மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம்

இவ்வசனத்தில் (32:23) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

அவர் என்பது மூஸா நபியைக் குறிக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வின்னுலகப் பயணம் சென்றபோது மூஸா நபியைச் சந்தித்தது குறித்து இவ்வசனம் பேசுகிறது என்று நாம் கூறுகிறோம். 

சில மொழிபெயர்ப்பாளர்கள் மூஸா நபி அல்லாஹ்வை நேரடியாகச் சந்தித்தது குறித்து இவ்வசனம் பேசுவதாகக் கூறுகின்றனர். மூஸா நபி இறைவனைச் சந்திக்க கோரிக்கை வைத்தபோது அவர்களை அல்லாஹ் மூர்ச்சை அடையச் செய்தான். அவர்கள் இறைவனைச் சந்திக்கவில்லை. இதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது. இது குறித்து 21வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

மற்றும் சிலர் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் அல்லாஹ்வைச் சந்தித்தது பற்றிக் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதால் அதற்கு முரணான இந்தக் கருத்தை ஏற்க முடியாது. இது குறித்த ஆதாரங்களை 482 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் அவனைச் சந்திப்பதில் நீர் சந்தேகிக்காதீர் என்று கூறுகின்றனர். அதாவது மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதில் சந்தேகிக்க வேண்டாம் என்று இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர்.

இது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் சம்பவம் பற்றிப் பேசும்போதுதான் இவ்வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். மூசா (அலை) அவர்கள் “ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள்முடியுடைவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த, மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை. “நீர் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்”. (32:23) என்ற வசனத்தையும் ஓதினார்கள். 

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட (32:23ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் கத்தாதா (ரஹ்) அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி நீங்கள் சந்தேகம் கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.நூல் : முஸ்லிம் 267

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஒரு வசனத்திற்குரிய பொருளைக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக மொழிபெயர்த்தவர்களின் கருத்துக்களின் பக்கம் நாம் திரும்ப வேண்டிய அவசியமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் மக்காவில் இருந்து ஜெருசலம் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து வின்னுலகம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அல்லாஹ்வின் ஏராளமான அத்தாட்சிகளை அவர்கள் பார்த்து விட்டு திரும்பி வந்ததாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தப் பயணம் மிஃராஜ் என்று சொல்லப்படுகிறது.

தவறான கொள்கையுடைய சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மிஃராஜ் எனும் வின்வெளிப் பயணம் சென்றதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களை மறுக்கின்றனர்.

17:1 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்காவில் இருந்து ஜெருசலம் வரை அழைத்துச் சென்றதாகத் தான் அல்லாஹ் கூறுகிறான். ஜெருசலமிலிருந்து வின்னுலகம் அழைத்துச் சென்றதாக கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணானது என்பதுதான் இவர்கள் மிஃராஜை மறுப்பதற்குக் காரணம்.

17:1 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து ஜெருசலம் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மிஃராஜ் என்பது இவ்வசனத்துக்கு எதிரானது அல்ல. முரணானதும் அல்ல. இவ்வசனம் சொல்லாத கூடுதல் தகவல் தான் ஹதீஸ்களில் உள்ளது.

மிஃராஜ் குறித்த ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியைச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஐம்பது நேரத் தொழுகை ஐந்து நேரமாகக் குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பை திருக்குர்ஆனின் இவ்வசனம் (32:23) உண்மைப்படுத்துகிறது.

மூஸா நபியைச் சந்தித்ததில் உமக்குச் சந்தேகம் வர வேண்டாம் என்று இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மூஸா நபியவர்கள் மரணித்து விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியைப் பார்த்திருக்க முடியாது.

இறந்து போனவரை உயிரோடு இருப்பவர்கள் ஒருக்காலும் பார்க்க முடியாது; ஆயினும் இறைவன் தனது ஆற்றலைக் காட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘மிஃராஜ்’ என்ற விண்வெளிப் பயணம் அழைத்துச் சென்றான்.

அங்கே அவர்கள் மூஸா நபியைச் சந்தித்தார்கள். மற்றவர்களை விட அவர்களிடம் அதிகமான நேரம் உரையாடினார்கள். அந்தச் சந்திப்பைத்தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

மூஸாவைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்; நீர் உண்மையாகவே சந்தித்தீர்; நீர் சந்தித்தது அவரைத்தான் என்ற கருத்துப்பட அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.

இது, மிஃராஜ் என்ற நிகழ்ச்சி உண்மை என்பதற்குரிய தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மிஃராஜ் பயணம் குறித்த ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணானது அல்ல என்பதை 53:13-18 வரை உள்ள வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed