வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்?

இதற்கு எந்த அளவையும் இஸ்லாம் நிர்ணயிக்கவில்லை. காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப மாற்றத்துக்கு உள்ளாகும் விஷயங்களில் இஸ்லாம் பொதுவான எல்லையை நிர்ணயிப்பது கிடையாது. எத்தனை மாடிகள் கட்டலாம் என்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய விதிமுறையை உருவாக்க முடியாது.

உறுதியான கட்டுமான பொருட்கள் இல்லாத காலத்தில் ஒரு மாடிக்கு மேல் கட்ட முடியாது. இன்று 200 மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டும் அளவுக்கு உறுதியான கட்டுமான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற முன்னேற்றங்களைப் பொருத்து மாடியின் அளவு வித்தியாசப்படும்.

அடிக்கடி நிலச்சரிவும், சுனாமியும் ஏற்படும் ஜப்பானின் பல பகுதிகளில் ஒரு மாடி கூட கட்ட முடியாது. கட்டினால் அழிவு ஏற்படும் போது கடும் பாதிப்பு ஏற்படும். இதைப் பொருத்தும் மாறுபடும்.

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் அதிகமான மாடிகள் கட்டினால் காற்றோட்டம் பாதிக்கப்படும். இடைவெளி விட்டு மக்கள் வசிக்கும் இடங்களில் எவ்வளவு மாடிகள் கட்டினாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. இதைப்பொருத்தும் மாறுதல் ஏற்படும்.

நிலத்தின் தன்மையைப் பொருத்தும் இது நிர்ணயிக்கப்படும்.

இப்படி பல காரணங்களால் ஊருக்கு ஊர் காலத்துக்கு காலம் இது மாறிக் கொண்டே வரும் என்பதால் எத்தனை மாடி கட்டலாம் என்று இஸ்லாம் நிர்ணயித்து சொல்லவில்லை.

மாடி கட்டுவதற்கு பொதுவான அனுமதி உள்ளதால் நமது வசதிக்கு ஏற்ப நாட்டின் சட்டதிட்டங்களை அனுசரித்து மாடிகளை கட்டிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மரத்தால் ஆன மாடியைக் கட்டி அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால் அல்லது தோள்பட்டை கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார்கள்.

அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல் நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள்ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார்.

எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள் என்று கூறினார்கள்.

(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ஒரு மாத காலம் மனைவிமார்களை நெருங்க மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தாம் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 378

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed