மறுமையில் மனிதன் அல்லாஹ்விடம் பொய் பேச முடியுமா❓
மறுமையில் இரண்டு நிலைகளை கெட்ட மனிதன் எதிர்கொள்வான்.
- விசாரணை என்கின்ற ஒரு நிலை.
- நரகில் கொண்டு செல்லப்படும்/தண்டிக்கப்படும் நிலை.
நரகை கண் முன்னே காணும் அவன், ஐயயோ போச்சே..எல்லாம் முடிந்து விட்டதே என கைசேதப்படுவதாக குர் ஆன் நெடுகிலும் பல வசனங்களிலும் அல்லாஹ் சுட்டிக் காட்டி,
நரகில் இழுத்து செல்லப்படும் போதும், அதிலே போட்டு தண்டிக்கப்படும் போதும் மனிதன் தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு புலம்புவான் என விளக்குகிறான்.
இது போன்ற வசனங்களை எடுத்துக் காட்டி மறுமையில் காஃபிர்கள் அல்லாஹ்விடம் பொய்யே பேச மாட்டார்கள் என்பதாக தவறாக சிலர் புரிகின்றனர்.
நரகில் போடப்படும் போது தான் பொய் பேச மாட்டார்களே தவிர, அதற்கு முன் நிகழ்கின்ற விசாரணைகளின் போது அல்லாஹ்விடம் அவன் பொய் பேசுவான் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
நாம் அனைவருமே கேள்விப்பட்ட சம்பவம் – மூவர் விசாரிக்கப்படுவர். வள்ளல், மார்க்க அறிஞர், உயிர்த்தியாகி.
அனைத்தையும் உனக்காக தான் செய்தேன் என்பார்கள்.
நீ செய்தது உண்மை, ஆனால் எனக்காக செய்ததாக சொல்வது பொய் என்று அல்லாஹ் பதில் கூறுவானே..(பார்க்க முஸ்லிம் 3865)
அந்த ஹதீஸும் விசாரணையின் போது மனிதன் பொய்யுரைப்பதை காட்டுகிறது.
அதே போல் கீழ்காணும் ஹதீஸ் :
(ஹதீஸின் ஒரு பகுதி) …… அதற்கு அந்த அடியான், என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய் தேன் என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.
அப்போது இறைவன், நீ இங்கேயே நில் என்று கூறுவான். பிறகு அவனிடம், இப்போது உனக் கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம் என்று கூறுவான். அந்த மனிதன், தனக் கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான்.
அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து பேசுங்கள் என்று சொல்லப்படும்.
அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்(5678)
உன்னை நம்பி, உனக்காக தொழுது வணங்கினேன் என்று அவன் சொல்கிற போது
••> அது பொய் என்பதால் தான் அவனது வாய்க்கு சீல் வைக்கப்பட்டு, உடல் உறுப்புகளை சாட்சிக்கு அழைப்பான் அல்லாஹ்.
••> அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். என்பதும் அவன் பேசுவது பொய் என்பதை காட்டுகிறது.
••> இறுதியில் அவனை முனாஃபிக் என்று நபிகளார் சொல்கின்றார்கள்.
உள்ளொன்று வைத்து, உதட்டளவில் மாற்றிப் பேசுபவன் தான் முனாஃபிக்..!
இதிலிருந்தும் அவன் பொய் பேசினான் என்று தெரிகிறது.
ஆக, விசாரணையின் போது சிலரை பொய் பேசவும் அல்லாஹ் அனுமதிப்பான் !
அந்த அடிப்படையில் நூஹ் நபி சமூகம் பொய் பேசியது ஒன்றும் வியப்பானதல்ல.
அந்த அறிவிப்பினை மறுக்க தேவையுமில்லை !!
ஆக்கம்: நாஷித்