மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 868, 707

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள், “என்னருமை மகனே! இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்” என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 763, திர்மிதி 283

“(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1203, திர்மிதி 337

நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி 837, 866, 875

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 867, 372, 578, 872

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். “இப்பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்திருக்கவில்லை என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 864, 866, 569, 862

“உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது” என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)

நூல்: முஸ்லிம் 674

“உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு “நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 666

இப்னு உமர் (ரலி) அவர்கள், “இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னதும் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார், “பெண்களை வர விட மாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார். உடனே அவரைக் கடுமையாக வெறுத்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்கிறேன்.  நீ வர விட மாட்டேன் என்கிறாயா?” என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஜாஹித்

நூல்: முஸ்லிம் 670

அடுக்கடுக்காகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஹதீஸ்களெல்லாம் மகளிருக்கும் மஸ்ஜிதுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய இந்த வழிமுறை,  நடைமுறையில் இல்லாமல் இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண்கள் அறவே அனுமதிக்கப்படுவதில்லை. விதிவிலக்காக எங்காவது ஒரு சில பள்ளிகளில் ரமளானில், அதுவும் தனியாக ஜமாஅத் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இது தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குக் கதவுகள் சாத்தப்பட்டுத் தான் உள்ளன.

“பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 480

இந்த ஹதீஸைத் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாகக் காட்டி பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றனர். சிறந்தது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வந்தால் தடை செய்யக் கூடாது என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

பெண்களுக்கான இந்த வாசல் அடைக்கப்பட்டதால் தான் அவர்கள் தர்ஹாக்களின் பக்கம் சென்றனர். இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் அருளால் இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed