ரமலான் நம்மைப் பண்படுத்தியதா?

அல்லாஹ்வின் பேரருளால் இந்த வருட ரமலான் மாதம் வந்ததே தெரியாத அளவுக்கு மிக வேகமாக நம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. காலங்கள் செல்லச்செல்ல அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு வருடந்தோறும் ரமலான் மாதம் வருவதும் போவதுமாக இருந்து வருவதைப் பார்க்கின்றோம்.

அதே சமயம் முஸ்லிம்களில் சிலரிடம், அற்புதமான புனிதம் நிறைந்த ரமலான் மாதம், அருள் பொங்கும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம், நம்முடைய பாவங்களை எல்லாம் கழுவி சுத்தப்படுத்த வந்த ரமலான் மாதம் நம்மை விட்டும் இவ்வளவு அவசரகதியாகப் பிரிந்து சென்று விட்டதே என்ற வருத்தமும், ஏக்கமும் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

உண்மையிலேயே சொல்வதென்றால், ரமலான் மாதம் நம்மை விட்டுப் பிரிந்து சென்றதில் நாம் அடையக்கூடிய கவலையையும், வேதனையையும் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

ஆனாலும், இந்த ரமலான் மாதம், கிட்டத்தட்ட ஒருமாத காலம் நமக்கு ஏராளமான பாடத்திட்டங்களையும், படிப்பினைகளையும், அறிவுரைகளையும், போதனைகளையும் கற்றுத் தந்துவிட்டு நம்மைப் பிரிந்திருக்கின்றது.

ரமலான் மாதம் குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் மூலமாகவும் நமக்கு என்னென்ன போதனைகளை எல்லாம் பாடமாக நடத்தியதோ, அப்படிப்பட்ட உபதேசங்களை ஏனைய மாதங்களிலும், இன்னும் சொல்வதாக இருந்தால் நம்முடைய வாழ்நாள் முழுக்கக் கடைபிடிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இப்படிப்பட்ட மகத்தான ஒரு சபதத்தைத் தான் ரமளானுக்குப் பிறகு நாம் அனைவரும் எடுக்க வேண்டும் என்பதே ரமலான் மாதம் நம்மிடத்திலே விட்டுச் சென்ற செய்தி ஆகும்.

தொடரட்டும் இறையச்சம்

ரமலான் மாதம் முழுக்க முழுக்க இறையச்சத்தால் சூழப்பட்டு, ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் நன்மையான காரியங்களை அதிகமதிகம் செய்தவர்களையும், பாவமான காரியங்களிலிருந்து விலகி இருந்தவர்களையும் பார்க்க முடிந்தது. இப்படிப்பட்ட மகத்தான இறையச்சம் நம்முடைய வாழ்க்கை முழுக்கத் தொடர வேண்டுமானால், ரமளானில் எப்படி இறைவனுக்குப் பயந்து நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டோமோ அதுபோன்ற வாழ்க்கைப் பயணம் ஏனைய மாதங்களிலும் தொடர வேண்டும்.

இந்த ஒருமாத காலம் நன்மையான காரியத்திற்கும், இறையச்சத்திற்கு நெருக்கமான காரியங்களிலும் நம்முடைய உடலுதவி, பொருளாதார உதவி இன்னும் பல்வேறு விதமான செயல்பாடுகளின் மூலம் எவ்வாறு உதவி செய்து வந்தோமோ அதுபோல, வாழ்க்கை முழுவதும் இந்தப் பரிசுத்தமான செயல்களை அல்லாஹ்வை அஞ்சுவோரால் மட்டுமே செய்ய முடியும்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்:5:2)

ரமலான் மாதத்தில் எவ்வாறு அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து பாவமான காரியங்களிலும், வரம்பு மீறுகின்ற காரியங்களிலும் உதவி செய்வதை விட்டு வெறுத்து ஒதுங்கினோமோ அதுபோன்று, இறையச்சத்தைப் பாடமாகக் கற்றுக்கொண்ட நாம் ஏனைய மாதங்களிலும் பாவமான காரியங்களில் உதவி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்;

இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.

(அல்குர்ஆன்:78:31-34)

ஒரு மாதத்தோடு இறையச்சம் புதைந்தும், மறைந்தும் விடாமல் வாழ்க்கை முழுவதும், நாம் மரணிக்கின்ற வரைக்கும் இறையச்சத்தோடு வாழ்ந்தால், சொர்க்கத்தில் மகத்தான வாழ்க்கை இருக்கின்றது என்று இறைவன் வர்ணிக்கின்றான்.

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்;

துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் கருக மாட்டார்கள்.

அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.

இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப் படுவார்.

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.

மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.

பின்னர் அவர் திருப்தியடைவார்.

(அல்குர்ஆன்:92:17-21)

இறையச்சத்தோடு தன்னுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒவ்வொருவரும் நரகத்திலிருந்து விலக்கப் படுவார்கள் என்றும், அவர்கள் தன்னைப்படைத்த அல்லாஹ்வின் திருமுகத்தைத் தேடி அலைவாரே தவிர, வேறு எந்த நன்றிக்கடனையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.

இன்னும், இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன்:65:2,3)

அல்லாஹ்வை அஞ்சியவராகத் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோருக்கு கண்ணியமான ஒரு இடம் இருக்கின்றது என்றும், அறியாப் புறத்திலிருந்து அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்றும் இறைவன் ஆழமாகப் பதிய வைக்கின்றான்.

நாமெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது ஒரு குறிப்பிட்ட மாதம் நல்லமல்களையும், வணக்க வழிபாடுகளையும் செய்து விட்டு, அத்தோடு மூட்டை கட்டி வைப்பதற்குப் பெயர் இறையச்சம் அல்ல. இறையச்சம் என்பது வாழ்க்கை முழுவதும் நல்லமல்களும், வணக்க வழிபாடுகளும் தொடர்ச்சியாகச் செய்து வருவதும், தவறான காரியங்கள் செய்வதிலிருந்து விலகி இருப்பதுமே ஆகும்.

எனவே, ரமளானில் நம்மிடத்தில் ஆழமாகப் பதிக்கப்பட்ட இறையச்சம் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் நம்மிடத்தில் பிரதிபலித்தால் இவ்வுலகிலும், மறுமையிலும் மகத்தான வாழ்க்கையில் நாம் இருப்போம் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.

தொடரட்டும் தொழுகை

நம்மில் பெரும்பாலானோர் ரமலான் மாதத்தில் ஐந்து நேரத் தொழுகையை மிகச் சரியாக ஜமாஅத்தோடு தொழுது வந்திருப்போம். ஆனால் ரமலான் முடிந்ததற்குப் பிறகு அப்படியே நமக்கு நாமே இழப்பைத் தேடிக் கொண்டு, ஐவேளைத் தொழுகையை கோட்டை விட்டு விடுவதைப் பார்க்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகையைத் தொழுதால் நாம் அடைகின்ற நன்மைகள் ஏராளம்! ஏராளம்!

தொழுகையை நிலைநாட்டுவோருக்கு ஏராளமான பதவிகளும், கண்ணியமும் மறுமையில் இருக்கின்றது. கூடுதலாக இறைவனின் மன்னிப்பும் இருக்கின்றது என்றும் இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான்.

அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்களே உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

(அல்குர்ஆன்:8:3,4)

ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜும்ஆ முதல் அடுத்த ஜும்ஆ வரை, ஒரு ரமலான் முதல் அடுத்த ரமலான் வரை நாம் செய்த பெரும் பாவங்களைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமாளான் ஆகியன அவற்றுக் கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.

ஆதாரம்: முஸ்லிம் 396

ஐவேளைத் தொழுகையை தொடர்ச்சியாகத் தொழுது வருகின்ற ஒவ்வொருவரும் மகத்தான கூலியைப் பெற முடியும்.

ஒரு நாளில் தொழுவோருக்கே இவ்வளவு மகத்தான நன்மை கிடைக்கின்றது என்று சொன்னால், இறைவனுக்கு அஞ்சி ஒவ்வொரு நாளும் தொழுதால் விசாலமான, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குண்டான நன்மையை அல்லாஹ் வாரி வாரி வழங்குகின்றான்.

ஐவேளைத் தொழுகையை முறையாக, உள்ளச்சத்தோடு தொழுது வருகின்ற ஒவ்வொருவருக்கும் சொர்க்கம் கட்டாயம் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவாதம் வழங்குகின்றார்கள்.

“ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.

ஆதாரம்: முஸ்லிம் 397

மேலும், தொழுகை நேரான பாதைக்கு வழிகாட்டும் ஒளி என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும்.

ஆதாரம்: முஸ்லிம் 381 (ஹதீஸ் சுருக்கம்)

தொழுகையில் நாம் செய்து வருகின்ற காரியங்களுக்கு ஏராளமான நன்மைகள் அல்லாஹ்வின் தூதரால் நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்கின்றது. கூடுதலாக ருகூவு மற்றும் ஸுஜூது போன்ற நிலைகளுக்கு பிரமிக்க வைக்கின்ற அபரிமிதமான கூலியை அல்லாஹ் தருவதாக நபி (ஸல்) அவர்கள் நமக்குப் பாடம் நடத்துகின்றார்கள்.

ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள் புஜத்தின் மீது வைக்கப்படுகின்றது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப்பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன். என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஆதாரம்: அஹ்மத், இப்னுஹிப்பான் 1734

ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைகளை நாம் முறையாகத் தொழுது வந்தால் ஒவ்வொரு நேரத் தொழுகைகளிலும் நாம் செய்த பாவங்கள் நம்முடைய உடலிலிருந்து உதிர்ந்து கீழே விழுந்து, பாவம் கலவாத மனிதர்களாக நாம் மாறி விடுகின்றோம்.

ஒவ்வொரு நேரத் தொழுகையையும் தொழும் போதும், இந்த இரண்டு நிலைகளில் நாம் ஈடுபடுகின்ற நேரத்தில் நம்முடைய பாவங்கள் அனைத்தும் இப்போது நம்முடைய மேனியில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விட்டது, நம்முடைய பாவங்கள் உதிர்ந்து போகப்போகின்றது என்ற ஆனந்தத்தோடும், மகிழ்ச்சியோடும் நம்முடைய தொழுகையை நிறைவேற்றினால் பாவம் கலவாத மனிதர்களாக, தொழுகை நம்மை மாற்றி விடும்.

தொடரட்டும் கியாமுல்லைல்

ரமலான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு அதிகப்படியான நேரங்கள் இரவில் தொழுகின்ற கியாமுல்லைல் தொழுகைக்காக நேரத்தை ஒதுக்கித் தொழக்கூடியவர்களாக இருந்து வந்தோம். ஆனால் ரமலான் மாதம் முடிந்து விட்டால் இரவுத் தொழுகையையும் சேர்த்து மூட்டை கட்டி விடுவதைப் பார்க்கின்றோம்.

இந்த கியாமுல்லைல் தொழுகைக்கு ஏராளமான சிறப்புகளையும், மகத்துவத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.

ஆதாரம்: முஸ்லிம் 2157

கடமையான தொழுகைக்குப் பிறகு இறைவனிடத்தில் மிகச்சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும். இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த இரவுத்தொழுகையை ஏனைய மாதங்களிலும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

‘மனிதர்களே! நீங்கள் உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள், உணவும் கொடுங்கள், இன்னும் மனிதர்கள் உறங்கும் வேளையில் தொழுவீர்கள் என்றால் சுவனத்தில் சாந்தியுடனும், சமாதானத்துடனும் நுழைவீர்கள்’

ஆதாரம் : அஹ்மத் 15456

நிம்மதியாக சுவனத்தில் நுழைய வேண்டுமானால், மக்கள் உறங்குகின்ற நேரத்தில் எழுந்து தொழ வேண்டும் என்றும் நமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டித் தந்திருக்கின்றார்கள். சொர்க்கத்தில் எளிமையாக நுழைய வேண்டும் என்ற வெறியுடன் ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகையை நிறைவேற்றி வந்தது போல, எல்லா மாதங்களிலும் சபதமேற்று இரவுத்தொழுகையை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இரவில் தொழும் தொழுகையை சில நாட்கள் தொழுதுவிட்டு, கைவிட்டவரைப் போன்று நீங்கள் ஆகி விடாதீர்கள் என்று ஒரு தோழரைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்து, இரவுத்தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்! இன்னாரைப் போன்று நீரும் ஆகிவிடாதீர்! இரவில் தொழும் வழக்கமுடைய அவர் அதை கைவிட்டுவிட்டார்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 1152

இனிவரும் காலங்களில் சபதம் ஏற்று, ரமலானுக்குப் பிறகும் இரவுத்தொழுகையை தொடர்ச்சியாகத் தொழுது வருவதற்கு அதிகமான முயற்சிகளை மேற்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இரவின் கடைசி நேரத்தில் வித்ருத் தொழுகையை நிறைவேற்றினால் வானவர்கள் பங்கேற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம் 1381)

இந்த அற்புதமான வாய்ப்பை ஒருகாலத்திலும் நாம் இழந்து விடக்கூடாது.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ரமலான் மாதம் முடிந்து விட்டால் இரவுத்தொழுகையையும், வித்ருத் தொழுகையையும் ரமளானோடு முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றோம். இந்த அமல்கள் செய்யும் விஷயத்தில் நாம் ரமளானில் அடைந்த நன்மைகளை, எல்லா மாதங்களிலும் செயல்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரட்டும் வணக்கவழிபாடு

அல்லாஹ்வின் கிருபையால் ரமலான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு தம்முடைய உள்ளத்தையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொண்டு பொய்யான காரியங்களில் ஈடுபடுவதிலிருந்தும், அவதூறுகளை அள்ளித் தெளிப்பதிலிருந்தும் தவிர்ந்து, நாவுகளால் இறைவனைத் தியானிக்கின்ற திக்ருகளை அதிகமதிகம் செய்து வந்தவர்களாகக் கழித்து வந்தோம்.

ஏனைய மாதங்களிலும் இதுபோன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவதை விட்டும், அடுத்தவர்களின் மான, மரியாதை விஷயங்களில் விளையாடுவதை விட்டும், இல்லாத அவதூறுகளை அள்ளித் தெளிப்பதை விட்டும் தவிர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இதுபோன்ற இழிவான காரியங்களில் நாம் ஈடுபடும்போது நாம் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த நன்மைகளையும் மறுமையில் இழந்து நிற்கதியாக நிற்க வேண்டிய சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும் என்பதை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.

ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 5037

நாம் ஒருவரை அநியாயமாகத் திட்டிய காரணத்தினால், அவதூறு பரப்பியதன் காரணத்தினால் இன்னும் பல்வேறு வகையான கேடுகளைச் செய்ததன் காரணத்தினால் நம்முடைய நன்மைகள் அனைத்தும் பிற மனிதர்களுக்குப் பங்கு வைக்கப்பட்டு, நம்மிடம் நன்மைகள் முடிந்து விட்டால் பிறருடைய தீமைகள் நம்முடைய தலையில் கொட்டப்படுகின்ற அவலநிலை மறுமையில் ஏற்படும். இந்தப் பேரிழப்பு தேவை தானா? என்று ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நாம் ரமளானில் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த நன்மைகளையும் இழப்பதற்குண்டான வேலைகளில் ஈடுபடாமல், கேவலமான, அருவருக்கத்தக்க காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள, இறைதியானத்தில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும். நன்மைகளை வாரிச் சுருட்டுகின்ற திக்ருகளை ரமலான் மாதத்தில் அதிகமதிகம் செய்து வந்தது போல, இன்ஷா அல்லாஹ் ஏனைய மாதங்களிலும் செய்ய வேண்டும் என்ற சபதத்தை எடுத்துக் கொள்வோம்!!

ரமளானில் பெற்ற படிப்பினைகள்:

  • தினமும் ஐவேளைத் தொழுகையை கட்டாயம் தொழ வேண்டும்.
  • உள்ளத்தையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • குர்ஆனோடு தினமும் தொடர்பில் இருக்க வேண்டும்.
  • தான, தர்மங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும்.
  • திக்ருகளை அதிகமதிகம் செய்ய வேண்டும்.
  • வீண் தர்க்கம் மற்றும் வீண் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது.
  • ஜகாத்தை ஏழைகளுக்கு வழங்கி உதவி செய்ய வேண்டும்.
  • பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாமல் மௌனம் காக்க வேண்டும்.
  • ஹராமான காரியங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
  • சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன சாதனங்களை அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed