வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா?

கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் நீங்கள் பங்கு வாங்குவதை சம்பளம் என்று கூற முடியாது. ஏனென்றால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் போது உங்களுக்குப் பணம் கூடுதலாகக் கிடைக்கும். நஷ்டம் ஏற்படும் போது உங்களுக்கும் நஷ்டம் ஏற்படும். இது போன்ற பிரச்சனை கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்யும் பாட்னர்களுக்கே ஏற்படும்.

எனவே நீங்கள் உங்களுடைய நண்பருடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்கள் நண்பர் முதலீடு செய்துள்ளார். நீங்கள் உங்களுடைய உழைப்பைக் கொடுக்கிறீர்கள்.

ஒரு வியாபாரத்தில் கூட்டுச் சேருபர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எந்த வியாபாரத்தை நடத்தப் போவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கின்றதோ அந்த வியாபாரம் மார்க்கத்தில் ஹலாலா? அல்லது ஹராமா? என்று பார்க்க வேண்டும்.

எந்த வியாபாரத்தைத் தனியாக நடத்துவதை மார்க்கம் தடை செய்கின்றதோ அதைக் கூட்டு சேர்ந்து நடத்தினாலும் தவறு தான். எந்த வியாபாரத்தைத் தனியாக நடத்த அனுமதியுள்ளதோ அதைக் கூட்டாக சேர்ந்து நடத்துவதற்கும் அனுமதியுள்ளது.

உதாரணமாக வட்டிக் கடை மதுக்கடை ஆகியவற்றை நடத்த கூட்டு சேருவது கூடாது. அதே நேரத்தில் மளிகைக் கடை நடத்துவதற்குக் கூட்டுச் சேர்ந்தால் அதில் தவறில்லை. உங்கள் நண்பர் வியாபாரப் பொருட்களைத் தயார் செய்யும் தொழிலை நடத்தப் போவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இத்தொழிலைச் செய்யும் போது மார்க்க வரம்புகள் மீறப்படாதென்றால் அத்தொழிலில் நீங்கள் ஒர்கிங் பாட்னராக இருந்து உங்கள் நண்பர் உங்களுக்குத் தரும் 30 சதவீதப் பங்கை வாங்குவது தவறில்லை.

உங்கள் நண்பர் வட்டிக்கு வாங்கி முதலீடு செய்திருப்பதால் அந்த வியாபாரத்தில் கிடைக்கும் பங்கு ஆகுமானதல்ல என்று நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.

கடன் கொடுத்து வட்டி வாங்குவதற்கும், வட்டிக்குக் கடன் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. உங்கள் நண்பர் பிறருக்குக் கடன் கொடுத்து அதற்காக அவர் வட்டி வாங்கினால் அந்த வட்டிப் பணம் தான் அவருக்கு ஹராமாகும்.

பிறரிடம் கடன் வாங்கி வாங்கிய பணத்துக்காக வட்டி கட்டும் போது இதனால் கடன் வாங்கப்பட்ட பணம் ஹராமாகி விடாது. மாறாக வட்டிக்குத் துணை நின்றார் என்ற குற்றம் மட்டுமே ஏற்படும்.

அந்த வகையில் உங்கள் நண்பர் குற்றவாளியாகிறார்.

அவரும் நீங்களும் சேர்ந்து வங்கியில் கூட்டாகக் கடன் வாங்கினால் அந்தப் பாவத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு. அவர் மட்டும் தனிப்பட்ட முறையில் வட்டிக்கு வாங்கி அந்தக் கடனில் உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஒர்க்கிங் பார்ட்னராக நீங்கள் இருந்தால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.

உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம் மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா? என்பதை மட்டும் நீங்கள் கவனித்தால் போதும். நண்பர் எந்த வழியில் பணத்தைப் பெற்று முதலீடு செய்திருந்தாலும் அதில் உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.

உதாரணமாக நீங்கள் ஒரு வியபாரியாக இருக்கின்றீர்கள். உங்களிடம் பலர் வந்து பணம் கொடுத்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். வருவோரில் ஹராமான வழியில் பொருளீட்டியவர்களும் ஹலாலான வழியில் பொருளீட்டியவர்களும் இருப்பார்கள். இந்த வியபாரத்தில் இந்தப் பொருள் நுகர்வோருக்கு எப்படி வந்திருந்தாலும் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. நாம் பொருள் தருகிறோம். அவர்கள் பணம் தருகிறார்கள் என்பதை மட்டுமே கவனிக்கின்றோம்.

இதேப் போன்று தான் உங்கள் பிரச்சனையும் அமைந்துள்ளது. நீங்கள் வேலை பார்க்கின்றீர்கள். அந்த வேலைக்காக 30 சதவிகிதம் பங்கு தரப்படுகின்றது. உங்களுக்கு பணம் வருகின்ற வழி ஹலாலாக இருக்கின்றது. உங்கள் நண்பருக்கு இந்தப் பணம் ஹலாலான வழியில் வந்ததா? என்று பார்க்க வேண்டியதில்லை.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் வட்டித்தொழில் செய்து வந்தனர். அதன் வருமானத்தையே உண்டு வந்தனர். இதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்ட தாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் (4:161)

 

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் (2:275)

இந்நிலையில் வட்டித் தொழில் செய்து வந்த யூதர்கள் தரும் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

அனஸ் ரலி) அவர்கள் கூறினார்கள் :

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களீடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், “வேண்டாம்” என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்: புகாரி (2617)

அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். “அய்லா’வின் அரசன் நபி (ஸல்) அவர்களுக்கு (“தல்தல்’ எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபி (ஸல்) அவர்கள் அவனுக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவனுக்கு எழுதினார்கள்.

நூல்: புகாரி (3161)

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

தூமத்துல் ஜந்தலின் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளீப்புகளை அனுப்பினார்.

நூல்: புகாரி (2616)

யூதர்கள் வட்டி வாங்கி சம்பாதித்து இருந்தாலும் அவர்களிடமிருந்து வந்த அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள். யூதர்களிடமிருந்து தனக்கு இந்த பொருட்கள் எவ்வாறு வந்தது என்பதை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் பார்த்துள்ளார்கள். அதாவது அன்பளிப்பு என்ற ஆகுமான வழியில் வந்துள்ளது.

யூதர்கள் இந்த அன்பளிப்புகளை ஹராமான வழியில் சம்பாதித்து இருக்கின்றார்கள். எனவே நாம் இதை வாங்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் முடிவு எடுக்கவில்லை.

ஒருவரிடமிருந்து நமக்குப் பொருள் வந்தால் அவரிடமிருந்து நமக்கு பொருள் வந்த வழி சரியாக இருக்கின்றதா என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் பார்த்துள்ளார்கள்.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

பரீராவுக்கு தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள்.

நூல்: புகாரி (1495)

உங்கள் நண்பர் ஹராமான வழியில் சம்பாதித்து இருந்தால் அதற்கான குற்றம் அவருக்கு மட்டுமே சேரும். இதில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

அதே நேரத்தில் ஒருவர் தீமை செய்திருப்பதை நாம் காணும் போது சம்பந்தப்பட்டவரிடம் அவர் செய்த தவறை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும். எனவே உங்கள் நண்பருக்கு வட்டி வாங்குவதைப் போன்று வட்டி கொடுப்பதும் தவறு தான் என்பதை உணர்த்தி விடுங்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed