முதலில் அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான். அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புகளையும் படைக்கத் துவங்கினான்.”

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ஷபாஅத்’ எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.

அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சிறப்புகள் தமக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும்.

இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

“ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

(நூல்: அஹ்மத் 12093, 13041)

“கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்!

(நூல்: புகாரி 3445)

நபிகள் நாயகத்தின் உத்தரவுக்கு மாற்றமாக, வரம்பு மீறுவது உண்மையில் புகழ்வதாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகி விடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்ட பின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாகவே நுழைவோம்.

இது தான் கதை

“முதலில் அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான். அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புகளையும் படைக்கத் துவங்கினான்.” என்றும் ஆதம் (அலை) படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த ஒளியைப் படைத்தான் என்றும் உலமாக்கள் மீலாது மேடைகளில் முழங்கி வருகின்றனர்.

இந்தக் கதை திருக்குர்ஆனின் வசங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.

முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாவுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். ஈஸா நபி தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர்ஆன் ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக் கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக் கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!

திருக்குர்ஆன் 6:2

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

திருக்குர்ஆன் 23:12

“களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்”

(திருக்குர்ஆன் 32:7)

“அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்”

(திருக்குர்ஆன் 35:11)

இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கின்றது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்”

(திருக்குர்ஆன் 32:7)

இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே “களிமண் தான்” என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களிமண் தான் மனிதப் படைப்பின் துவக்கம், ஆரம்பம் என்று அல்லாஹ் கூறிக் கொண்டிருக்க, “இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளி தான் ஆரம்பம்” என்று கூறுவது அல்லாஹ்வுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித் தனமாகவும் தோன்றவில்லையா?

அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான்.

(திருக்குர்ஆன் 25:54)

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான். அவனோ பகிரங்கமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 16:4)

மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.

(திருக்குர்ஆன் 36:77)

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 76:2)

எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்? விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு நிர்ணயித்தான்.

(திருக்குர்ஆன் 80:19,20)

இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப்பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுகின்றன.

அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள்” என்று கூறவே இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், “தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான்” என்று கூறவே இல்லை.

“இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்பும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆச் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6316

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியால் இருந்திருந்தாலோ இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருக்க வேண்டியதில்லை.

“ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது, இதைச் சொல்பவர்களின் நிலை என்ன? “நூரே முஹம்மதியா” என்று கூறித் திரிபவர்களின் நிலை என்ன? அதையும் அல்லாஹ்வில் தூதரே தெளிவுபடுத்துகிறார்கள்.

“எவன் என் மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்கிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்.”

நூல்: புகாரி 107, 108, 109, 110, 1291, 3461, 6197

இந்த எச்சரிக்கையை மீறி துணிந்து இப்படிப் பொய்யைப் பிரச்சாரம் செய்பவர்கள் எங்கே செல்ல விரும்புகின்றனர் என்பதை உணர வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மையான தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம் போதவில்லை.

அவர்களின் ஒழுக்கம்

தூய்மையான அரசியல்

சிறந்த இல்லறம்

வணக்க வழிபாடு

அவர்களின் அருங்குணங்கள்

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமை

அவர்களின் வீரம், தியாகம்

போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரஹணத்திற்கு, ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக் கண்டித்துள்ளனர்.

நூல்: புகாரி 1040, 1041, 1042, 1043, 1044, 1046, 1047, 1048, 1053, 1057, 1058, 1059, 1060, 1061, 1063, 3201, 3202, 3203,

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது” என்ற துணைக் கதை வேறு. இதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது. இது போன்ற பொய்களைக் கூறி நரகத்திற்கும் ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed