முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள்.

 

ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு நன்மை உள்ளது. ஆனால் யாஸீன், தபாரகல்லதீ போன்ற சூராக்களை குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட சிறப்பை நாடி ஓதுவது கூடாது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. குர்ஆனுடைய அனைத்து சூராக்களை ஓதுவதைப் போன்று யாசீன், முல்க் போன்ற சூராக்களை ஓதலாம். எனினும், சில குறிப்பிட்ட வசனங்களுக்கு அதிகமான சிறப்பும், நன்மையும் உள்ளதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆமனர் ரசூலு என்று துவங்கும் வசனம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் பகரா அத்தியாயத்தின் இறுதி இரு (2:285, 286), வசனங்களை, யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்குப் போதுமானதாக ஆகிவிடும்.

அறி : அபூ மஸ்ஊத் (ரலி),

நூல் : புகாரி (4008)

ஆயத்துல் குர்ஸி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன் என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்……..) இறுதியில் அவன், நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான் என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது,) அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (3275)

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபுல் முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” எனக் கேட்டார்கள்.

நான் “அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினேன். அவர்கள் “அபுல் முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” என (மீண்டும்) கேட்டார்கள்.

நான் “அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்… எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்” என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு “அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே!” என்றார்கள்

நூல் : முஸ்லிம் (1476)

தூங்கி எழுந்ததும் ஓதும் வசனம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையுமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகலவாட்டில் (தலை வைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலை வைத்துப்) படுத்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது சற்று பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தமது கரத்தால் முகத்தில் தடவித் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள்.

நூல் : முஸ்லிம் (1400)

அல்பகரா, ஆல இம்ரான், மற்றும் மொத்தக் குர்ஆனை ஓதுவதின் சிறப்புகள்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் வீணர்கள் செயலிழந்து போவார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி),

நூல் : முஸ்லிம் (1470)

உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். எனது குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே நான் ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை அமைதியாகி விட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போலவே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதிய போது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்தி விடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது.) அதைக் காண முடியவில்லை.

காலை நேரமானபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?) என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன், அல்லாஹ்வின் தூதரே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். ஆகவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நோக்கிய போது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன்.

அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)த போது அதைக் காணவில்லை என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அது என்னவென்று நீ அறிவாயா? என்று கேட்டார்கள். நான், இல்லை (தெரியாது) என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களை விட்டும் அது மறைந்திருக்காது என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (5018)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர்- ரலி) தமது வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடிக் கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்ன போது நபி (ஸல்) அவர்கள், இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்கள் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 3614

தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் வசனங்கள்

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி),

மற்றொரு அறிவிப்பில் “அல்கஹ்ப் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர்’ என்று இடம் பெற்றுள்ளது.

நூல் : முஸ்லிம் (1475)

குல் ஹுவல்லாஹு அஹத்’, குல் அஊது பி ரப்பில் ஃபலக்’, குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் குல் ஹுவல்லாஹு அஹத்’, குல் அஊது பிரப்பில் ஃபலக்’, குல் அஊது பிரப்பின் னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

நூல் : புகாரி 5017

குல் ஹுவல்லாஹு அஹத் சூராவின் சிறப்பு

அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா? என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், எங்களில் யாருக்கு இந்தச் சத்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (5015)

அல்ஹம்து சூராவின் சிறப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (4704)

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், “(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.

பிறகு, “நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?” என்று கேட்டார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், “அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்தான்) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும்” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 4703

எனவே, இனிவரும் காலங்களில் இந்த அமலின் நன்மைகளை விளங்கி, அதிகமதிகம் இதுபோன்ற, அத்தியாயங்களை ஓதி நன்மைகளை கொள்ளையடிக்கும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed