மூடப்பழக்கங்கள் முற்றுப் பெறட்டும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பாதங்களுக்குக் கீழ் போட்டுப் புதைத்த மடமைக் காரியங்கள் இன்றளவும் நம்மவர்களிடம் குடிகொண்டிருக்கின்றன.

சகுனம்

பெண்களை ஆட்கொண்டிருக்கும்  விஷயங்களில் முக்கியமானது சகுனம் பார்ப்பது தான். அறியாமை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் சகுனம் பார்ப்பதில் கல்வி அறிஞர்கள், பாமரர்கள் என எவரும் விதிவிலக்கு பெறுவதில்லை.

  1. வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் நினைத்த காரியம் தடைபட்டு விடும்.
  2. வெற்றுக்குடம் இருக்கும் போதும், விதவைப் பெண்கள், அந்தஸ்தில் தாழ்ந்தவர்கள் முன்னிலையிலும் வெளியே செல்வதை துற்சகுனமாகக் கருதுவது.
  3. பல்லி கத்தினால் நல்லது, அது மேலே விழுந்துவிட்டால் சாவு விழும் என்ற நம்பிக்கை.
  4. வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தாளி வருவார்கள்.
  5. ஒரு வீட்டிற்கு முன் சாக்குருவி கத்தினால் அங்கே மரணம் நிகழப்போகிறது.
  6. கை அரித்தால் வீட்டிற்குப் பணம் வரும்.
  7. வலது கண் துடித்தால் நல்லதும், இடது கண் துடித்தால் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை.
  8. மஃரிப் நேரத்தில் தண்ணீர் உட்பட நம் வீட்டிலுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் எவருக்கும் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது அவ்வாறு செய்தால் நம் வீட்டிலுள்ள அபிவிருத்தி நம்மை விட்டு போய் விடும் என்ற நம்பிக்கை.

இது போன்ற எண்ணிலடங்கா மடமைகள் நம் தாய்மார்களின் மனதில் அசைக்க முடியாதவாறு அச்சாரமிட்டு அமர்ந்திருக்கின்றன. சகுனம் பார்ப்பதின் காரணிகள் வேண்டுமானால் இடத்திற்கு இடம் மாறுபடலாமே தவிர பெண்களின் மனநிலையில் எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை.

சிறிய, பெறிய எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சகுனம் பார்ப்பதைக் கைவிடுவதில்லை நம் சகோதரிகள். ஆனால் இஸ்லாம்  இதை முற்றிலுமாகத் தகர்த்தெறிகிறது.

இதோ நம் தூய மார்க்கம் சொல்வதைக் கேளுங்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது, பறவை சகுனம் கிடையாது. ஸபர் (பீடை) என்பது கிடையாது.   ஆந்தையால் சகுனம் பார்ப்பது கிடையாது.

நூல்: முஸ்லிம் 4465

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. ஆந்தை பற்றிய (மூட) நம்பிக்கையும் இல்லை. நட்சத்திர இயக்கத்தால் தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது.

நூல்: முஸ்லிம் 4469

 

அறியாமைக்குத் தாழிட்டுவிட்டு அறிவிற்கு வேலை கொடுப்போம், இஸ்லாமியர்களாகவே வாழ்ந்து இஸ்லாமியர்களாகவே மரணிப்போம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed