வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ரு தொழுகையை இரவின் முற்பகுதியிலேயே தொழுது விட்டு உறங்குகிறோம். பிறகு நஃபிலான தொழுகை தொழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நஃபில் தொழுது விட்டு மீண்டும் ஒரு முறை வித்ரு தொழலாமா?

இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழுவது தான் சிறந்ததாகும். உறங்கி விடுவோம் என்று அஞ்சினால் இரவின் முற்பகுதியிலேயே தொழுது கொள்ளலாம்.

இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ரு தொழட்டும். இரவின் இறுதியில் எழ முடியும் என்று நம்புகிறவர் இரவின் இறுதியிலேயே வித்ரு தொழட்டும். ஏனெனில் இரவின் இறுதியில் தொழும் போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1255

இவ்வாறு இரவின் முற்பகுதியில் வித்ரு தொழுது விட்டுப் படுத்த பின், இரவில் விழித்தால் உபரியான தொழுகைகளைத் தொழலாமா? அவ்வாறு தொழுதால் மீண்டும் வித்ரு தொழ வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 998, 472

இந்த ஹதீஸில் உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் வித்ருக்குப் பிறகு வேறு தொழுகை எதையும் தொழக் கூடாது; வித்ருக்குப் பிறகு மீண்டும் தொழுதால் அதன் பிறகு கடைசியாக வித்ரு தொழ வேண்டிய நிலை ஏற்படும். ஒரே இரவில் இரண்டு வித்ரு தொழுவதற்குத் தடை உள்ளது. எனவே வித்ருக்குப் பின் தொழக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தாலும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ரு தொழுவார்கள். பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும் போது எழுந்து நின்று, நிலையிலிருந்து ருகூவுச் செய்வார்கள். பிறகு சுப்ஹுத் தொழுகையின் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்திர்ரஹ்மான்,நூல்: முஸ்லிம் 1220

இந்த ஹதீஸில் வித்ர் தொழுத பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுததாகக் கூறப்படுகின்றது.

எனவே இரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்து நாம் முடிவு செய்ய வேண்டும்.

இரவில் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற கட்டளை கட்டாயம் அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இடப்பட்ட கட்டளையாக இருக்க முடியாது. சிறந்தது என்ற அடிப்படையில் இடப்பட்ட கட்டளையாகத் தான் இருக்க முடியும். கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அதை மீறியிருக்க மாட்டார்கள்.

அது கட்டாயம் அல்ல என்று காட்டித் தருவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ருக்குப் பின்னரும் தொழுது காட்டியுள்ளனர் என்று புரிந்து கொண்டால் இரண்டு ஹதீஸ்களுக்கும் முரண்பாடு இல்லாமல் பொருந்திப் போகும்.

எனவே வித்ர் தொழுத பின்னர் தேவைப்பட்டால் உபரியான தொழுகைஅக்ளைத் தொழுவதில் தவறில்லை என்பதை அறிய முடியும்.

இவ்வாறு தொழும் போது மீண்டும் வித்ர் தொழக் கூடாது.

ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி), நூல்: திர்மிதீ 432

ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஏற்கனவே வித்ர் தொழுதவர்கள் மீண்டும் ஒரு முறை வித்ர் தொழக் கூடாது.

வித்ர் என்ற சொல்லுக்கு ஒற்றை என்று பொருள். ஒரு முறை வித்ர் தொழுதவர் மீண்டும் வித்ர் தொழுதால் இரண்டு ஒற்றையும் சேர்ந்து இரட்டை ஆகி விடும். ஏற்கனவே மூன்று ரக்அத் வித்ர் தொழுதவர் மீண்டும் மூன்று ரக்அத்கள் தொழுதால் இவர் தொழுதது ஆறாகிவிடும். இப்போது ஒற்றை என்ற நிலை மாறி விடுகிறது. எனவே தான் இரண்டு வித்ர் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed