முன்மாதிரித் தூதர் கூறிய முன்னுதாரணங்கள்

இன்று மக்கள் தங்களுடைய தலைவர்களாக சிலரை ஏற்படுத்தி, அவர்கள் சொல்லும் கருத்திற்கேற்பத் தான் நாங்கள் செயல்படுவோம் என்று கூறுகிறார்கள்.  ஆனால் இந்த உலகத்தில் உத்தமத் தூதர் நபிகள் நாயகத்திற்கு இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்படுவது போல் உலகில் எந்தச் சமூகமும் எந்தத் தலைவருக்கும் கட்டுப்படவில்லை என்று அறைகூவலாகக் கூட நம்மால் சொல்ல முடியும்.

நபிகளாருக்கு மட்டும் ஏன் இந்த அந்தஸ்து?  இதற்கான விளக்கத்தை இறைவன் தன்னுடைய திருமறையில் பதிவு செய்கிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு இந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

குர்ஆன் 33:21

இந்த வார்த்தை தான் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்  கட்டுப்படுதல் என்ற கயிற்றால் கட்டிப் போட்டிருக்கிறது.  அதே போல் இத்தூதர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மார்க்கச் சட்டத்தைக் கற்றுத் தருகிறது என்று இறைவன் கூறுகிறான்.

இந்தத் தூதர் தன்னுடைய மனோஇச்சைப்படி பேசமாட்டார். இவர் பேசுவதெல்லாம் அறிவிக்கப்படும் இறைச்செய்தியைத் தவிர வேறில்லை

குர்ஆன் 53:4,3

இந்த இறைவசனத்தை நாம் கவனிக்கும் போது மார்க்கம் தொடர்பாக இறைத்தூதர் அவர்கள் பேசும் அத்தனை வார்த்தைகளிலும் பல வானுயர்ந்த அர்த்தங்கள் உண்டு என்பதை அறியலாம். அத்தகைய தன்மை கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை சில உதாரணங்களைக் கொண்டு விளக்குவார்கள்.

இந்த முன்மாதிரித் தூதர் கூறிய முன்னுதாரணங்களை எடுத்துச் சொல்வதே இந்த தொடரின் நோக்கம்.

பசுமையான மரமே  படைத்தோனை  நம்பியவரின் உதாரணம்

இப்னு உமர் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதனுடைய இலைகள் உதிர்வதில்லை. அதன் இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில்லை  என்று நபியவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள் அது இன்ன மரம்; அது இன்ன மரம் என்றார்கள்.  அது பேரீச்சைமரம் தான் என்று சொல்ல நான் நினைத்தேன். நான் இள வயதுடையவனாக இருந்ததால் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லாமல் இருந்தேன். அப்போது  நபி (ஸல்) அவர்கள்  அது பேரீச்சை மரம் என்றார்கள்.

நூல்: புஹாரி  6122

பேரீச்சை மரத்தின் இலைகள் மற்ற மரத்தினுடைய இலைகள் போல் உதிர்வது கிடையாது. இது போல் தான் ஈமான் கொண்டவரின் உள்ளத்தில் அந்த நம்பிக்கை உதிராமல் இருக்க வேண்டும் என்று இறைத்தூதர் அவர்கள் விளக்கினார்கள்.

இளம்பயிரே ஈமானின் உறுதிக்கு உதாரணம்

அபு ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இறை நம்பிக்கையாளரின் நிலையானது இளம்பயிரைப் போன்றதாகும்.  காற்றடிக்கும் போது அதைக் காற்று சாயத்துவிடும்.  காற்று நின்றுவிட்டால் அது நேராகி விடும். சோதனையின் போது (ஈமான் கொண்டவனின் நிலை இவ்வாறே) தீயவன் உறுதியாக நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன்.  அல்லாஹ் தான் நாடும் போது அதை உடைத்து விடுகிறான்.

நூல்: புஹாரி 5644

இறைவனை நம்பிக்கை கொண்ட நாம் நம்முடைய நம்பிக்கை காரணமாகவே சோதிக்கப் படுவோம்.  அந்தச் சோதனையின் போது நாம் சோர்ந்து விடாமல் இறைவனையே சார்ந்திருக்க வேண்டும்.

சிரமத்தின் போது இறையோனின் அருளை நினைத்து இஸ்லாத்தின் நிழலில் நிற்பவனே இறுதி நாளில் வெற்றியை சுவைப்பான் என்பதை இறைத்தூதர் அவர்கள் ஓர் உதாரணத்தில்  கூறுகிறார்கள்.

ஒரு  பயிர் காற்றடிக்கும் போது சாய்வது போல் ஒரு முஃமீனை சோதனைகள் சாய்த்து விடலாம். ஆனால் அந்தக் காற்றுக்குப் பிறகு அந்தக் கதிர் நிமிர்வது போன்று கஷ்டத்திற்குப்  பிறகு நம்முடைய கடமையை நிறைவேற்ற நாம் புறப்பட வேண்டும் என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். இந்த வரி தான் இன்று இஸ்லாமியர்களுக்கு எப்படிபட்ட துன்பம் நேர்ந்தாலும் இதயத்தில் ஈமானை  இழக்காமல்  வாழ்க்கைப்  பயணத்தை தொடர  வழிவகை செய்கிறது.

உயர்ந்தோனை  நம்பியவர்களை  ஓர்  உடலோடு  ஒப்பிடுதல்

நுஃமான் இப்னு பஷீர் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவருக் கொருவர்  கருணை புரிவதிலும்  அன்பு செலுத்து வதிலும் இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர்  உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகமிழந்தால் அதனுடன் உள்ள மற்ற உறுப்புகளும்  (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் வந்துவிடுகிறது.

நூல்: புஹாரி 6011

உடலில் ஒரு பகுதியில் ஏற்படும் காயத்தைப் பிற பகுதிகள் தனக்கு ஏற்பட்ட கவலையாக உணர்வதைப் போல் ஒவ்வொரு முஃமினும் பிற முஃமினுக்கு ஏற்படும் கவலையைத் தன்னுடைய கவலையாக உணர வேண்டும்.  அப்படி அவன் உணர்ந்தால் தான் அதை நீக்குவதற்குப் போராடுவான்.

இன்று இஸ்லாம் சொல்லும் இந்த சகோதரத்துவம் பிற மக்களிடத்தில் இல்லாத காரணத்தால் தான் தன்னுடைய குடும்பம், தன்னுடைய பணம், தன்னுடைய நலன் என்று சுயநலமாக வாழ்கிறான். பிறர் படும் துன்பத்தை ஏறெடுத்துப் பார்க்கக் கூட மனமில்லாதவனாக பணத்தைத் தேடி அலைகிறான்.  இஸ்லாம் இந்த நிலையை அடியோடு அழிக்கிறது.

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபிகளார் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறை நம்பிக்கையாளராக மாட்டார்.

நூல்: புஹாரி 13

இந்தச் செய்திக்கு மேல் இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்திற்கு வேறன்ன உதாரணம் வேண்டும்?

கடமையைச்  செய்தால்  கப்பலைக்  காப்பாற்றலாம்…!

இன்று  சமுதாயத்தில் நடக்கும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு  இருந்தாலும் நமக்கு எதற்கு ஊர் வம்பு என்று எண்ணி அந்தத் தீமையைக் கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள்.  இதன் விளைவாக நாளை அந்தத் தீமையை தன்னுடைய வீட்டிலோ, அல்லது தன்னிடத்திலோ காணும்  நிலை ஏற்படும்.  இதற்கு என்ன காரணம்? அந்தத் தீமையை ஆரம்பத்திலே கிள்ளி எறியாதது தான்  இன்று ஊர் முழுவதும் அவனை எள்ளி நகையாடும்  நிலையை   ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று சமூக நலத்திற்காக,  சமூகத் தீமையை நாம் தடுக்கும் போது, நாளை இந்தக் காரியத்தை நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற சுயநலமும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிந்தனையை இன்று  இஸ்லாம்  மட்டும் தான் பேசுகிறது.

இறைத்தூதர் அவர்கள்  இதற்கு ஓர் அற்புதமான  உதாரணத்தைக் கூறுகிறார்கள்.

நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும்அதை மீறி நடப்பவனுக்கும் உள்ள உதாரணம்  ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும்.  அவர்கள் கப்பலில் சீட்டு குலுக்கிப் போட்டார்கள்.  அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் சிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது. 

கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது.  அதற்காக அவர்கள் மேல் தளத்திலிருந்தவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.  அப்போது கீழ் தளத்திலிருப்பவர்கள் நாம் (தண்ணீருக்காக)  நம்முடைய பங்கில் (கீழ்த்தளத்தில்)  ஓட்டை போட்டுக்கொள்வோம்.  நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்போம்  என்று பேசிக்கொண்டார்கள்.  அவர்கள் விருப்பப்படி செயல்பட மேல் தளத்திலிருப்பவர்கள் விட்டுவிட்டால் அனைவரும் அழிந்து போவார்கள்.  ஓட்டையிடவிடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்து தடுத்துக் கொள்வாராயின்  அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்றவரும்) தப்பிப் பிழைத்து கொள்வார்கள்.

நூல்: புஹாரி 2493

இந்த உதாரணத்தில் கூறப்பட்டதைப் போன்று தீமையைக் காணும் போது அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம்  நமக்கு ஏற்பட வேண்டும் இல்லையென்றால், அவன் தானே தீமை செய்கிறான், நான் நல்லவனாகத் தானே இருக்கிறேன் என்று பேசினால் நாளை அந்த நல்லவனும் அழியும் நிலை ஏற்படும்.

எனவே தீமையைக் காணும் நாம் நம்மால் முடிந்தளவிற்கு அதைத் தடுக்க முயல வேண்டும். அப்படி இருந்தால் தான் நாளை அந்தத் தீமையை விட்டு விலகியவராக நாம் இருக்க முடியும். மேலும் இது போன்ற தீமையைத் தடுக்காதவனின் உள்ளத்தில் இறை நம்பிக்கையின் முழுமை இல்லை என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.

பெருநாள்  தினத்தில்  தொழுகைக்கு முன் உரையைக் கொண்டு ஆரம்பித்தவரில் முதலானவர் தான் மர்வான் என்பவர் ஆவார்.  ஒரு மனிதர் அவரிடம் வந்து, ‘உரைக்கு முன்பு தான் தொழுகையிருக்க வேண்டும்’ என்று கூறினார். மேலும் ‘இங்கே அந்த வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டீர்கள்’  என்றார். இந்த நிகழ்வின் இறுதியில் நபிகளார் அவர்கள் பின்வருமாறு கூற நான் செவியேற்றுள்ளேன்.

உங்களில் யார் ஒரு தீமையைக் காண்கிறாரோ அவர் அதைத் தன்னுடைய கையால் தடுக்கட்டும். அதற்கு சக்தியில்லையென்றால் நாவால் தடுக்கட்டும்.  அதற்கும் இயலவில்லையென்றால் தன்னுடைய உள்ளத்தால்  அதை அவர் வெறுத்து ஒதுங்கட்டும். இது தான் ஈமானின் பலவீனமான நிலை என்றார்கள்

நூல்: முஸ்லிம் 186

எனவே தீமையைத் தடுத்து, தீனைக் காக்க  வேண்டும்.

நார்த்தங்காயா?   கொமட்டிக்காயா?

இன்று நாம் நம்முடைய வாழ்வில் திருமறையின்  தொடர்பைத் துறந்தவர்களாக இறைவசனங்களை  மறந்தவர்களாக வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.  ரமலான் மாதம் மட்டும் தான் திருகுர்ஆனைத் திருப்பிப் பார்க்க ஆசைப்படுகிறோம். அப்போது கூட அதைப் பார்க்கவில்லையென்றால் பார்ப்பவர்கள் நம்மைத் தப்பாகப் பேசுவார்களே என்ற நினைப்பு தான் நம் நிலையை சற்று மாற்றுகிறது. இப்படி குர்ஆனை துச்சமாக நினைக்கும் நாம் மனித வாழ்வின் உச்சத்தை எவ்வாறு அடையமுடியும்? இதுபோன்ற நிலையை  மாற்றுவதற்காகத்  தான்   கண்ணியத் தூதர் (ஸல்) அவர்கள் கனிகளை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்.

அபு மூஸா அல்அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதும் இறை நம்பிக்கையாளனின் நிலையாகிறது நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று. அதன் சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறை நம்பிக்கையாளனின் நிலையானது பேரீச்சம்பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது. அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலையானது துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும்  அதன் மணம் நன்று. ஆனால் அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது கொமட்டிக்காயைப் போன்றதாகும். அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானது.

நூல்: புஹாரி 5427

இந்த நான்கு பழத்தில் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நம்முடைய உள்ளத்தில் இறைவனின்  நம்பிக்கையிருந்தாலும் நாவில் இறைவசனங்கள் தவழ வேண்டுமென்று  இஸ்லாம் விரும்புகிறது.

நாளை மறுமையில் படைப்பினங்கள் பதறும் அந்த நாளில்  பரிந்துரையாக  இந்தக் குர்ஆனை ஏற்படுத்துவதாக இறைவன் கூறுகிறான்.   அது பற்றி நபிகளார் அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.

இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 1470

ஆனால் இன்று முஸ்லிம்கள் இறந்தவருக்கு யாஸீன் ஓதுவதற்கும், திருமணத்தில் ஃபாத்திஹா  ஓதுவதற்கும் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை நீடித்தால் இந்தக் குர்ஆன் நாளை  மறுமையில்  நமக்குப் பரிந்துரையாகுமா அல்லது பகையாகுமா  என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மேலும்  இந்தக் குர்ஆன் தான் மண்ணறையின்  நெருக்கடியிலிருந்தும் மலக்குகளின் மரண அடியிலிருந்தும்  நம்மை காப்பாற்றப் போகிறது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

பராஅ இப்னு ஆசிப் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபியவர்களுடன் அன்ஸாரியிலிருந்து ஒரு மனிதருடைய ஜனாஸாவில் நாங்கள் கலந்து கொண்டோம். இறுதியாக கப்ரை நாங்கள் அடைந்தோம். ஜனாஸா அடக்கம் செய்யப்படும் போது  நபியவர்கள் அமர்ந்தார்கள். எங்களுடைய தலையில்  பறவைகள் கொத்தும் அளவிற்கு நாங்கள் அவரைச் சுற்றி  அமர்ந்தோம்.

நபியவர்கள் கையில் ஒரு குச்சியிருந்தது. அதைக் கொண்டு  மண்ணைக்  கிளறியவர்களாகச் சொன்னார்கள். கப்ருடைய வேதனையை விட்டும்  அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள்.  பிறகு, ‘இந்த மய்யித்து தன்னை அடக்க வந்தவர்கள்  திரும்பும் வேளையில் அவர்களுடைய செருப்பின் ஓசையைக் கேட்கும். அதற்குப் பிறகு, இன்னானே  உன்னுடைய  இறைவன் யார் உன்னுடைய மார்க்கம் என்ன உன்னுடைய  நபி யார் என்று கேட்கப்படும்’  என்றார்கள்.

அப்போது இரண்டு மலக்குமார்கள்  வந்து அவனை உட்கார வைப்பார்கள். அந்த இரண்டு மலக்குமார்கள் உன்னுடைய இறைவன் யார்?’ என்பார்கள். அவர், ‘என்னுடைய இறைவன்  அல்லாஹ் ஆவான்என்பார்.

உன்னுடைய மார்க்கம் என்ன-?’ என்று அவர்கள் கேட்பார்கள்.  அதற்கு அவர், ‘என்னுடைய  மார்க்கம் இஸ்லாம்என்பார்.

உங்களிடத்தில்  அனுப்பப்பட்டாரே அப்படிப்பட்ட இந்த மனிதரைப் பற்றி என்ன கருதுகிறீர்?’ என்பார்கள். அதற்கு அவர், ‘அவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்என்பார். இது உனக்கு எப்படித் தெரியும்?’ என்பார்கள். அதற்கு அவர், ‘நான் அல்லாஹ்வின் வேதத்தைப் படித்தேன். அதை நான் நம்பிக்கை கொண்டேன். மேலும் நான் உண்மைப்படுத்தினேன்என்பார்.

நூல்: அஹ்மத் 18557

கப்ரில் நடக்கும் விசாரணையின் போது இந்த வார்த்தையைச் சொல்வதற்கு நாம் என்ன முயற்சியைச் செய்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

சிதறும் உள்ளத்திற்குச் சிறகு தான் உதாரணம்

பொதுவாக மனித உள்ளத்தைக் குரங்குக்கு ஒப்பிடுவார்கள். காரணம் அந்த உள்ளத்தின் சிந்தனை நிலையற்றது. முதலில் ஒரு முடிவெடுக்கும். பிறகு அந்த முடிவை மாற்றும். பிறகு மீண்டும் பழைய முடிவையே எடுக்கும். இப்படி உள்ளத்தில் ஏற்படும் இந்த நிலையை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். இப்படிப்பட்ட இந்த உள்ளத்தை நபிகளார் அவர்கள் சிறகிற்கு உதாரணமாக்குகிறார்கள்.

அபு மூஸா அல்அஸ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்த உள்ளம் பாலைவனத்திலுள்ள சிறகைப் போன்றதாகும். காற்று அதை புரட்டிப் போடுகிறது என்று நபி (ஸல்) கூறினார்கள்.

நூல்: ஹாக்கிம்

இந்த உள்ளத்தின் எண்ணங்களை நாம் புரட்டவில்லை. நம்மை ஆளுகின்ற அந்த ரஹ்மான் தான் புரட்டுகிறான். இதையும் நபிகளார் அவர்கள் கூறினார்கள்.

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘உள்ளங்களைப்  புரட்டக் கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தில் நிலைபடுத்துவாயாகஎன்ற பிராத்தனையை அதிகம் செய்பவர்களாக இருந்தார்கள். அப்போது நான், ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நீங்கள் கொண்டு வந்த ஒன்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இப்போது எங்கள் மீது நீங்கள் அஞ்சுகிறீர்களா-?’ என்றேன். அதற்கு நபியவர்கள், ‘ஆம். உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கு மத்தியில் இருக்கிறது. அவன் நாடிய விதத்தில் அதை திருப்புவான்என்றார்கள்.

நூல்: திர்மிதி 2140

இதுபோல் நபிகளாருடைய சொற்களை நாம் சிந்தித்துப் பார்த்தால் பல்வேறு விதமான விளக்கங்களையும் தகவலையும் நம்மால் பெற முடியும். அது போன்ற சூழலை நம் அனைவருக்கும் இறைவன் ஏற்படுத்துவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed