யூசுஃப் நபியும் படிப்பினையும்

இன்றைய காலத்தில் வழிகேட்டில் வீழ்வதற்கான வாய்ப்புகள் விசாலமாகக் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, தனித்து இருக்கும் போது பாவங்களில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் தேடிவந்து அமையும். அதற்கான சிந்தனைகளை ஷைத்தான் அடிக்கடி தூண்டுவான். அப்போது அல்லாஹ்வை அஞ்சி சுதாரித்துக் கொள்ள வேண்டும். இந்தப் படிப்பினை யூசுஃப் நபி வாழ்வில் நமக்கு இருக்கிறது.

யூசுஃப் நபியை வளர்த்த மன்னனின் மனைவியே அவரைத் தவறான செயலுக்கு அழைக்கிறாள். அரண்மனை மாளிகையில் யாரும் இல்லாத தருணம். ஒருவேளை தவறு இழைத்தாலும் யாருக்கும் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும், யூசுஃப் நபி அல்லாஹ்வை                                     அஞ்சினார்கள். அவனிடம் உதவி தேடினார்கள். மனிதன் எனும் அடிப்படையில் மனதில் கெட்ட சலனம் ஏற்படும் போது படைத்தவன் அருளால் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து வா!என்றாள். அதற்கவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்’’ எனக் கூறினார். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

திருக்குர்ஆன் 12:23, 24

நவீன தொடர்பு சாதனங்களும் இணையதள பயன்பாடும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் யாருக்கும் தெரியாத வகையில் பல்வேறு அழிச்சாட்டியங்கள் நடக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் மூலம் மஹ்ரமாக இல்லாதவர்களுடன் மணிக்கணக்காக காம அரட்டை அடிக்கிறார்கள். ஒழுக்க நெறிகளைத் துறந்துவிடுகிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம், நான்கு சுவருக்குள் இருந்தாலும் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் அச்சம் இல்லாததே ஆகும். இம்மாதியான மக்கள் திருந்திக் கொள்வதற்கு யூசுஃப் நபியிடம்  அழகிய முன்மாதிரி இருக்கிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *