விதியை வெல்ல முடியுமா?

விதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொன்னார்கள், ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் வந்தார்.

உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து நீங்கள் சில தினங்களுக்கு முன் ஏதாவது செய்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் சில ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தேன் என்று கூறினார். அவர் சென்ற பின் அவர் செய்த நற்செயல் காரணமாக அவர் வாழ்நாளை அல்லாஹ் அதிகரித்திருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள், . இந்த ஹதீஸ் உண்மை தானா? உண்மை என்றால் நாம் செய்கின்ற செயலைப் பொறுத்து நம் விதி மாறுமா? விளக்கவும்

நீங்கள் கூறியவாறு எந்தச் செய்தியையும் நாம் ஹதீஸ் நூற்களில் காணவில்லை. இந்தச் சம்பவத்தின் கருத்து குர்ஆனுக்கும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் மாற்றமாக அமைந்துள்ளது.

ஒருவர் தன் முயற்சியின் மூலம் இறைவன் முடிவு செய்த விதியை மாற்றி விடலாம் என இச்சம்பவம் கூறுகிறது. இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகும். விதி ஒருக்காலும் மாற்றப்படாது. இறைவன் நாடியது நடந்தே தீரும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

6596حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا يَزِيدُ الرِّشْكُ قَالَ سَمِعْتُ مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ يُحَدِّثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُعْرَفُ أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ قَالَ نَعَمْ قَالَ فَلِمَ يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ كُلٌّ يَعْمَلُ لِمَا خُلِقَ لَهُ أَوْ لِمَا يُسِّرَ لَهُ رواه البخاري

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆம் (தெரியும்)” என்று சொன்னார்கள். அவர் “அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள்? நற்செயல் புரிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒவ்வொருவரும் “எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது “எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள்’‘ என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 6596

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும், மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன்.

மேலும், “அவர்கள் மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்” என்றும் பிரார்த்தித்தேன்.

என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்க மாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்” என்று கூறினான்.

இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5538

விதி எக்காரணத்தாலும் மாற்றப்படாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கிவிடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 6694

குறிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலம் மாற்றப்படாது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குச் சிறிது நேரம் முன்போ, பின்போ உயிர் வாங்கப்படாது. துல்லியமாக குறித்த நேரத்தில் வாங்கப்பட்டு விடும். இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.

 

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16 : 61

 

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7 : 34

எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.

திருக்குர்ஆன் 15 : 5

எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 63 : 11

அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி.

திருக்குர்ஆன் 3 : 145

பிரார்த்தனை விதியை மாற்றிவிடும் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரகத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

நூல் : இப்னு மாஜா 87

இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அபில் ஜஃது என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்று அளிக்கவில்லை. இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் இவருடைய நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

இமாம் இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை நம்பகமானவர்களின் பட்டியலில் குறிப்பிடும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று முடிவு செய்ய முடியாது.

இவருடைய நம்பகத்தன்மைக்கு மற்ற அறிஞர்கள் யாரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே இவர் பலவீனமானவானர். பலவீனமான இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மேலும் இவர் திரும்பி வரமாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று இச்சம்பவம் கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதர். மறைவான விஷயங்கள் பற்றி இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தால் தான் அதை அவர்கள் மக்களிடம் கூறுவார்கள்.

இன்னார் திரும்பி வரமாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் கண்டிப்பாக அது நடந்தே தீரும். ஏனென்றால் இது இறைத்தூதரின் முன்னறிவிப்பு.

அவ்வாறு நடக்கவில்லை என்றால் நபியவர்கள் முன்னறிவிப்பு பொய்யாகிவிடும். வஹீயின் அடிப்படையில் அமைந்த நபியின் பேச்சுக்களில் தவறோ, முரண்பாடோ வராது. ஏனென்றால் இது இறைவன் புறத்திலிருந்து வரக்கூடியவை.

ஆனால் இந்தச் சம்பவமோ இவர் திரும்பிவர மாட்டார் என நபியவர்கள் கூறிய முன்னறிவிப்பு பொய்த்து விட்டது எனக் கூறுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொய்யராகச் சித்தரிக்கும் இந்தச் சம்பவத்திற்கும் நபியவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆயினும் விதி மாறுமா என்பதில் சர்ச்சை செய்யாமல் பிரார்த்தனைகளை நாம் செய்து வரவேண்டும். நம்முடைய விதி மாறாது என்பதால் பிரார்த்தனை தேவையற்றது என்று கருதக் கூடாது. ஏனெனில் விதியை நமபச் சொன்ன நபியவர்கள் பிரார்த்தனை செய்யுமாறும் நமக்கு வழி காட்டியுள்ளனர்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed