முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டதாக சிலர் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் முனாஃபிக்குகள் என்று அழைக்கப்பட்டனர்.

இவர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது இவனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இதை இறைவன் தடை செய்து விட்டான்.

அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையை எனக்குக் கொடுங்கள்! அதில் அவரைக் கஃபனிடுகிறேன். இவருக்காகத் தொழுகை நடத்துங்கள். மேலும் இவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ என்று கேட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தமது சட்டையை வழங்கி, ‘எனக்குத் தகவல் கொடு! நான் அவருக்குத் தொழுகை நடத்துகிறேன்’ எனக் கூறினார்கள். அவர் தகவல் கொடுத்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்த எண்ணிய போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிடித்து இழுத்தார்கள்.

‘முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்துவதற்கு அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீ அவர்களுக்கு மன்னிப்புத் தேடினாலும் தேடாவிட்டாலும் (சரி தான்) அவர்களுக்காக எழுபது தடவை நீ மன்னிப்புத் தேடினாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று (9:80) கூறி இரண்டில் எதையும் தேர்வு செய்யும் உரிமையை எனக்குத் தந்துள்ளான்’ என்று கூறிவிட்டு அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். உடனே ‘அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் ஒரு போதும் தொழுகை நடத்தாதே! அவர்களின் அடக்கத்தலத்திலும் நிற்காதே’ என்ற வசனத்தை (9:84) அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1269, 4670, 4672, 5796

முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்தக் கூடாது என்ற தடை நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாகும்.

ஒருவர் முனாபிக்கா? இல்லையா? என்பதை இன்னொருவர் அறிய முடியாது. வெளிப்படையாக ஒருவர் கூறுவதைத் தான் நாம் நம்ப வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் யார் யார் முனாபிக்குள் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தான்.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

திருக்குர்ஆன் 3:179

இதன் அடிப்படையில் யார் யார் முனாபிக்குகள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முனாபிக்குகளைப் பிரித்தறியும் ஆற்றல் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed