மோசடி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றலாமா?

வியாபாரத்தில் பொய் சொல்வதும் அளவு நிறுவையில் மோசடி செய்வதும் இஸ்லாத்தில் வன்மையாக்க் கண்டிக்கப்பட்ட பாவங்களாகும். இந்தப் பாவத்தைச் செய்யுமாறு யார் கூறினாலும் அதை நாம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் செய்யச் சொன்னவரும் செய்தவரும் இருவருமே பாவிகளாகி விடுவார்கள்.

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4)83

1. அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அல்குர்ஆன் (83 : 1)

என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!” (என்று ஷுஐப் கூறினார்)

அல்குர்ஆன் (11 : 87)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (33)

அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (171)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்; அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார்.

இறுதியில் அல்லாஹ்விடம் “வாய்மையாளர்’ (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். பொய் பேசாதீர்கள்.

பொய் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார்; அதைத் தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் “பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் (5083)

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாதவரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 2936

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, “இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6177

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) “உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது” என்று கூறினார். அதற்கு அவர்கள், “மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!” என்று கூறினார்கள்..

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 164

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அ

தற்கு அவர்கள், “யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)” என்று கூறினார்கள்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ் யாரெனில், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) இவனைப் பற்றி இட்டுக்கட்டியிருப்பான். இவனைத் திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான்.

எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் இவர்களுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4678

இந்த பாவத்தை செய்தால் தான் கம்பெனியில் வேலை செய்ய முடியும் என்றால் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடும் முயற்றியில் ஈடுபட வேண்டும்.

சவூதி போன்ற நாடுகளில் பணியாற்றுவதால் நினைத்த நேரத்தில் வேலையை விட்டு விலக முடியாத நிலை இருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சியில் இப்போதே இறங்கினால் உங்கள் செயல் நிர்பந்த்த்தில் அடங்கும். எவ்வித முயற்சியும் செய்யாமல் அதில் நிலைத்திருந்தால் அந்தப் பாவத்தில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும். மேற்கண்ட மார்க்கத்தின் எச்சரிக்கைகளை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *