மஹரை மகத்துவப்படுத்திய  திருக்குர்ஆன்\

இறைவன் இந்த உலகத்தைப் படைத்து கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் மொழி பேசுகின்ற ஒவ்வொரு தூதர்களை இறைவன் அனுப்பி மக்களுக்கு நேர்வழி காட்டியிருக்கின்றான். மேலும், தூதர்களை இறைவன் அனுப்பும் போது, சில அற்புதங்களையும் இறைவன் கொடுத்தனுப்பியிருக்கின்றான்.

அப்படிப்பட்ட தூதர்களில் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருளை அருட்கொடையாக, அற்புதமாகக் கொடுத்து, உலகம் அழிகின்ற நாள் வரை இந்தத் திருக்குர்ஆனின் போதனைகள் அடிப்படையில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

திருக்குர்ஆனில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய, வாழ்வில் செயல்முறைப்படுத்த வேண்டிய ஏராளமான உபதேசங்கள் இறைவனால் கற்றுத் தரப் பட்டிருக்கின்றது. அத்தகைய பலதரப்பட்ட அறிவுரைகளில், உபதேசங்களில் மிகமிக முக்கியமானதும், ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாததுமான காரியம் திருமணம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வில் மாற்றத்தைத் தருவதும், மன அமைதியைத் தருவதும், மனிதன் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணிக்க மிகமிக அவசியமானது திருமணம். மணவாழ்க்கை என்பது, ஒரு மனிதனின் வாழ்வைப் புரட்டிப் போடுகின்ற நிகழ்வாகும். இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே மனிதன் சென்று விடும் அளவுக்கு மன நிம்மதியை ஏற்படுத்தி விடும்.

ஒவ்வொரு மனிதனும் கெட்ட செயல்கள் செய்வதிலிருந்தும், அருவருக்கத்தக்க காரியங்களை அரங்கேற்றுவதிலிருந்தும், கேடுகெட்ட உறவுகள் வைத்துக் கொள்வதிலிருந்தும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கின்ற மாபெரும் கேடயம் இந்தத் திருமணம்.

உலகத்தில் எந்த மதமும், மார்க்கமும், சித்தாந்தமும் சொல்லாத பல்வேறு அற்புதமான வழிகாட்டல்களை, அறிவுரைகளை இந்தத் திருமணத்தின் பொழுது செயல்படுத்துவதற்காகத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இன்னும் சொல்வதாக இருந்தால், திருமணம் எப்படி நடைபெற வேண்டும்? திருமணத்தில் ஆண் மகன் செய்ய வேண்டிய காரியம் என்ன? பெண்களின் பங்கு என்ன? என்பது போன்ற பல்வேறு சட்ட திட்டங்களை ஆணித்தரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் இஸ்லாம் ஆழப்பதிய வைக்கின்றது.

திருமணத்தின் பெயரால் நடக்கின்ற பல விதமான கேவலமான செயல்களுக்குத் திருக்குர்ஆன் மரண அடி கொடுக்கின்றது. திருமணத்தின் பெயரால் சீரழிந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குத் திருக்குர்ஆன் அற்புதமான முறையில் வழிகாட்டுகின்றது.

மஹர் – கட்டாயக் கடமை

திருமணம் முடிக்கின்ற ஆண் மகன் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான காரியம் மஹர் தொகை. மஹர் என்று சொன்னால் தன்னை நம்பி ஒப்படைக்கப்பட இருக்கின்ற மணப்பெண்ணுக்காக அதாவது, தன்னுடைய துணைவியாகக் கரம் பிடிக்கக் காத்துக் கொண்டிருக்கின்ற பெண்ணுக்காக ஆண்மகன் வாரி வழங்குவதையே மஹர் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது.

உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள்.

(அல்குர்ஆன்:4:24)

ஏதேனும் பொருட்களைக் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்றும், மணக் கொடைகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்:5:5)

கணவனில்லாத பெண்களை மணக்கும் போதும் கூட மஹர் தொகையை வழங்கியே திருமணம் முடிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் பாடம் நடத்துகின்றது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

(அல்குர்ஆன்:4:4.)

ஒரு ஆண் மகன் தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு மனமுவந்து மணக்கொடையைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகப் பெண் வீட்டாரிடமிருந்து மாப்பிளை வீட்டார் அடித்துப் பிடுங்கி வரதட்சணை என்ற பெயரால் அராஜகம் செய்வதைப் பார்க்கின்றோம்.

வல்ல இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், பெண்களுக்கு வாரிவாரிக் கொடுப்பதை விட்டுவிட்டு, கையேந்தி வரதட்சணை என்ற பெயரால் பிச்சை எடுத்து வருவதைப் பார்க்கின்றோம். வரதட்சணை என்ற கேடுகெட்ட காரியத்திற்குத் திருக்குர்ஆன் சாவு மணி அடிக்கின்றது.

இழப்பிற்கு ஈடு மஹர்

ஒரு ஆண்மகன், பெண்களுக்கு ஏன் மஹர் கொடுக்க வேண்டும்? என்ற சிந்தனையற்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய காலகட்டத்தில், நாங்களும் திருமணத்தின் போது மஹர் கொடுக்கின்றோம் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு, பதிவுப் புத்தகத்தில் வெறுமனே பெயருக்குப் பதிய வேண்டும் என்பதற்காக சில சில்லரைக் காசுகளை மஹர் தொகையாகப் பெண்களுக்குக் கொடுத்து விட்டு, பெண் வீட்டாரிடமிருந்து இலட்சக்கணக்கான தொகையைப் பொருளாக, பணமாகப் பிடுங்கிக் கொள்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.

நீங்கள் பெண்ணுக்குக் கொடுக்கின்ற 101, 201, 501, 1001 ரூபாய்கள் தான் உங்களின் வாழ்க்கைத் துணைக்கு வழங்குகின்ற மஹர் தொகையா? அவர்களின் அளப்பரிய தியாகத்திற்கும், கஷ்டத்திற்கும், சிரமத்திற்கும் நீங்கள் கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் தகுமா?

வாழ்க்கை முழுவதும் உங்கள் வீட்டில் எந்தக் கூலியையும் எதிர்பார்க்காமல், குடும்பத்திலே இருக்கின்ற அத்தனை உறுப்பினர்களுக்காகவும் ஓடாகத் தேய்ந்து உழைக்கின்ற தியாகிக்கு நீங்கள் வழங்குகின்ற பரிசுத்தொகை நூற்றி ஒன்றா? சிந்திக்க வேண்டாமா?

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, உறவினர்கள் என்ற தனது ஒட்டுமொத்த குடும்பத்தார்களையும் பரிதவிக்க விட்டுவிட்டு, யாரென்றே தெரியாத ஒரு ஆண் மகனோடு, அதாவது தன்னுடைய கணவனாகக் கரம் பிடித்தவனோடு செல்கின்றாள்.

தன்னுடைய வீட்டில் அந்தப் பெண் தான் எஜமானி. அவள் நினைத்தத்தை, எண்ணிய நேரத்தில் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்வாள். யாரும் அவளைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு ஆண்மகனைக் கரம் பிடித்த பிறகு, ‘இதைச் செய்! அதைச் செய்யாதே!’ என்று சொல்லி ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள்! அறிவுரைகள்! அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த சுதந்திரமும் திருமணத்திற்குப் பிறகு பறிக்கப்பட்டு, கைதியாக மாறி விடுகின்றாள்.

தன்னுடைய வீட்டில் பெரும்பாலும் எந்த வேலையையும் செய்யாத பெண், திருமணதிற்குப் பிறகு தன்னுடைய கணவனின் வீட்டை சுத்தப்படுத்துகின்றாள், கணவனுக்குப் பணிவிடை செய்கின்றாள், கணவனின் குடும்பத்தாருக்கு சேவை செய்கின்றாள், சமைத்துக் கொடுக்கின்றாள், துணிகளை துவைத்துக் கொடுக்கின்றாள். இதுபோன்ற ஏராளமான வேலைகளையும், பணிகளையும், மன உளைச்சல்களையும் சகித்துக் கொள்கின்றாள்.

தன்னுடைய கணவனின் வாரிசைத் தன்னுடைய வயிற்றில் சுமந்து கொள்கின்றாள். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் படுகின்ற சிரமம், கஷ்டம், சோதனை, வேதனைகளை வார்த்தைகளால் சொல்லவே முடியாத அளவுக்குப் பல்வேறு விதமான துன்பத்தை அனுபவிக்கின்றாள். சரியாக நடக்க முடியாது; படுக்க முடியாது; சாப்பிட முடியாது; சாப்பிடாமலும் இருக்க முடியாது என்று சொல்லி பலதரப்பட்ட வேதனைகளைச் சுவைக்கின்றாள்.

குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் கூட, நிம்மதியற்ற வாழ்க்கை, வேதனை தொடர்கின்றது. தன்னுடைய இரத்தத்தை உணவாகத் தனது பிள்ளைக்குக் கொடுக்கின்றாள். தூக்கத்தை தியாகம் செய்து கண்ணிமை போன்று பெற்றெடுத்த பிள்ளையைப் பாதுக்காக்கின்றாள்.

இதுபோன்ற பெண்களின் ஏராளமான தியாகங்களுக்கும், சிரமங்களுக்கும் நீங்கள் கொடுக்கின்ற சில்லறைக் காசு, கால் தூசு அளவுக்கு வருமா? பெண்களின் அனைத்து தியாகங்களையும் உள்ளடக்கும் விதமாக ஒற்றை வார்த்தையில் நறுக்குத் தெறித்தாற்போன்று இறைவன் சொல்லும்போது, ‘மனமுவந்து கட்டாயமாக வழங்கி விடுங்கள்’ என்று உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றான்.

மஹரை அள்ளிக் கொடுங்கள்

பெண்களின் ஈடு இணையற்ற தியாகத்திற்குப் பகரமாக, ஆண் மகன் எவ்வளவு கொடுத்தாலும் தகும் என்றும், எவ்வளவு கொடுத்தாலும் திரும்பக் கேட்கலாகாது என்றும் இறைவன் பதிய வைக்கின்றான்.

ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

(அல்குர்ஆன்:4:20.)

இறைவன் இந்த வசனத்தில் மஹராக, மணக்கொடையாக பெருமதிப்பையே வழங்கி யிருந்தாலும், அதாவது ஒரு மிகப்பெரும் குவியலையே கொடுத்திருந்தாலும் திரும்பப் பிடுங்கிக் கொள்ளக் கூடாது என்றும், திரும்ப வாங்குபவன் மிகப்பெரும் அக்கிரமத்தையும், பெரும் குற்றத்தையும் செய்து விட்டான் என்றும் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி எச்சரிக்கை விடுக்கின்றான்.

இந்த வசனம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? எவ்வளவு கொடுத்தாலும், விவாகரத்துச் செய்வதாக இருந்தால் கூட அந்தப் பெண்ணிடமிருந்து திருப்பிக் கேட்காதே என்றும், ஒரு குவியலையே மணக்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த வசனம் நமக்குப் பாடம் நடத்துகின்றது.

ஒரு அழகான வரலாற்றுக்குச் சொந்தக்காரரான நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றியும், அவர்கள் திருமணம் முடிக்கின்ற நேரத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பற்றியும் திருக்குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதிகப்படியான மஹர் தொகையைக் கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆர்வமூட்டி, புத்துணர்ச்சி வழங்குகின்ற ஒரு தனிச்சிறப்பை மூஸா (அலை) வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

மூஸா (அலை) அவர்களின் மண நிகழ்வைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும்போது,

“எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்’’ என்று அவர் கூறினார். “இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்’’ என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன்:28:27,28.)

மூஸா (அலை) அவர்கள் ஒரு பெண்ணைக் கரம்பிடிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண் வீட்டார் எட்டு அல்லது பத்து ஆண்டுகள் வேலை செய்து என்னுடைய புதல்வியை கரம்பிடித்துக் கொள்! என்று மஹர் தொகையைப் பேசி முடிக்கின்றார்கள். இறுதியாக மூஸா (அலை) செய்த ஒப்பந்தத்தை நிறைவு செய்து விட்டு, அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கின்றார்கள்.

பெண் வீட்டாரிடமிருந்து அடித்து அநியாயமாக வாங்குபவர்களே! இந்தச் செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும், ஆற்றலையும், திறமையையும், சக்தியையும் மஹர் தொகையாக நிர்ணயம் செய்து, அதைச் துணிச்சலோடு திறம்பட செய்து முடிக்கின்றார்.

இன்றைக்கு பத்து ஆண்டு காலம் ஒரு இடத்தில் ஒருவர் வேலை செய்கின்றார் என்றால், அந்த வேலைக்கு வழங்குகின்ற கூலியின் மதிப்பு பல இலட்சங்களாக உயர்ந்து நிற்கும். இப்படிப் பல இலட்சங்களை பத்து வருடத்திற்குக் கூலியாக வாங்கியோ அல்லது அந்தக் கூலிக்குத் தகுந்த உழைப்பை செய்து கொடுத்தோ மணக்கொடையை வாரிவாரி வழங்கியிருக்கின்றார்கள்.

மணக்கொடை இல்லையேல் மனைவி ஹராம்

இஸ்லாமிய மார்க்கம் மஹரைக் கொடுத்துத் திருமணம் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இல்லையென்றால் கரம் பிடிக்கும் மனைவி அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள் என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது.

அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை.

(அல்குர்ஆன்:60:10.)

மணக்கொடையை வழங்காமல் மணமுடிக்கக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான்.

ஆதாரம்: புகாரி-2721

மனைவியை அனுமதிக்கப்பட்டவளாக ஆக்க வேண்டுமானால் முதன்மையானது மஹர் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தெள்ளத் தெளிவாக ஆழப்பதிய வைக்கின்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தைத் தடை செய்தார்கள்’’ என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள். உடனே நான் நாஃபிஉ அவர்களிம், “ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?’’ என்று கேட்டேன். அவர்கள், “ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து கொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் சகோதரியை மணமுடித்துவைப்பதாகும்’’ என்று பதிலளித்தார்கள்.

(ஆதாரம்: புகாரி 6960)

இந்த ஷிகார் முறை திருமணத்தை, அதாவது பெண் கொடுத்துப் பெண் எடுப்பதை, மணக்கொடை இல்லாததன் காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தடை செய்கின்றார்கள் என்றால் மஹரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கட்டளையை மனிதர்கள் முறையாகவும், சரியாகவும் பின்பற்றாத காரணத்தினால் தான் வரதட்சணை என்ற வன்கொடுமை, அதாவது பெண்கொடுமை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கோரமான, கொடூரமான செயலை சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டுமானால், மஹர் கொடுத்துத் திருமணம் முடித்து, மஹரை மகத்துவப்படுத்துங்கள்!

திருக்குர்ஆனின் போதனைகளைப் பின்பற்றி நடந்து மஹரைக் கொடுத்து திருமணம் முடிப்போம்! வரதட்சணை என்ற வன்கொடுமையைக் குழிதோண்டி புதைப்போம் அப்படிப்பட்ட நன்மக்களாக அல்ல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed