வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா?

வங்கிகளில் நாம் பணத்தைச் சேமித்து வைக்கிறோம். பணத்தைப் பாதுகாக்கவும், எளிதில் பணப்பரிமாற்றச் செய்யும் வசதிக்காகவும்தான் நாம் வங்கிகளில் பணத்தைச் சேமிக்கிறோம். ஆனாலும் நாம் விரும்பாவிட்டாலும் வங்கிகள் நம் கணக்கில் வட்டியை வரவு வைக்கின்றனர். இந்த வட்டியை நாம் வாங்கிக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

அந்தப் பணத்தை வாங்கி நன்மையை எதிர்பாராமல் ஏழைகளுக்குக் கொடுத்து விடவேண்டும். அல்லது கழிப்பறை கட்டுதல் போன்ற காரியங்களுக்காக செலவிட வேண்டும் என்பதுதான் அதிகமான அறிஞர்களின் முடிவாக உள்ளது.

ஆனால் இம்முடிவு பல காரணங்களால் தவறாகனதாலத் தெரிகிறது.

கழிப்பறை கட்டுவதற்காக ஹராமான பணத்தைப் பயன்படுத்தலாம் என்ற சட்டத்தை எங்கிருந்து பெற்றார்களோ தெரியவில்லை. உணவுக்காகச் செய்யப்படும் செலவு எப்படி ஹலாலாக இருக்க வேண்டுமோ அதுபோல் கழிப்பறை கட்டும் செலவும் ஹலாலாக இருக்க வேண்டும். ஆடைகளுக்காகச் செய்யப்படும் செலவு எப்படி ஹலாலாக இருக்க வேண்டுமோ அது போல் செருப்பு வாங்கும் செலவும் ஹலாலாக இருக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிப்படையாகும். இந்த அடிப்படைக்கு மாற்றமாக இவர்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.

அல்லாஹ் நமக்கு ஒன்றை ஹராமாக ஆக்கிவிட்டால் அதை  நாமும் பயன்படுத்தக் கூடாது. மற்றவருக்கும் கொடுக்கக் கூடாது. நமக்கு பன்றி ஹராம் என்றால் மற்றவருக்கு பன்றிக்கறி பிரியாணி செய்து கொடுக்க முடியாது. இந்த அடிப்படைக்கு மாற்றமாகவும் இவர்களின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

அடுத்தவருக்கு நாம் கொடுக்கலாம் என்றால் அதை நாமே வைத்துக் கொள்ளலாம். மற்றவருக்குக் கொடுக்க அனுமதிக்கப்பட்ட எந்த ஒன்றையும் நாமே வைத்துக் கொள்ளவும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. இந்த அடிப்படைக்கு மாறாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

திருடக் கூடாது என்று மார்க்கம் தடுத்துள்ளது. நாம் திருடி விட்டு அதை ஏழைகளுக்குத் தர்மம் செய்தால் திருடிய குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?

நாம் வாங்காவிட்டால் அந்தப் பணத்தை நமக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படும் காரணமும் ஏற்கத்தக்கதல்ல. நம்முடைய பணத்தைக் குறித்துத்தான் நாம் இப்படி கவலைப்பட வேண்டும். வட்டி என்பது மார்க்க அடிப்படையில் நம்முடைய பணமே அல்ல. நாம் சேமிப்பில் செலுத்திய பணம் மட்டுமே நம்முடைய பணமாகும். நமக்கு உரிமையில்லாத பணத்தை யார் எப்படி பயன்படுத்தினாலும் நாம் அதுபற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

வங்கியில் தரப்படும் வட்டியை நாம் வாங்கி நாமே வைத்துக் கொண்டாலும் மற்றவருக்குக் கொடுத்தாலும் நாம் வட்டி வாங்கிய குற்றத்தைச் செய்தவர்களாக ஆகிவிடுவோம் என்பதுதான் சரியான கருத்தாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *