மன்னிப்பு பெற்றுத் தரும் இறையச்சம்

கொடுக்கல் வாங்கல், மற்றவர்களுடன் பழகுதல் என்று பலவிதமான செயல்களில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ தீமையான காரியங்களையும் செய்துவிடுகிறோம். இவ்வாறான நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெற வேண்டுமெனில், தனிமையிலும் அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு எழ வேண்டும்.

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

திருக்குர்ஆன் 67:12

மிகைத்தவனிடம் வெகுமதியைத் தேடுவதற்குப் பதிலாக, மக்களிடம் உலக ஆதாயங்களைத் திரட்டிக் கொள்வதற்காக சில ஆலிம்கள் மார்க்கத்தின் உண்மையான அடிப்படையை மறைத்து விடுகிறார்கள். கௌரவம் குறைந்துவிடுமெனக் கருதி சத்தியக் கருத்துகளில் இருட்டடிப்புச் செய்கிறார்கள். இத்தகைய நபர்கள் அல்லாஹ்வைப் பயந்து தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:159,160

இம்மையிலே கிடைக்கும் இறையுதவி

திரைமறைவில் இருக்கும்போதும் படைத்தவனை நினைத்து திருத்திக் கொண்டால் இவ்வுலகிலேயே அவனுடைய உதவி நமக்குக் கிடைக்கும். துன்பங்கள், சிரமங்கள் ஆகியவற்றிலிருந்து அவன் நம்மைக் காப்பான். இதைப் பின்வரும் சம்பவம் மூலம் புரிந்து கொள்ள இயலும்.

‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றனர்.

அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.

ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துஎனக் கூறினார். அவ்வாறு இடைவெளி உண்டானது.

மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்குஎனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்குஎனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2215

அல்லாஹ்வை அஞ்சி மோசடி இல்லாமல் வியாபாரம் செய்தால் அதிலே பரக்கத் எனும் அருள் வளம் கிடைக்கும்.  பொய் பேசாமல், புறம் பேசாமல், அவதூறு கூறாமல், அடுத்தவர் மீது இட்டுகட்டாமல் தனிமனித ஒழுக்கத்தோடு நேர்மையாக வாழ்ந்தால் அவனது அன்பும் அரவணைப்பும் நிச்சயம் கிடைக்கும். இதைப் பெரும்பாலோர் புரிந்து கொள்வதில்லை.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *