மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப்போக்கு ஏற்படும். அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு இதுதான்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார்.

அதற்கு, இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 228

இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு அதையே மாதவிடாயாகக் கொள்ள வேண்டும். அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று இதிலிருந்து தெரிகிறது.

குளிப்பது கட்டாயமில்லை என்றாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொள்ளலாம்.

உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு ஏற்பட்டது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது குளித்துக்கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்தநாள நோயாகும் என்றும் கூறினார்கள். எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 327

முதல் ஹதீஸில் உளூ செய்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த ஹதீஸில் குளிக்குமாறு கட்டளையிட்டது அவசியம் என்ற அடிப்படையில் அல்ல. விரும்பத்தக்கது என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பது மட்டுமின்றி இஃதிகாஃப் என்ற வணக்கத்தைக் கூட செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2037

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed