முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா?

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை இரண்டு வகைகளில் உள்ளன. ஒரு வகையான தடை முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை.

மற்றொரு வகை முஸ்லிமுக்கு மட்டும் தடுக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்கள் செய்தால் தடுக்காமல் விடப்படுபவை.

மது அருந்துவது முஸ்லிமுக்குத் தடை செய்யப்பட்டது போலவே இஸ்லாமிய அரசில் முஸ்லிமல்லாதவருக்கும் இது தடை செய்யப்பட்டதாகும்.

முஸ்லிமல்லாதவர் மது அருந்தினாலும் விற்பனை செய்தாலும் அது இஸ்லாமிய அரசில் தடுக்கப்படும். அதே நேரத்தில் பட்டாடை அணிவது முஸ்லிம் ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிமல்லாத ஆண்களுக்கு இது தடை இல்லை. எனவே பட்டாடையை முஸ்லிமல்லாத ஆண்களுக்கு விற்பனை செய்யலாம்.

வட்டி, விபச்சாரம், மது, சூது, மோசடி, லஞ்சம், திருட்டு, கொலை, மற்றும் அனைவருக்கும் கேடு விளைவிப்பவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்றால் இஸ்லாமிய அரசில் முஸ்லிமல்லாதவருக்கும் அது தடை தான். முஸ்லிமல்லாதவருக்காக மட்டும் ஒருவர் விபச்சார விடுதி நடத்துவது எவ்வாறு குற்றமோ அது போல் வட்டிக்கு விடுவதும், வட்டிக்கு வாங்குவதும் முஸ்லிமல்லாதவருக்கும் தடுக்கப்பட்டது தான்.

886 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடு போட்டபட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்ளலாமே! என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர் தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள்.

பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடு போட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே! என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன் பெற்றுக் கொள்ளவே நான் வழங்கினேன்) என்று கூறினார்கள்.

ஆகவே, உமர்பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணை வைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்து விட்டார்கள். இந்த அடிப்படையில் தான் தமக்குக் கிடைத்த பட்டாடையை முஸ்லிமல்லாத தன் சகோதரருக்கு உமர் ரலி வழங்கினார்கள்.

நூல்: புஹாரி 886

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed