மாறும் உலகில் மாறாத திருக்குர்ஆன்

14 நூற்றாண்டுகளாய்…

உலகில் உள்ள எந்த ஒரு பொருளும் காலத்தை வென்றதில்லை. அது போல் எந்த ஒரு கொள்கையும், எந்தத் தத்துவமும் காலத்தில் நிலைத்து நின்றதில்லை. அவை அனைத்தையுமே காலம் அழித்துவிடும். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளாய் காலத்தால் அழிக்க முடியாத வேதமாய் திருக்குர்ஆன் திகழ்கிறது. எழுதப்படிக்கத் தெரியாத அரபு மக்களிடம், எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியிடம் அருளப்பட்ட குர்ஆன் எவ்வித மாற்றமும் இன்றி, தற்போது உள்ளது உள்ளவாறே வந்து சேர்ந்துள்ளது. இந்தக் குர்ஆனை அழிக்க உலகமே திரண்டு வந்த போதும் கூட, மக்களின் உள்ளத்தில் இறைவன் பாதுகாத்து வைத்துள்ளதால்,அது காலத்தால் அழியாமல் இருக்கின்றது.

பாதுகாக்கப்பட்ட வேதம்

எத்தனையோ புத்தகங்கள் ஒவ்வொரு காலத்திலும் உருவாகியுள்ளன. ஆனால் அவையனைத்தும் அந்தக்காலத்தில் உள்ள செய்திகளை மட்டுமே கூறும். செல்போனைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள புத்தகத்தில் இருக்காது. அது போலவே அனைத்து செய்திகளும் காலம் மாற மாற வேறுபாடு அடையும்.  உதரணத்திற்குச்  சொல்வதாயிருந்தால் திருக்குறளை உலகப் பொதுமறை என்கின்றனர். ஆனால் அது யாருக்கும் பொதுவான கருத்துகளைக் கூறவில்லை. அசைவம் சாப்பிடாதவனை விலங்குகள் தொழும் என திருக்குறள் கூறுகிறது.

ஆனால் உலகில் தொண்ணூறு சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள். அது போல் சந்திர கிரகணம் பற்றிக் கூறுகையில் பாம்பு நிலவை விழுங்குகிறது என்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்தை அது சொல்கிறது. ஆனால் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் மாறுபாடு இல்லாதது. அதன் காரணமாகவே முத்தலாக் விவகாரத்தில் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் குர்ஆனில் உள்ள தலாக் சட்டம் சரியாக உள்ளது. முத்தலாக் என்பது குர்ஆனில் இல்லை என்று பாராட்டிப் பேசுகின்றனர். குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதமாக இருப்பதால் அது காலத்தைக் கடந்தும் நிற்கின்றது.

திருத்தம் இயலாத சட்டங்கள்

உலகில் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் யாவும் பல அறிவாளிகளால் இயற்றப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் காலத்தால் மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றது. இந்திய அரசியல் சாசனமே பலமுறை திருத்தப்பட்டுள்ளது. பொருட்களுக்கு இடப்படும் வரிகளில் பல வேறுபாடுகள். பள்ளிகளில் உள்ள பாடப்புத்தகங்கள் சில ஆண்டுகளுக்குள்ளேயே மாற்றப்பட்டுள்ளன. ஆனால் குர்ஆன் திருத்தம் இல்லாத சட்டங்களுடன் திகழ்கிறது. வெறும் குருட்டுப் பக்திக்காக முஸ்லிம்கள் இதை நம்பவில்லை. காலம் கடந்தாலும் மாற்றம் தேவை இல்லை என்பதால் இது திருத்தப்படவில்லை.

அனைவருக்கும் புரியும் நடை

திருக்குர்ஆன் அனைத்துக் காலத்திலும், அனைத்து மக்களாலும் படிக்கக் கூடிய எழுத்து நடையைக் கொண்டுள்ளது. திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்கள் சிறப்பு வாய்ந்து எனக் கூறுகின்றனர். ஆனால் அவற்றை இந்தக் காலத்தில் பண்டிதர்களைத் தவிர யாராலும் படித்துப் பொருள்கூற முடியாது.

இவையனைத்தும் அவை எழுதப்பட்ட காலத்தில் இருந்த மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியுள்ளனர். திருக்குர்ஆனில் உள்ள எழுத்து நடையும், மொழியும் அனைத்து காலத்தைச் சேர்ந்த மக்களுக்கும் புரியும் வகையில் இருக்கின்றது. அதுமட்டுமின்றி, பண்டிதர்கள் படித்தாலும் அதன் மொழிநடையைக் கண்டு வியப்பார்கள். பாமர மக்கள் படித்தாலும் அதன் எளிமையைக் கண்டு அதிசயிப்பார்கள்.

கொள்கையில் மாறுபாடில்லை

அதிக நாட்களைக் கடந்த ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் மாறுபாடு அடையும். உதாரணத்திற்கு புத்தர் கடவுள் இல்லை என்றார். ஆனால் காலப்போக்கில் அவரையே கடவுளாக்கி விட்டனர். அனைத்து மதங்களில் ஆரம்பத்தில் இருந்தது ஓரிறைக் கொள்கை தான். எனினும் கால ஓட்டத்தில் பல கடவுள் கொள்கை அனைத்து மதங்களிலும் புகுந்துவிட்டது. ஆனால் குர்ஆனில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை இன்று வரை மாறுபாடில்லாமல் இருக்கின்றது.

முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் இந்த மார்க்கத்தை நேசித்த போதும் பல கடவுள்களை உருவாக்கவில்லை. இக்கொள்கையைச் சொன்ன இறைத் தூதருக்குக் கோயில்களோ, சிலைகளோ இல்லை. இப்படிக் காலத்தைக் கடந்தும் கொள்கையில் மாற்றம் இல்லாமல் இருக்கின்றது. அது போல, இனவேறுபாடு, மொழி வேறுபாடு, சாதியப் பாகுபாடு ஆகியவற்றைக் கடந்து ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தைக் குர்ஆன் உருவாக்கியுள்ளது. இங்கு கூடியிருக்கும் ஒருவரிடம் கூட தான் எந்த சாதியில் இருந்து வந்தோம் என்று தெரியாது.

அந்தளவிற்குப் பாகுபாடில்லாத சமுதாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு, கொள்கையாலும், திருத்தமில்லாத சட்டங்களாலும், எளிமையாலும் காலத்தைக் வென்று மாறும் உலகில் மாறாத வேதமாக  திருக்குர்ஆன் அமைத்திருக்கிறது…

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed