யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கிறார்கள். தமது சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளும் விஷயத்துக்கு மட்டும் தமது தந்தை யாகூப் நபியின் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தினார்கள் என்றும், மற்ற விஷயங்களில் தமது மன்னரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் இவ்வசனங்களில் (12:74-76) கூறப்படுகிறது.
யூஸுஃப் நபியவர்கள் எகிப்து நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தும் பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் சொந்த நாட்டில் அவர்களின் தந்தை யாகூப் நபியவர்கள் மூலம் அல்லாஹ் வழங்கிய சட்டம் இருந்தும் அதை எகிப்தில் செயல்படுத்தாமல் எகிப்து நாட்டின் சட்டத்தையே செயல்படுத்தி வருகிறார்கள்.
தமது நாட்டில் உள்ள சட்டத்தைக் கடைப்பிடித்தால் தன்னுடைய சகோதரரைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காக அவர் விஷயத்தில் மட்டும் தனது சொந்த நாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்கிறார்கள் என்ற விபரம் இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
தமது சகோதரர்களிடம் “உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன?” என்று கேட்கிறார்கள். “அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை” என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
“மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது” என்ற வாசகத்தில் இருந்து இதை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத்தான் யாகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.
எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.
அல்லாஹ்வின் அரசியல் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும்போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம் பொதுமக்கள் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படும் நிலையைச் சந்திக்கிறார்கள். அந்த ஆட்சியின் கீழ் ஊழியராகவோ, அல்லது அதிகாரியாகவோ முஸ்லிம்கள் நியமிக்கப்படலாம். அப்போது அவர்கள் இஸ்லாமியச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த நாட்டின் சட்டப்படியே நடவடிக்கை எடுக்க முடியும்.
உதாரணமாக நீதிபதியாக இருக்கும் முஸ்லிமிடம் ஒருவனின் திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது கையை வெட்ட வேண்டும் என்று அவர் தீர்ப்பளிக்க முடியாது. அந்த நாட்டில் இதற்கு என்ன தண்டனையோ அதைத் தான் அவரால் அளிக்க முடியும்.
இப்படிச் செய்வது மார்க்கத்தில் குற்றமாகுமா என்றால் குற்றமாகாது. இஸ்லாமிய அரசு அமைந்தால் தான் இஸ்லாமியச் சட்டம் குறித்து அல்லாஹ் கேள்வி கேட்பான். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் அந்த நாட்டுச் சட்டங்களுக்கு கட்டுப்படுவதோ, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோ குற்றமாகாது.
இந்த அடிப்படையை மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.