வரதட்சணை என்ற வியாபாரம். 

சந்தையில் ஆடு, மாடுகளை விற்பது போல் நடைபெறும் ஒரு வியாபாரம் தான் மாப்பிள்ளை வியாபாரம்! ஆம் மானங் கெட்டவர்களின் ஒவ்வொரு திருமண நிகழ்வின் போதும் நடைபெறும் வியாபாரம். மணமகனை வரதட்சணை என்ற  குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படும் இந்த வியாபாரம், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்திருந்தாலும், தற்போது அல்லாஹ்வின் பேரருளால்  குறைந்து கொண்டு வருகிறது.

இதற்குக் காரணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்பினர் செய்யும் இடைவிடாத பிரச்சாரம் தான். இன்னும் சில ஊர்களில் இந்த விஷச் செடிகளைகளை எடுக்க வேண்டியுள்ளது.

பெண்களைப் பெண்களாகவே மதிப்பதில்லை. அவளை ஒரு அடிமையாகவும், வேலைக்காரியாகவும் இன்னும் ஒரு சுமையாகவும் கருதுவதுதால்தான் வரதட்சணை என்ற போய் நடமாட முடிந்தது.

நம் நாட்டைப் பொருத்தவரையில் அனைத்து வீடுகளிலும் ஒரு பெண் கருவுற்று அவள் பிரசவமாகிவிடும் போது பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் ஆஹா! என்ன பெண் குழந்தை பிறந்து விட்டதே இனிதான் இவர்களுக்கு கஷ்டம்தான் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோ, மாமியார், நாத்தனார்களோ கிளப்பிவிடுவார்கள். பெற்றெடுத்த தாய், தந்தைக்கு இந்த எண்ணத்தை ஏற்படுத்தி விடுவார்கள். பிறகு அக்குழந்தை வளர வளர அதை ஒரு பாரமாகவே தெரிவார்கள். இதனால் பெற்றோர்கள் கூட மற்றவர்கள் கூறுவது போல் உண்மையிலேயே பெண்பிள்ளை சுமைதானோ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

ஏன் ஒரு ஆண் மகன் கூட அவனுக்கு திருமணம் ஆகும் வரை, அல்லது சுயமாக சம்பாதிக்கும் வரை பெற்றோர்களுக்கு சுமைதானே. அதை இச்சமூகம் பார்ப்பதில்லை.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

(அல்குர்ஆன் 2:228)

ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து வரதட்சணை சீர்வரிசைகள் போன்ற அனாச்சாரமான விஷயங்களை கொடுத்தனுப்ப வேண்டியுள்ளது. ஆகையால் அவளுக்கு சிறுவயதிலிருந்தே மிச்சம்பிடித்து சேர்க்க வேண்டியுள்ளதால் பெண்ணை ஒரு சுமையாகவே கருதுகின்றனர்.

இதனாலேயே பல பெற்றேர்கள் பெண் குழந்தை பிறந்தால் அவளால் தமக்கு ஏராளமான செலவீனங்களும் பல நஷ்டங்களும் ஏற்படும் என்று அப்பெண்ணை பிறந்தவுடனேயே கொன்று புதைக்கின்றனர். தற்போது நவீன உலகில் கருவில் வைத்தே அழித்து விடுகின்றனர். இது எவ்வளவு பெரிய பாவமான செயல் என்பதை அறிந்தும் அறியாமலும் செய்கின்றனர்.

இது அப்பட்டமான அறியாமைக்கால செயல்கள் இல்லையா?

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன் 16:58,59)

கொலைக்கு என்ன தண்டனை?

திட்டமிட்டு அல்லது வேண்டுமென்றே ஒரு மனிதனைக் கொல்வது தான் கொலை என்பது கிடையாது. மாறாக சிசுக்களைக் கொல்வதும் கொலைதான்.

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 4:93)

பொதுவாக கொலை அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தும் என்றால் பிறப்பதற்கு முன்பே கொன்றால் அல்லாஹ்வின் கோபம் எவ்வளவு அதிகரிக்கும்?

பிறகு மறுமையில் முதல் விசாரணை கொலையை பற்றி தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாüல் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : புகாரி (6533)

பெண் கொலை விசாரணை 

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது

(அல்குர்ஆன் 81:8,9)

பெண் என்பதற்காக கொன்றவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் தனி விசாரனை செய்யப்படும். அந்த நேரத்தில் வரதட்சணை காரணத்திற்காக கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிக்கப்படும் போது வரதட்சணை வாங்கியவர்கள் மற்றும் அதில் ஈடுபட்டவர்களின் நிலை என்னவாகும்?

இவ்வாறு என்றென்றும் நிரந்தரமான தண்டனையை பெற்றுத்தரக்கூடிய செயலை சர்வ சாதாரணமாக செய்து வருகிறோம். இதிலிருந்து அல்லாஹ்வின் உதவியோடு மீண்டுவருவோமாக.

சீர்வரிசை என்ற வரதட்சனை

ஒரு பெண்ணுக்கு திருமணப்பேச்சு துவங்கியதிலிருந்து பெற்றோர்களுக்கு செலவுகள் ஆரம்பித்து விடுகிறது. அவளை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்த நாளிலிருந்து அப்பெண் மணமுடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் வரை அடுத்த, அடுத்த செலவுகளாகிவிடும்.

இந்தியா, வங்காளம், இன்னும் சில நாடுகளில் தான் இந்த வரதட்சனை, சீர்வரிசை, சாஸ்திரம், நடந்தேறுகின்றது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மதங்களையும் இது ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஒரு பெண்ணையும் அவளது குடும்பத்தாரையும் கசக்கி நுகர்ந்து பார்த்து தான் மாப்பிள்ளை வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க விடுவார்கள்.

மாப்பிள்ளை சந்தையில் அவரவர் நிலைக்கேற்று வரதட்சனையும் மாறுபடும். சொல்லப்போனால் கிட்டத்தட்ட இதுவும் ஒரு வியாபாரம் போன்று தான் இங்கு அரங்கேறுகிறது. வீடு வாசல், சொத்து சுகங்கள் இருந்தால் வரதட்சனையின் விலையே தனி தான். அது இலட்சங்களையே தாண்டும். பிறகு சுமாராக இருந்தால் அதற்கேற்ப விலை மாறுபடும்.

இத்தோடு சீர்வரிசைகள் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளுக்கும் அளவில்லை. மாப்பிள்ளை விட்டில் அனைத்து பொருட்களும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதையே மறுபடியும் பெண் வீட்டாரிடம் கேட்பது.

தங்கள் வீட்டில் டி.வி. இருந்தாலும் உயர்ரக டி.வி. போன்ற வீட்டு உபயோக பொருட்களை நச்சரித்து கேட்டு வாங்குவது. பெண்ணுக்கு சுமார் 30-50 பவுன்களில் நகை என்றால் மாப்பிள்ளைக்கு இரு சக்கர வாகனம், கார், தங்க மோதிரம் கேட்பது. மாப்பிள்ளைக்கு உடன்பிறந்த சகோதரிகள் இருந்தால் நாத்தனார் சீர் என்ற பெயரில் அவர்கள் எத்தனை பேரோ அதற்கேற்ப அவர்களுக்கும் ஆபரணங்கள் வாங்கி கொடுக்க நச்சரிப்பது என்று கொடுமைகள் நீண்டு சொல்கின்றன.

இதுபோன்ற அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத எண்ணற்ற செயல்களை இன்றும் செய்து வருகின்றனர்.

இந்த சீர் வரிசை அனைத்தும் திருமணத்துக்கு 2 நாள் முன்னரே மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றிருக்க வேண்டுமாம்.

எப்படியோ கடன் வாங்கி, வட்டி வாங்கி திருமணத்தை முடித்து பெண்ணை அனுப்பிய பிறகு இனி திருமணத்திற்கு வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறோம் என்ற அடுத்த கட்ட சோதனை வந்துவிடும் பெண்ணை பெற்றவர்களுக்கு.

பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று நாற்பது நாட்கள் ஆகிவிட்டதாம். அதற்கும் தனியாக சீர் கேட்பது. திருமணத்திற்கு வைத்ததைப் போல் இரண்டு பங்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் பழவகைகளும் ஏகப்பட்ட பொருட்களோடு அவர்களை சந்திக்க வேண்டுமாம்.

திருமணம் முடிந்ததோடு செலவுகள் நின்றுவிட்டது என்று பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. இப்படியெல்லாம் அநியாயம் நடந்தால் எங்கு போவது? பெண்ணை பெற்ற குற்றத்திற்காக தலையில் முக்காடு போட்டு ஒரு ஓரமாக தான் அமர வேண்டும். இதனாலேயே தான் பல பெண்கள் மணமுடிக்காமல் தேங்குகின்றனர். அல்லாஹ்தான் இவர்களை திருத்த வேண்டும்.

ஆனால் நமது மார்க்கம் இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் மிக அழகான முறையில் ஆண்களை பார்த்து பெண்ணுக்கு நீ அவளின் மணக்கொடையை கொடுத்து மணமுடி என்று கட்டளையிடுகிறது. இதை கேட்க சாதாரண விஷயம் போல் தோன்றும். ஆனால் இதற்குள் எவ்வளவு உண்மையும் எதார்த்தமும் அடங்கியுள்ளது. இதனால் எத்தனை பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றன.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

(அல்குர்ஆன் 4:4)

நபிமார்களும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க பெண்களுக்கு மஹர் கொடுத்து மணமுடித்தார்கள். அவர்களிடம் எதையும் வாங்கவில்லை. மக்களையும் இவ்வாறு கடைப்பிடிக்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்

(அல்குர்ஆன் 28:27)

மூஸா (அலை) அவர்கள் இவ்வாறு எட்டு ஆண்டுகள் பணி செய்து அதையே மஹராக்கி மணமுடித்தார்கள்.

மஹர் கொடையின் முக்கியத்துவம்

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக்ச்கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “அல்லாஹவின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் மீதணையாக! ஏதும் கிடைக்கவில்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்.

“இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்!” என நபி (ஸல்) அவர்கள் சொல்-யனுப்பி னார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக் வில்லை. ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது” என்று சொன்னார்.

-அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. அதனால்தான் தனது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.-

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால், அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்துகொண்டால், உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?)” என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார்.

பிறகு, அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்டபோது, “உம்மிடம் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப் பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், “இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளன” என்று எண்ணி எண்ணிச் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),

நூல் : புகாரி (5030)

இவ்வாறு நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் மஹருக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை மேற்கூறப்பட்டுள்ள செய்திகளில் காணலாம்.

இச்சமூகம் வரதட்சணை வருமானத்தினால்தான் மஹர் விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறது. இனியாவது வரதட்சணை, சீர் வரிசை போன்றவற்றை கேட்டு பிடுங்கும் கேடுகெட்டவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

 

ஜே. பர்ஜானா ஜமீல் அஹமது

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed