மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவின் முற்பகுதி வந்து விட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் புகாரி 3304

மேற்கண்ட செய்தியைப் பற்றி விளக்கம் கேட்டிருந்தீர்கள்.

மனிதர்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்தக் கூடியவைகளை ஷைத்தான் எனக் குறிப்பிடும் வழக்கம் அரபு மக்களிடையே இருந்துள்ளது. இது பற்றி ஏற்கனவே விரிவாக விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. பார்க்க

விஷ ஜந்துக்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷைத்தான்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது சரியான கருத்தாகத் தெரிகின்றது.

இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றித் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தனது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக் குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அல்லது வவ்வால் போன்றவை மோதி விட்டால் அதனால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விட வேண்டாம் என்கிறார்கள்.

மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள். அவற்றைப் பார்க்கும் போது இந்த இடத்தில் ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் போன்றவை தான் என்று புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன.

இரவில் உறங்கும் போது கதவுகளைப் பூட்டி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஷைத்தான் பூட்டப்பட்ட கதவைத் திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.

ஏனெனில் ஷைத்தான் மனதில் ஊடுருவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவைப் பூட்டி விடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. மாலை மயங்கும் போது கதவைப் பூட்டிவிட்டால் தனது இருப்பிடத்துக்கு திரும்பும் விஷ ஜந்துக்களும் இடைஞ்சல் தரும் பிராணிகளும் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பாத்திரங்களை மூடி வையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டு விடுங்கள்; விளக்கை அணைத்து விடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடி வைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை. உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்து விடும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (4099)

ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்க மாட்டான். மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபிகல் நாயக்ம் (ஸல்) அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். எலியின் அபாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பதும் நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.

ஷைத்தான் உள்ளங்களையும் ஊடுறுவுபவன் என்ற கருத்துக்கு முரண்படக் கூடாது என்பதற்காகவும் தீய சக்திகளை ஷைத்தான் எனக் கூறுவ்தற்கு ஆதாரம் உள்ளதாலும் நாம் இப்படி புரிந்து கொள்வதே முரண்பாடில்லாததாக அமையும்.

மேலும் இன்றைக்கு விஞ்ஞானம் கண்டுபிடிக்காத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத இன்னும் பல வகையான பாதிப்புகள் இந்த நேரத்தில் ஏற்படலாம். இது எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed