வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம்

வஸிய்யத் என்பது ஒருவர் மரணத்தை நெருங்கும் போது தன்னுடைய பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அடுத்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டுச் செல்வதாகும்.

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

அல்குர்ஆன் 2:180

இந்த வசனத்தில் ‘பெற்றோர் மற்றும உறவினர்களுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மாற்றப்பட்டுவிட்டது.

பெற்றோருக்கும், வாரிசு முறையில் சொத்து பங்கீட்டில் உள்ளவர்களுக்கும் வஸிய்யத் என்பது கிடையாது.

திருக்குர்ஆன் 4:11,12 ஆகிய வசனங்களில் யாரையெல்லாம் வாரிசுதாரர்கள் பட்டியலில் இறைவன் சேர்த்து விட்டானோ அவர்களுக்கு வஸிய்யத் செய்ய கூடாது. அவர்கள் அல்லாத மற்ற உறவினர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வஸிய்யத் செய்யலாம்.

வஸிய்யத் செய்ய வேண்டும் என்பதற்காக எந்த வரம்புமின்றி அனைத்துப் பொருளாதாரத்தையும் வஸிய்யத் செய்வதற்கும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும்  ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.  அப்போது நான் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்துவிட்டேன்.  நான் தனவந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?’’ எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’  என்றார்கள்.  பின்னர் நான் ‘பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன்.  அதற்கும் நபி (ஸல்)  அவர்கள் ‘‘வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1295 (ஹதீஸின் சுருக்கம்)

நமது சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வஸிய்யத் செய்யக் கூடாது என்றும் மூன்றில் ஒரு பங்கு செய்வதே அதிகம் என்றும் இந்தச் செய்தியிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.

வஸிய்யத் செய்கிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த சொத்தையும் மரண சாசனம் செய்துவிட்டு வாரிசுகளுக்கு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும் பாவமாகிவிடும்.

ஒருவர் வஸிய்யத் செய்திருக்கிறார் எனில் அவர் மரணித்த பிறகு சொத்து பங்கீடு செய்வதற்கு முன்னால் அவருக்கு ஏதேனும் கடனோ, அல்லது அவர் யாருக்கேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றிய பிறகுதான் சொத்தைப் பங்கிட வேண்டும்.

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 4:12, 13, 14

இவ்வாறு அதிகம் வலியுறுத்திக் கூறியுள்ள வஸிய்யத் செய்வது சில சமயம் அவசியமாகிறது.

உதாரணமாக, ஒருவர் மரணத் தருவாயில் இருக்கிறார். அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். அவரது மகனோ அல்லது மகளோ தந்தையாகிய இவர் இறப்பதற்கு முன்னால் இறந்து விட்டனர் என வைத்துக் கொள்வோம். அந்த இறந்த மகன் அல்லது மகள் வழியாகப் பேரன், பேத்தி போன்ற உறவுகள் இவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் சொத்திற்கு சொந்தக்காரர் இறந்து விட்டால் ஏற்கனவே இறந்து விட்ட இவரது மகன் வழியாக உள்ள பேரக்குழந்தைகளுக்கு வாரிசு முறையில் எந்தப் பங்கீடும் கிடைக்காது.

ஏனெனில் சொத்திற்குச் சொந்தக்காரர் இறந்த பிறகுதான் அந்தச் சொத்தில் பங்கீடு ஏற்படும். அவர் இறப்பதற்கு முன்னால் அவரது மகன் அல்லது மகள் இறந்துவிட்டால் அவர்களுக்கு இவரிடமிருந்து எந்தப் பங்கும் கிடையாது.

இவ்வாறு தந்தைக்கு முன்னால் இறந்த பிள்ளைகளுக்கு எந்தப் பங்கும் கிடைக்காதென்றால் அவர்கள் வழியாகவுள்ள பேரக்குழந்தைகளுக்கும் எந்தப் பங்கும் கிடைக்காது.

இந்தச் சூழ்நிலையில் சொத்திற்குச் சொந்தக்காரர், தான் இறப்பதற்கு முன்னால் தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களைப் பரிதவிக்க விட்டுவிடாமல் அவர்களுக்கு தனது சொத்திலிருந்து வஸிய்யத் செய்வது அவசியமாகிறது.

இதுபோன்று வாரிசுதாரர்களின் பட்டியலில் தன்னுடைய உறவினர்களுக்கு வஸிய்யத் செய்வது மிக அவசியமானதாக இருக்கிறது.

ஆனால், இவ்வாறு வாரிசுரிமையில் சொத்தில் பங்கீடு பெறாத தன்னுடைய குடும்பத்தாருக்கு வஸிய்யத் செய்வதை விட்டும் பலர் அலட்சியத்துடன் இருக்கின்றனர்.

இதுவும் நம்முடைய மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய அவசியமான காரியங்களில் உள்ள ஒன்றாகும்.

எப்போது மரணம் வரும் என்று தெரியாத நாம் இதுபோன்ற மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய காரியங்களை விரைவாகச் செய்து முடித்துவிட வேண்டும்.

இதபோன்ற காரியங்களில் அலட்சியத்துடன் இருந்து இறைவனிடத்தில் குற்றவாளியாக மாறிவிடக்கூடாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed