வரதட்சணை என்பதற்கான அளவுக்கோல் என்ன ?

வரதட்சணை என்று நேரடியாகச் சொல்லித் தந்தால் தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர்.

சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன. திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான்.

பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!

6979 அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள்.

அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம் என்று கூறினார்கள்.

பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக!

உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன் என்று கூறினார்கள்.

பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.

அந்த நபருக்கு அன்பளிப்பாகத் தான் அது வழங்கப்பட்டது. ஆனாலும் ஜகாத் வசூலிக்கச் சென்றதால் தான் அவருக்கு வழங்கப்பட்டது என்பதால் அதை அன்பளிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதைச் சிந்தித்தால் வரதட்சணையில் எவை சேரும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed