யார் நல்ல நண்பன் – யார் கெட்ட நண்பன்

ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான்.

‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.

நூல்: புகாரி 2101

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறுமை வாழ்கையை தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் ‘உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’ என்று விசாரிப்பார்கள். ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’ எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.

அல்குர்ஆன் (74:45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்மை பாதுகாத்து விடுவான். நட்பு என்பது இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு மறுமையில் பெரும் நன்மையையும் பெற்றுத் தருகிறது.

தீமையான காரியங்களில் நண்பனுக்காக ஒத்துப் போவது கூடாது. ஆனால், இன்றைய நிலையில் நண்பர்கள் தீமையை செய்தாலும் அதை தட்டிக் கொடுப்பவர்களாக தான் இருக்கிறார்கள்.

நண்பன் நன்மையான காரியங்களை செய்ய மறந்து விட்டால், உண்மை நண்பன் அவனுக்கு நினைவூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்துவிட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் திருக்குர்ஆன், நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் (5:2)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (9:71)

பெரும்பாலான நண்பர்கள் வீணாக பேசுவது ஊர் சுத்துவது தியேட்டருக்கு செல்வது போன்ற தீய காரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகிவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.

நூல்: அபூதாவூத் 4061

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.

நூல்: முஸ்லிம்  4655

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடிவிடுவார்கள். புயல்காற்று வரும் போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்று நமக்கு தெரிகிறது. அது போல் நல்ல நண்பனை அறிய நமக்கு வரும் சோதனைகள் சிறந்த அளவுகோலாக பயன்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில்

அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.

நூல்: புகாரி 2442

அல்லாஹ்விற்காக நேசம் கொள்வோம்! ஈருலகத்தில் வெற்றி அடைவோம்!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *