன்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன்.
(அல்குர்ஆன் 3:68)
நம்பிக்கை கொண்டோர் மீது அல்லாஹ் அருளுடையவன்.
(அல்குர்ஆன் 3:152)
இறைநம்பிக்கையாளர்கள் கூலி வீணாகாது
நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
(அல்குர்ஆன் 3:171)
நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப்போகிறான்? அல்லாஹ் நன்றி செலுத்துபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:146,147)
இறைநம்பிக்கையாளர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள்
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:72)