மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?
இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம்.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான்.
கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.
மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீங்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.