மாதவிடாயின் போது அனுமதிக்கப்பட்டவை
மாதவிடாயின் போது எவற்றை செய்யக்கூடாது என்பதை முன்பு தெரிந்துகொண்டோம். இவற்றைத் தவிர சாதாரண நேரத்தில் அனுமதிக்கப்பட்ட மற்றக் காரியங்களை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. உடலுறவைத் தவிர தான் விரும்பும் எதை வேண்டுமானாலும் கணவன் மனைவி செய்துகொள்ளலாம்.
அறியாமைக் காலத்தில் தான் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை அசுத்தம் என்று கருதி அவர்களை ஒதுக்கிவைத்திருந்தார்கள். பல மதங்களில் மாதவிடாய் ஏற்பட்டப் பெண்களை தொடக்கூடாது என்றும் அவர்களுக்கென்று தனி தட்டு பாய் தலையணை ஆகியவற்றை ஏற்படுத்தி அவர்களை தீண்டத்தகாதவர்களைப் போன்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் இதையெல்லாம் தகர்த்து எரிகிறது.
கணவனுக்குப் பணிவிடை செய்யலாம்
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்த போது அங்கிருந்தவாறே (அருகிருக்கும் அறையிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (301)
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (295)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலிலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, “(அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு” என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றேன். அப்போது அவர்கள் “மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (502)
முத்தமிடலாம்
நான் நபி (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப்போர்வைக்குள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது .
மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக போர்வைக்குளிருந்து மெல்ல நழுவிச் சென்று அதை அணிந்துகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்‘ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (த் தம்மருகில்) அழைத்து அந்தப் போர்வைக்குள் என்னைக் கிடத்திக்கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி (ஸல்) அவர்களும் (ஒருமித்து) ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் மொண்டு) பெருந்துடக்கின் (கடமையான) குளியலை நிறைவேற்றுவோம்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)
நூல் : புகாரி (322)
கட்டியணைக்கலாம்
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக் கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்துகொள்வேன்.) அப்போது அவர்கள் என்னை அணைத்துக்கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (300)
மடியில் படுக்கலாம்
நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும்போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.
அறிவிப்பர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (297)