விவாகரத்து (தலாக்)

    மனைவியை விட்டுப் பிரிவதற்கு விரும்பும் கணவன் உன்னை விவாகரத்துச் செய்கிறேன் என்று மனைவியிடம் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டுவிடும். இதற்கு அரபுமொழியில் தலாக் என்று சொல்லப்படும். இவ்வாறு விவாகரத்துச் செய்திட இஸ்லாத்தில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

    ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன அடியோடு திருமண உறவு முடிந்துவிடும் என்று கருதிவிடக்கூடாது.

மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் புதிய திருமணம் செய்யாமலேயே மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்துகொள்ளலாம்.

    இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கிவிடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம். இதற்கு எந்தத் தடையும் மார்க்கத்தில் இல்லை

    இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம். 

    முன்பு குறிப்பிட்டது போல் மூன்று மாதவிடாய் காலத்திற்குள் மனைவியுடன் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம். இந்தக் காலம் கடந்து முடிந்த பிறகு இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் இவர்கள் புதிய திருமணத்தை செய்துகொண்டு சேர்ந்து வாழலாம். 

    மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாமல் போனால் மூன்றாவது தடவையாக விவாகரத்துச் செய்யலாம். ஆனால் இது தான் இறுதி வாய்ப்பாகும். மூன்றாவது முறை விவாகரத்துச் செய்துவிட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டுவிடுகிறது

    என்றாலும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் வேறொரு கணவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்தால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் அவளை மறுபடியும் திருமணம் செய்து கொள்ளலாம்

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தை புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள்.

ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ வழியில்லை என்றும் நினைக்கின்றனர்

இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறினாலோ அல்லது மூன்னூறு தலாக் என்று கூறினாலும் ஒரு விவாகரத்துத் தான் நிகழ்ந்துள்ளது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நேரத்தில் மூன்று தலாக் சொல்வது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது

இப்னு அப்பாஸ் (ரலி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் முதல் இரண்டு வருடத்திலும் மூன்று முறை தலாக் சொல்வது ஒரு தலாக்காகவே (கருதப்பட்டது.)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (2689)

ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்டது தவறான நடைமுறையாகும். 

இரண்டு சாட்சிகள்

    அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்

அல்குர்ஆன் (65 : 2)

    இவ்வசனத்தில் விவாகரத்துச் செய்வதற்கான மற்றொரு நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. 

தொலைபேசியில் விவாகரத்துச் செய்யலாமா?

தொலைபேசியில் விவாகரத்து தபால் விவாகரத்து என்றெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய்வதையும் அதை மார்க்க அறிஞர்கள் சரி காண்பதையும் நாம் காண்கிறோம். 

தபாலில் எழுதுவதற்கும் தொலைபேசியில் பேசுவதற்கும் இரண்டு சாட்சிகள் இருந்தால் போதும் என்று இதை சிலர் விளங்கிக்கொள்கின்றனர். 

    விவாகரத்துச் செய்பவனையும் செய்யப்பட்டவளையும் இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குரிய சாட்சியாக இருக்க முடியும். எனவே எதிர் தரப்பில் உள்ள பெண் யார் என்று தெரியாமல் அவள் இவனுக்கு மனைவி தான் என்பதையும் அறியாமல் தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறான் என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது. 

எனவே இந்த விதியை கவனத்தில் வைத்துக் கொண்டால் அவசரத்தில் செய்யப்படும் விவாகரத்துகள் தவிர்க்கப்படும். 

விவாகரத்துத் தொடர்பான குர்ஆன் வசனங்கள்

    விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (2 : 228)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.

மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர.

அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் (2 : 229)

    (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள்.

(இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து,  (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகிற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் (2 : 230)

பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்!

உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும்  ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! “அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் (2 : 231)

பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் (2 : 232)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed