————————————————
முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்❓
—————————————————
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 113:1-5)

சூரத்துல் ஃபலக் என்னும் திருமறைக்குர்ஆனின் 113வது அத்தியாயத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் தீங்கிலிருந்து நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

அவற்றில் ஒரு விஷயமாக ‘முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று சொல்லப்பட்டுள்ளது.

முடிச்சுகளில் ஊதி சூனியம் செய்யும் பெண்களைத் தான் இது குறிக்கிறது என்று கூறி, சூனியத்துக்குத் தாக்கம் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று ஸலபிகள் வாதிடுகின்றனர்.

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பது இவர்களின் கற்பனை தானே தவிர அல்லாஹ்வோ, அவனது தூதரோ அளித்த விளக்கம் அல்ல.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் ஏற்கத்தக்க எந்த பதிலும் அவர்களிடம் இல்லை.

இவர்கள் கூறுவது தவறானது என்று சாதாரண மனிதனின் அறிவு கூடத் தீர்ப்பு அளித்து விடும்.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சூனியம் செய்வார்கள் என்பதுதான் ஸலபிகளின் நம்பிக்கையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லபீத் என்ற யூத ஆண் சூனியம் வைத்தான் என்று தான் இவர்கள் நம்புகிறார்கள். அப்படி இருக்கும்போது சூனியம் செய்யும் பெண்களை விட்டுப் பாதுகாப்புத் தேடுமாறு சொல்வது பொருந்துமா?

இந்த அத்தியாயத்தில் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்து தான் பாதுகாப்பு தேடப்படுகிறது. சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமே?

பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் சூனியத்துக்கு இருந்து, அதிலிருந்து பாதுகாப்பு தேடுவதற்குத் தான் இந்த அத்தியாயங்கள் மூலம் அல்லாஹ் வழிகாட்டுகிறான் என்றால் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டு மட்டும் பாதுகாப்பு தேடச்சொல்லி, சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு அற்ற நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவானா?

இப்படிச் சிந்திக்கும் போது இவர்கள் கொடுக்கும் விளக்கம் பயனற்றதாகவும், அல்லாஹ்வின் கூற்றை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்பது தெரிகிறது.

மேலும் முடிச்சுக்களில் ஊதுதல் என்ற ஒரு வழியில் தான் சூனியம் உள்ளது என்பது சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவோரின் கொள்கை அல்ல.

ஆயிரக்கணக்கான வழிகளில் சூனியம் செய்யலாம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. இந்த அத்தியாயம் சூனியத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க அருளப்பட்டது என்றால் இதில் முடிச்சுக்களில் ஊதும் ஒரு வகை சூனியத்தில் இருந்து மட்டுமே பாதுகாப்பு உள்ளது.

அது அல்லாத வகைகளில் ஒருவன் சூனியம் செய்தால் அதில் இருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போய் விடுகிறது.

இதிலிருந்து தெரிய வரும் உண்மை என்ன?

இது சூனியக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு கோருவதற்காக அருளப்பட்டதல்ல. இப்படி அரைகுறையாக அல்லாஹ் கற்றுத்தர மாட்டான் என்பது தெரிகிறது.

உலகில் பெரும்பாலும். ஆண்கள் தான் சூனியம் செய்கின்றனர். மிகமிக அரிதாகத் தான் பெண் சூனியக்காரிகள் உள்ளனர். காமிக்ஸ் கதைகளிலும், பேய்ப் படங்களிலும் தான் சூனியக்காரக் கிழவி என்று காட்டுகிறார்கள். நிஜத்தில் அப்படி இல்லை. ஆண்களே அதிக அளவில் சூனியக்காரர்களாக இருக்கும்போது சூனியம் செய்யும் பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேடச்சொல்வது பொருந்தவில்லை.

அப்படியானால் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது எதைக் குறிக்கிறது? முடிச்சுக்கள் என்றால் அதற்கு நேரடியாக முடிச்சு என்று அர்த்தம் இருந்தாலும் இங்கே அது பொருந்தவில்லை. முடிச்சுப் போடுவதால் நமக்கு என்ன தீங்கு நேர்ந்து விடும் எனச் சிந்திக்கும்போது முடிச்சுக்கள் என்பதற்கு முடிச்சு என்ற நேரடிப் பொருளைக் கொடுக்க முடியாது.

முடிச்சு என்பது அதன் நேரடிப் பொருள் அல்லாத மாற்றுப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக மூஸா நபி அவர்களுக்கு திக்குவாய் இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டபோது,

இறைவா! என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு! என்னுடைய காரியத்தை லேசாக்கி வை! எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு! (20:27) என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தை நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என்று நாம் விளங்க மாட்டோம். மூஸா நபிக்குத் திக்குவாய் இருந்துள்ளது. அதனைத்தான் அவர்கள் முடிச்சு எனக் குறிப்பிடுகிறார்கள் என்று எல்லோரும் புரிந்து கொள்கிறோம். நேரடியாக முடிச்சு என்று புரிந்து கொள்வதில்லை.

இதே போன்று திருமணத்தைப் பற்றி அல்லாஹ் சொல்லும்போது, திருமணம் செய்தபின் இருவரும் சேராமல் பிரிந்து விட்டால் பாதி மஹர் கொடுத்துவிட வேண்டும். நிக்காஹ் எனும் முடிச்சு யார் கை வசம் உள்ளதோ அவர் விட்டுக் கொடுத்தால் தவிர. (2:237) என்று கூறுகிறான்.

இதில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைவதை முடிச்சு என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

எனவே இந்த அத்தியாயத்தில் முடிச்சு என்று கூறப்பட்டதற்குப் பொருத்தமான விளக்கம் நபிமொழியில் கிடைக்கிறதா என்று நாம் தேடிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாம் தேடிப்பார்க்கும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி இதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஷைத்தான் ஒருவரின் தலை அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் தூங்கும் நேரத்தில் அவனுக்கு மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். விடிகின்ற நேரம் வந்ததும் நீண்ட இரவு இருக்கின்றது; நீ தூங்கு என்று சொல்வான். அவர் எழுந்துவிட்டால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். பின்னர் சென்று உளுச் செய்தால் அடுத்த முடிச்சு அவிழ்ந்துவிடும். தொழுகைக்கு தக்பீர் கட்டியபின் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுகின்றது. இதன் பின்னர் நல்ல காலைப் பொழுதை அவன் விடுகின்றான். இல்லாவிட்டால் சோம்பலாக இருப்பான்.

புகாரி 1142, 3269

ஷைத்தான் போடும் முடிச்சு என்றால் நல்ல அமல்கள் செய்ய விடாமல் ஆக்குவதும், தீய செயல்களை செய்யத் தூண்டுவதுமாகும் என்று இதில் இருந்து விளங்குகிறது.

இதுபோல் ஷைத்தான் முடிச்சு போட்டு நம்மை வழிகெடுத்து விடாமல் பாதுகாப்புக் கோருவது தான் முடிச்சுக்களில் ஊதுதல் என்பது.

ஆதாரமின்றி கற்பனை செய்து பொருந்தாத விளக்கம் கூறுவதை விட ஹதீஸ் துணையுடன் முடிச்சு என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது தான் சரியானது.

114வது அத்தியாயத்தில் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துபவனின் தீங்கி லிருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றோம். அது போன்றது தான் 113வது அத்தியாயமும்.

ஷைத்தான்கள் ஆண்களா? பெண்களா?

ஷைத்தான்களைக் குறிப்பதற்குத் தான் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் ஆண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போகுமே என்று சிலர் நினைக்கலாம்.

113வது அத்தியாயம் நான்காவது வசனத்தின் அரபி மூலத்தில் ‘‘நஃப்பாஸாத்”

نفاثات

என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த வார்த்தைக்குத் தமிழில் ‘‘முடிச்சுகளில் ஊதும் பெண்கள்” என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மொழிபெயர்த்து விட்டு, இது ஷைத்தானைக் குறிக்கும் சொல் என விளக்கம் அளிக்கும் போது, அப்படியென்றால் ஆண் ஷைத்தான் மூலம் நமக்குப் பாதிப்பு ஏற்படாதா? என்ற கேள்வி ஏற்படுகிறது.

பொதுவாக ஷைத்தான்களில் அதாவது ஜின்களில் மனிதர்களைப் போன்று ஆண், பெண் என்ற பிரிவினர் இருந்தாலும் மேற்கண்ட ‘‘நஃப்பாஸாத்” என்பது அனைத்து ஷைத்தான்களையும் குறிக்கும் சொல்லாகும். இது பெண் ஷைத்தான்களை மட்டும் குறிக்கும் வார்த்தை அல்ல.

அரபி மொழியில் ஒரு வார்த்தையைப் பன்மையாக மாற்றும் போது பன்மைச் சொல்லில் அதன் ஒருமை வடிவம் மாறிவிடும் என்றால் அதனை ‘‘ஜம்வுத் தக்ஸீர்” என்று குறிப்பிடுவார்கள்.

ஒருமையில் ஆண்பாலாக புழங்கப்படும் ஒரு வார்த்தையை பன்மையாக மாற்றும் போது ஒருமையின் வடிவம் மாறிவிடும் என்றால் அந்த பன்மைச் சொல்லை ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் பயன்படுத்துவார்கள்.

உதாரணமாக

مَلَكٌ

(மலகுன்) என்பது ஒருமைச் சொல் ஆகும். இதன் பொருள் ‘‘வானவர்” என்பதாகும். இது ஆண்பாலாகப் புழங்கப்படும் ஒரு சொல்லாகும். இதனுடைய பன்மைச் சொல் (மலாயிகத்துன்)

مَلَائِكَةٌ

என்பதாகும்.

ஒருமையின் வடிவம் பன்மையாக மாற்றும் போது மாறிவிட்ட காரணத்தினால் இந்த மலாயிகத்துன் என்ற வார்த்தை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் குறிப்பிடப்படும். இது அரபி இலக்கணச் சட்ட விதியாகும்.

வார்த்தையைக் கவனித்து பெண்பாலாகக் குறிப்பிடப்பட்டதால் மலக்குமார்கள் பெண்கள் என்று வாதிடுவது அறியாமையின் உச்சக்கட்டமாகும்.

மலக்குமார்கள் ஆண்களும் அல்ல! பெண்களும் அல்ல! அவர்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.

திருமறைக் குர்ஆனில் ஏராளமான இடங்களில் பன்மையாக வரும் போது மலக்குமார்களின் பண்புகள் பெண்பால் வடிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமறைக்குர்ஆனின் 79வது அத்தியாயத்தில் அந்நாஸிஆத் (79:1), அந்நாஷிதாத் (79:2), அஸ்ஸாபிஹாத் (79:3) அஸ்ஸாபிகாத் (79:4) அல்முதப்பிராத் (79:5) ஆகிய அனைத்தும் மலக்குமார்களின் பண்புகளையும்  செயல்களையும் குறிக்கும் வார்த்தைகளாகும். இவை அனைத்து பன்மையாகவும் பெண்பால் வடிவத்திலும் இடம் பெற்றுள்ளது.

இலக்கணச் சட்டப்படி இங்கே பெண்பால் வடிவம் இடம் பெற்றுள்ளதே தவிர இந்த வாரத்தைகளை வைத்துக் கொண்டு மலக்குமார்கள் பெண்கள் என்று வாதிடுவது அறியாமையாகும்.

அது போன்றுதான் ஃபலக் அத்தியாயத்தில் ‘‘நஃப்பாஸாத்” என்ற பன்மைச் சொல் பெண்பால் வடிவத்தில் இருந்தாலும் இது ஒட்டு மொத்த ஷைத்தான்களையும் குறிக்கும் சொல் ஆகும்.

“شيطان”

(ஷைத்தான்) என்ற ஒருமைச் சொல் ஆண்பாலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். இதனைப் பன்மையில்

الشَّيَاطِينُ 

(அஷ்ஷயாத்தீன்) என்று குறிப்பிடுவார்கள்.  ஒருமையின் வடிவம் பன்மையில் மாறிவிட்டால் அந்தப் பன்மைச் சொல்லை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் பயன்படுத்தலாம் என்ற இலக்கண விதியின் அடிப்படையில் குர்ஆனில் பல்வேறு இடங்களில் ‘‘அஷ்ஷயாத்தீன்” என்ற சொல் பெண்பாலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

{اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ} [الأنعام: 71]

ஷைத்தான்கள் அவனை வழிகெடுத்தார்கள்

(அல்குர்ஆன் 6:71)

இந்த வசனத்தில் ‘‘வழிகெடுத்தார்கள்” என்ற பொருளில் வரும் ‘‘இஸ்தஹ்வத்” என்ற வினைச் சொல் பெண்பால் வார்த்தையாகும்.

{تَنَزَّلُ الشَّيَاطِينُ} [الشعراء: 221]

ஷைத்தான்கள் இறங்குவார்கள்

(அல்குர்ஆன் 26:221)

இதில் ‘‘இறங்குவார்கள்” என்ற பொருளில் வரும் ‘‘தனஸ்ஸலு” என்ற வார்த்தை எதிர்கால வினைச்சொல் பெண்பால் வார்த்தையாகும்.

{وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ } [الشعراء: 210]

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை.

(அல்குர்ஆன் 26:210)

இதில் ‘‘இறக்கிடவில்லை” என்ற பொருளில் வரும் ‘‘வமா தனஸ்ஸலத்” என்ற இறந்த கால வினைச் சொல் பெண்பால் வார்த்தையாகும்.

மேற்கண்ட வசனங்களில் ஒட்டு மொத்த ஷைத்தான்களையும் குறிக்கும் ‘‘அஷ்ஷயாத்தீன்” என்ற சொல் பெண்பாலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதன் அடிப்படையில்தான் ஃபலக் அத்தியாயத்தில் ஷைத்தான்களின் ‘‘ஊதுதல்” என்ற பண்பு ‘‘நஃப்பாஸாத்” என்ற பெண்பால் வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் அமைப்பைக் கவனித்து ‘‘ஊதக்கூடிய பெண்கள்” என்று மொழிபெயர்ப்பு செய்திருந்தாலும் ‘‘ஊதக்கூடியவர்கள்” என்று மொழிபெயர்ப்பதே சிறந்ததாகும்.

மலக்குமார்களைக் குறிக்க பெண்பால் பன்மைச் சொற்கள் வந்திருந்தாலும் யாரும் அந்த வார்த்தைகளைப் பெண்பால் பன்மை அர்த்தத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அது போன்றுதான் ஷைத்தான்களைக் குறிக்க பெண்பால் பன்மை வந்துள்ள இடத்திலும் அது பெண்பால் பன்மையைக் குறிப்பது போல் மொழிபெயர்க்காமல் ஒட்டுமொத்த ஷைத்தான்களையும் குறிக்கும் வகையில் ‘‘முடிச்சுகளில் ஊதக்கூடியவர்கள்” என்று மொழிபெயர்ப்பதே சிறந்ததாகும்.

ஊதுதல் என்பதின் பொருள் என்ன?

ஃபலக் அத்தியாயத்தில் ‘‘முடிச்சுகளில் ஊதக்கூடியவர்கள்” என்று வந்துள்ளது.

இது ஷைத்தான்களால் உள்ளங்களில் போடப்படும் கெட்ட எண்ணங்களைக் குறிப்பதாகும்.

ஷைத்தான்களுக்கு உள்ளத்தில் கெட்ட எண்ணங்களைப் போடும் ஆற்றல் உள்ளது.

மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

(அல்குர்ஆன் 114வது அத்தியாயம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன் எனக் கூறினார்கள். 

நூல்: புகாரி (2035)

‘‘நஃபஸ” என்ற வார்த்தைக்கு ‘‘வாயால் ஊதுதல்” என்ற பொருள் இருப்பதைப் போன்று ‘‘உள்ளத்தில் போடுதல்” என்ற பொருளும் உள்ளது.

فتح الباري – ابن حجر (1/ 197)

قوله نفث في روعي أي ألقى إلي وأوحي والروع النفس

“நஃபஸ ஃபீ ரூயி” (என் உள்ளத்தில் ஊதினார்) என்றால் என்னிடம் போட்டார், வஹி அறிவித்தார் என்பதாகும்.

நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 1, பக்கம்:197

நஃபஸ என்பதற்கு உள்ளத்தில் போடுதல் என்ற பொருளும் உள்ளது என்பதை இப்னு ஹஜர் அவர்களின் விளக்கத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வார்த்தைகளின் பொருளை விளங்கிக் கொள்வதற்காக அறிஞர்களின் கருத்தை மேற்கோள் காட்டுவது தவறல்ல.

பலவீனமான செய்தி

சில தஃப்ஸீர்களில் ‘‘முடிச்சுகளில் ஊதக்கூடியவர்கள்” என்பதற்கு விளக்கமாகப் பின்வரும் செய்தியை எடுத்துக் காட்டுகின்றனர்.

4079 – أخبرنا عمرو بن علي قال حدثنا أبو داود قال حدثنا عباد بن ميسرة المنقري عن الحسن عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه و سلم : من عقد عقدة ثم نفث فيها فقد سحر ومن سحر فقد أشرك ومن تعلق شيئا وكل إليه (النسائي)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முடிச்சினை முடிந்து பிறகு அதிலே ஊதுகிறானோ அவன் சூனியம் செய்துவிட்டான். யார் சூனியம் செய்தாரோ அவர் இணை கற்பித்துவிட்டார். யார் ஏதேனும் ஒன்றை தொங்கவிட்டுக் கொள்கிறாரோ அவன் அதன் பக்கம் சாட்டப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: நஸாயீ (4079)

இச்செய்தி மிகவும் பலவீனமானது ஆகும்.  இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘‘உப்பாத் இப்னு மைஸரா அல் முன்கிரீ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.

تهذيب التهذيب ـ محقق (5/ 94)

قال الاثرم ضعفه أحمد ,,,,, وقال الدوري عن ابن معين عباد بن ميسرة وعباد بن راشد وعباد بن كثير وعباد ابن منصور كلهم حديثهم ليس بالقوي ولكنه يكتب وقال أبو داود عباد بن ميسرة ليس بالقوي وقال إبراهيم بن بكر الشيباني عن الهيثم بن حبيب شهد عباد بن ميسرة عند عباد بن منصور فرد شهادته قال لم رددت شهادتي قال لانك تضرب اليتيم وتأكل مال الارملة.

இமாம் அஹ்மத் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளார்.  இவர் உறுதியானவர் இல்லை. என்றாலும் (இவரது ஹதீஸ்கள்) எழுதிக் கொள்ளப்படும் என இப்னு மயீன் கூறியுள்ளார். உப்பாத் இப்னு மய்ஸரா அவர்கள் உப்பாத் இப்னு மன்சூர் என்பாரிடம் சாட்சி கூறியபோது அவர் அவரது சாட்சியை ஏற்க மறுத்துவிட்டார். என்னுடைய சாட்சியை ஏன் மறுக்கின்றீர்? எனக் கேட்ட போது ‘‘நீர் அனாதையை அடிக்கின்றீர். விதவைப் பெண்களின் செல்வத்தைச் சாப்பிடுகின்றீர்” என உப்பாத் இப்னு மன்சூர் கூறினார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 5, பக்கம் 94

மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அல்ஹஸன் இப்னு அபில் ஹசன் அல் யஸார் என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்த ஒன்றையும் செவியேற்கவில்லை என்பதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீபில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

எனவே இது ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed