மரணிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு யாஸீன் சூரா

மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மஅகில் பின் யஸார் (ரலி) நூல்கள் : அபூதாவூத்-2814, இப்னுமாஜா-1438

யாஸீன் (அத்தியாயம்) குர் ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படாமல் இருப்பதில்லை உங்களில் மரண வேளை நெருங்குபவர்களிடம் அதை ஓதுங்கள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மஅகில் பின் யஸார் (ரலி) நூல் : அஹ்மத்-19415

இச்செய்தி இப்னுமாஜா 1438, நஸாயீ அவர்களின் ஸுனனுல் குப்ரா 10847 உள்ளிட்ட பல நூற்களில் இடம் பெற்றுள்ளது. இந்த அனைத்து ஹதீஸ்களிலும் மஅகில் பின் யஸார் (ரலி) கூறியதாக அபூ உஸ்மான் என்பாரின் தந்தை இந்த ஹதீஸை அறிவிக்கிறார். அவரிடமிருந்து அபூ உஸ்மான் அறிவிக்கிறார்.

அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறிகின்றனர். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

மரணமடையும் எவரது முன்னிலையில் யாஸீன் ஓதப்பட்டாலும் அல்லாஹ் அவருக்கு வேதனையை இலேசாக்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி) அபூதர் (ரலி), நூல் : முஸ்னத் பிர்தவ்ஸ்-6099

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் சாலிம் பின் மர்வான் பலவீனமானவராவார். ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனுமளவு இவரை அறிஞர் ஸாஜி விமர்சித்துள்ளார் ஹதீஸ்துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி, முஸ்லிம், ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 10 பக்கம் 84

எனவே மரண வேளை நெருங்கியவர் முன்னிலையில் யாஸீன் ஓத வேண்டும். என்று வருகின்ற எந்த ஹதீஸுமே சரியான ஹதீஸ் கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இது போன்ற காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.

எனவே யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி வருகின்ற அனைத்து செய்திகளும் பலவீனமானதாகும். எனினும் குர்ஆனை ஓதினால் ஒர் எழுத்திற்கு பத்து நன்மைகள் உண்டு என்பது நபிமொழி.

‘அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி); நூல் : திர்மிதி-291

இந்நபிமொழியின் படி யாஸீன் அத்தியாயத்தை ஓதும் போது ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள் எனும் பொதுவான நன்மைகள் நிச்சயம் கிடைக்கும்.

மேற்கண்ட பலவீனமான செய்திகளில் உள்ளது போன்ற நன்மை. கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed