வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள்

மனித குலத்திற்கு அருளாகவும் நேரிய வழிகாட்டியாகவும் அருளப்பட்ட திருக்குர்ஆன் மனிதனை வாட்டும் வட்டி குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் செய்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன்:(3:130)

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன்:(2:277)

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.

அல்குர்ஆன்: (4:160, 161, 162)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.

அல்குர்ஆன்:(2:278-280)

வட்டியை உண்ணக்கூடாது.

அது இறையச்சமுள்ள ஒருவனுக்கு அழகல்ல.

இறைவனை அஞ்சுபவன் வட்டியிலிருந்து விடுபட வேண்டும்.

வட்டியை விட்டவனே மறுமையில் வெற்றி பெறுவான்.

வட்டி அழிவைத்தரும். தர்மங்கள் அருளைத் தரும்.

வட்டி வாங்குபவன் நன்றி கெட்ட பாவியாவான்.

வட்டிக்குக் கடன் கொடுத்து மக்களை வாட்டிய யூத சமுதாயம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தார்கள்.

ஒருவன், இறைவனை நம்புவது உண்மை எனில் அவன் கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதையும் மீறி வட்டி வாங்கினால் அவன் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் எதிராகப் போர் புரிகிறான்.

இறைவனுக்கு எதிராக யுத்தம் செய்பவன் அழிந்தே போவான்.

இவ்வாறு பல்வேறு அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இறைவன் விடுத்துள்ளதை அறிய முடிகிறது.

இறைவனின் பலமான எச்சரிக்கைகளை எடுத்துரைத்ததன் மூலம் வட்டியிலிருந்து அந்த மக்களை நபிகளார் மீட்டார்கள்.

திருக்குர்ஆனின் போதனையின் விளைவாக முஸ்லிம் சமுதாயம் வட்டி எனும் புற்று நோயில் மடிந்து விடாமல், மாட்டிக் கொள்ளாமல் பெருமளவில் தப்பித்து வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைவரும் திருக்குர்ஆனின் போதனைகளை உணர்ந்து வட்டியை ஒழித்து, வளமான வாழ்வைப் பெறுவோமாக! இன்ஷா அல்லாஹ்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *