வட்டிக்கு தீர்வு இஸ்லாம் மட்டுமே!

முஸ்லிம்களின் முதல் நம்பிக்கையும், முழு நம்பிக்கையும் மறு உலக வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டே முஸ்லிம்களின் இந்த உலக  வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அதற்கு மறுமையில் பலன் கிடைக்கும் என்பதால் தான் செய்கின்றார்கள். அவர்கள் ஒரு தீய காரியத்தைச் செய்யாமல் விடுகின்றார்கள் என்றால் அதற்கு மறு உலக வாழ்க்கையில் தண்டனை கிடைக்கக்கூடாது என்பதால் தான் விடுகின்றார்கள்.

இன்று முஸ்லிம்கள் வங்கியில் வரவு செலவுக் கணக்கு வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதில் வருகின்ற வட்டியை வாங்கிக் கொள்வதில்லை. அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அதை உதறித் தள்ளி விடுகின்றார்கள்.  முஸ்லிம்கள் பிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடுவதில்லை. இதற்குக் காரணம் வட்டிக்கு விடுவோர் மறு உலக வாழ்க்கையில் நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விடுவார்கள் என்பதால் தான். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:275

இதுதான் அதிகமான முஸ்லிம்கள் வங்கியிலிருந்து  வருகின்ற வட்டியை வாங்க மறுப்பதற்குரிய முக்கியக் காரணமாகும். பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு சம்பாதிக்க மறுப்பதற்கும், வட்டித் தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபடாததற்கும் இது தான் காரணம்.

முஸ்லிம்கள் அறவே வங்கியிலிருந்து வட்டி வரவை வாங்குவதில்லை; பிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவதில்லை; வட்டித் தொழிலிலும் ஈடுபடுவதில்லை என்று நாம் வாதிடவில்லை. முஸ்லிம்களிலும் மேற்கண்ட விதங்களில் வட்டியுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் மிகவும் குறைவானர்கள். அவர்கள் மறு உலக நம்பிக்கையில் அதிகப் பிடிமானம் இல்ல்லாதவர்கள். அதனால் தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். மற்றவர்கள் மறுமையை அஞ்சி வட்டியை விட்டு ஒதுங்கி விடுகின்றார்கள்.

இறைவனுடன் போர் பிரகடனம்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

அல்குர்ஆன் 2:278,279

வரவேண்டிய வட்டியை விட்டு விட  மறுப்பவர், இறைவனிடமும், அவனது தூதரிடமும் போர்ப் பிரகடனம் செய்தவராவார் என்று திருக்குர்ஆன் முழங்குகின்றது.

இறை நம்பிக்கையுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இது போன்ற காரியத்தில் இறங்க முன்வரமாட்டார்.

வட்டிக்கு வாங்குபவருக்கும் தண்டனை

பொதுவாக வட்டிக்குக் கொடுப்பது தான் பாவம், வட்டிக்கு வாங்குவது பாவமில்லை; காரணம் வாங்குபவன் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றான் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளது. ஏன்? ஒரு சில முஸ்லிம்களிடத்திலும் இந்தச் சிந்தனை இருக்கின்றது. அதற்குத் தான் கீழே இடம் பெறுகின்ற நபிமொழி சம்மட்டி அடி கொடுக்கின்றது.

வாங்குபவர் என்ன? எழுத்தாளர், சாட்சியாளர் அத்தனை பேர்களையுமே இறைத்தூதரின் சாபம் வளைத்து விடுகின்றது.

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும் அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

ஆதாரம்: முஸ்லிம்  4177

நபி (ஸல்) அவர்களுடைய சாபத்தை வட்டியின் மூலம் சம்பாதிக்க எந்த முஸ்லிம் முன் வருவார்?

மறுமையில் கிடைக்கும் தண்டனை

இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

நூல்: புகாரி 2085

இஸ்லாமிய மார்க்கம் இப்படி மறு உலக  நம்பிக்கை அடிப்படையில் வட்டிக்கு எதிரான தடுப்பணைகளைப் போட்டு முஸ்லிம்கள் வட்டியின் பக்கம் சாடுவதை விட்டும், சாய்வதை விட்டும் தடுக்கின்றது.

பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் கிடக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு மறு உலக நம்பிக்கை அடிப்படையில் கடன் வழங்கும் சில கட்டுபாடு, கண்டிப்புடன் கூடிய கடன் வாசலை திறந்து விடுகின்றது.

அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை நிறைவேற்றக் கடன் காலத்தின் கட்டாயமாகின்றது. அதனால் ஏழைபாழைகளைக் காக்கவும், கைதூக்கி விடவும் இஸ்லாம் மார்க்கம் கடன் வழங்கலை ஒரு  தர்மமாகவே ஆக்கி, அதற்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாகக் கூறுகின்றது.

தவணைக்கும் நன்மை  தள்ளுபடிக்கும் நன்மை

கடன் வாங்கியவர் திரும்பச் செலுத்தாமல் தத்தளிக்கின்றார் என்றால் அவருக்கு மனிதாபிமானத்துடன் அவகாசம் அளிக்கச் சொல்கின்றது. அது தொடர்பாக வருகின்ற நபி மொழிகளை இப்போது பார்ப்போம்.

(கடன் வாங்கி அடைக்க முடியாமல்)  சிரமப்படுவருக்கு தவணை முடிவதற்கு முன் அவகாசம் அளிப்பவருக்கு ஒவ்வொரு நாளும் அது போன்ற தொகையை தர்மம் செய்த நன்மை உண்டு. தவணை முடிந்த பிறகு அவகாசம் அளிப்பவருக்கு ஒவ்வொரு நாளும் அது போன்ற இரு மடங்கு தொகையை தர்மம் செய்த நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: அஹ்மது 21968

‘‘(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்லும்) தனது (அலுவலரான) வாலிபரிடம், (வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும் என்று சொல்லி வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3480

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, ‘அவரிடம் நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் வசதியற்றவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்என்று கூறினார். உடனே, அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்! என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்  

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி 2077

மற்றோர் அறிவிப்பில், சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும், வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன் என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இன்னோர் அறிவிப்பில், வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன் என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

மற்றோர் அறிவிப்பில், வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன் என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2078

மேற்கண்ட இந்த நபிமொழிகள் அனைத்தும் கடனுக்குத் தள்ளுபடி மற்றும் தவணை அளிப்பதைப் பற்றி தெரிவிக்கின்றன.

மறுமையில் ஈடேற்றம்

(என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், நான் (வசதியின்றி) சிரமப்படுபவன் என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?’’ என்று கேட்டார்கள். அவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான் என்றார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், ‘‘மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா

நூல்: முஸ்லிம்  5328

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது, கடன் வாங்கியவர் பரிந்துரை செய்யுமாறு நம்மிடம் கோரிக்கை வைத்தால் அவருக்காகப் பரிந்துரை செய்து அவரது சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கி வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, கஅப்! என்றழைத்தார்கள். நான், இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இந்த அளவை உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்துவிடு!’’ என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) எழுந்து சென்று கடனை அடைப்பீராக! என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர்: கஃப் (ரலி)

நூல்: புகாரி 457, 471, 2418, 2424, 2706, 2710

அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். ஆனால் கடன் கொடுத்தவர்கள் அதனை ஏற்றுக் கெள்ளவில்லை.

என் தந்தையார் உஹதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டு கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, நாம் உன்னிடம் காலையில் வருவோம் என்று கூறினார்கள்.

பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்சை மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக துஆச் செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன. 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 2127, 2395, 2396, 2406, 2601

கடனுக்குக் கட்டுபாடு

இஸ்லாம் கடன் வாசலைத் திறந்து வைத்திருக்கின்றது என்பதற்காகக் கண்டமேனிக்கு, தாறுமாறாகக் கடன் வாங்கலாம் என்று அர்த்தமல்ல.

கடன் வாங்கி விட்டுத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவரது பாவம் மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவருக்கு அல்லாஹ் அளிக்கின்ற மரியாதையும், மாண்பும் வேறெவருக்கும் கிடையாது. அவர் இறந்த மாத்திரத்தில் அவருக்கு சுவனம் வழங்கப்பட்டு விடுகின்றது. ஆனால் அவர் கடன் வாங்கி விட்டு அதை அடைக்காமல் மரணித்து விட்டால் அவரது பாவம் மன்னிக்கப்படாது என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.

அறப்போரில் உயிர் துறந்தருக்கு கடனை தவிர அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்

நூல்: முஸ்லிம் 3498

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்த தியாகிக்கே கடன் எனும் பாவம் மன்னிக்கப்படாது எனும் போது மற்றவர்கள் நிலைமை என்ன என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

அரசின் கடமை

மக்களைக் காக்கின்ற ஓர் அரசாங்கம் வட்டியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அத்துடன், கடன் பட்டு அல்லலும் அவஸ்தையும் படுகின்ற மக்களுக்குக் கடனுக்குரிய பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். இஸ்லாம் வட்டியின் வாசலை அடைத்து விட்டு, கடன் வாசலைக் கடிவாளத்துடனும் கட்டுபாட்டுடனும் திறந்து விடுகின்றது.

யாரேனும் ஒருவர் கடன் வாங்கி அதை அடைக்க வசதி இல்லாமல் இறந்து விட்டால் அந்தக் கடனை அரசாங்கமே ஏற்க வேண்டும். இதோ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கடன் பட்டு இறந்தவருக்கு இஸ்லாமிய ஆட்சிக் கருவூலத்தில் பொருளாதாரம் நிறைந்த பிறகு கடனை அடைக்கும் பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்; அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), ‘இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! இறை நம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2298

கடன் வாங்கி விட்டு அதை அடைப்பதற்கு வசதியின்றி இறந்தவருக்கு இஸ்லாமிய அரசாங்கம் பொறுப்பேற்கும் அதே வேளையில் ஜகாத் எனும் தர்மத்தின் மூலம் கடனை அடைப்பதற்கு வழி வகை செய்கின்றது.

இந்தியாவில் ஜகாத் வழங்கும் முறை அனைவராலும் பின்பற்றப்பட்டால் இது போன்ற வட்டிச் சாவுகளும் பட்டினிச்சாவுகளும் ஒரு போதும் நிகழாது.

அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அரசாங்கத்தில் நினைவுச் சின்னங்கள், நினைவுச் சிலைகள் அமைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இன்று இந்திய அரசாங்கம் இதுபோன்ற அனாச்சார செலவுகளைத் தடுத்து, வட்டி போன்ற சமூகக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சாவிலிருந்து தடுக்கலாம்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்து தலை வெடித்து சாகின்றான். ஆனால் மோடியோ சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மூவாயிரம் கோடி ரூபாயில் சிலை வடித்துக் கொண்டிருக்கின்றார். என்ன முரண்பாடு? இது இந்தியாவின் சாபக் கேடாகும்.

இதுபோன்ற அவல நிலை தொலைய வேண்டுமாயின் அதற்குத் தீர்வு இஸ்லாம் மட்டும் தான். இதைத் தவிர்த்து இந்தியாவிற்கு வட்டி முதல் அனைத்து தீமைகளையும் களைய வேறு வழியில்லை என்பதை உரத்துச் சொல்லிக் கொள்கின்றோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed