மனோ இச்சைப்படி ஹதீஸ்களை மறுக்கிறோமா?

ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மனோஇச்சைக்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுக்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டையும் நம்மை எதிர்ப்பவர்கள் முன்வைக்கின்றார்கள். அவர்களின் இந்தச் குற்றச்சாட்டு தொடர்பாகவும் நாம் இங்கு விளக்கியாக வேண்டும்.

அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறும் போது நம்மை எதிர்ப்பவர்கள் மனோ இச்சை காரணமாகவே இவர்கள் ஹதீஸ்களை மறுக்கின்றார்கள்” என்று குற்றம் சாட்டி வருகின்றார்கள். இவர்கள் நம்மீது குற்றம் சுமத்துவதைப் போல் மனோ இச்சைப்படி நாம் நினைத்தவாறு ஹதீஸ்களை மறுப்பதாக இருந்தால் எத்தனையோ ஹதீஸ்களை சகட்டு மேனிக்கு மறுத்திருக்க வேண்டுமே?

புனித அல்குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணம் காட்டி நாம் சில செய்திகளை மறுத்திருக்கிறோமே ஒழிய மனோஇச்சைக்காக எந்த ஹதீஸ்களையும் நாம் மறுக்கவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அடி வானத்திற்கு இறங்குகின்றானா? இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது இறைவன் அடிவானத்திற்கு இறங்கி வருவதாக புகாரியில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது கீழ்வானிற்கு இறங்கி வந்து, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 7494

மேற்கண்ட செய்தியில் இறைவன் ஒவ்வொரு நாளும் இரவில் மூன்றிலொரு பங்கு மீதமிருக்கும் போது கீழ்வானத்திற்கு இறங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அல்குர்ஆனில் அல்லாஹ்வின் இருப்பிடம் அர்ஷ் என்று குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன்:7:54)

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
(அல்குர்ஆன்:10:03.)

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று குர்ஆனில் உள்ள செய்தியை நாம் நேரடியாக ஏற்றுக் கொண்டால் அவன் அடிவானத்திற்கு வரவில்லை என்று அர்த்தம். அல்லது

அல்லாஹ் அடிவானத்திற்கு வருகின்றான் என்று குறித்த ஹதீஸின் நேரடிக் கருத்தில் இதனைப் புரிந்து கொண்டால் அல்லாஹ் அர்ஷில் இல்லையென்று ஆகிவிடும்.

இரவு பகல் மாறிமாறி வருவதினால் இந்த நிமிடத்தில் கூட உலகில் ஏதாவது ஒரு நாட்டு மக்கள் இரவின் மூன்றிலொரு பகுதியை அடைந்திருப்பார்கள்.

அப்படியானால் இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதற்காக இப்போதும் கீழ் வானத்தில் இருக்க வேண்டும். மொத்தத்தில் உலகில் ஒவ்வொரு நாடும் இரவில் மூன்றில் கடைசிப் பகுதியை அடையும் போது இறைவன் கீழ்வானத்தில் இருக்க வேண்டிவரும். அப்படியானால் இறைவன் அர்ஷில் இல்லை. கீழ்வானத்தில் தான் இருக்கின்றான் என்ற நிலை உருவாகிவிடும்.

\மாற்று விளக்கம் கொடுக்க வேண்டிய செய்தி\

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற அல்குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் இடம் பெறுவதினால் குறித்த ஹதீஸ் விஷயத்தில் தெளிவானதொரு முடிவுக்கு வரவேண்டும். அந்த வகையில் இறைவன் ஒவ்வொரு இரவிலும் மூன்றில் கடைசிப் பகுதியில் கீழ் வானத்திற்கு வருகின்றான் என்றால் இறைவன் நேரடியாக வருவதில்லை. அவனுடைய விசேட கண்காணிப்பைச் செலுத்துகின்றான் என்று விளக்கம் அளிக்கின்றோம்.

காரணம் என்னவென்றால் இறைவனே நேரடியாக கீழ்வானத்திற்கு வருகின்றான் என்றும் நாம் குறித்த ஹதீஸைப் புரிய முற்பட்டால் இறைவன் அர்ஷில் இல்லை என்ற நிலைக்குச் செல்ல வேண்டி ஏற்படும். இந்நிலை குர்ஆனை மறுப்பதற்கு சமமானதாகும். ஆகவே தான் இறைவன் வரவில்லை. அவனுடைய விசேட கண்காணிப்பைச் செலுத்துகின்றான் என்று மாற்று விளக்கம் கொடுக்கின்றோம்.

அல்லாஹ்வைப் பற்றிய செய்திகளுக்கு மாற்று விளக்கமளிக்கக் கூடாதா? இறைவனைப் பற்றி இறைவன் எப்படியெல்லாம் கூறியிருக்கின்றானோ அதனை அப்படியே நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாற்று விளக்கம் கொடுக்கலாகாது என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை.

அல்லாஹ்வைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ள வர்ணனைக்கு மாற்றமாக ஹதீஸ் இடம் பெற்றால் அப்போது அல்குர்ஆனின் கருத்துக்களைத் தான் நாம் முற்படுத்த வேண்டுமே தவிர ஹதீஸ்களின் கருத்துக்களை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காரணம் அல்குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேசமாட்டார்கள். அல்லாஹ் கீழ்வானத்திற்கு இறங்கி வருதல் பற்றிய செய்தியைப் பொருத்த வரையில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற அல்குர்ஆனின் வார்த்தைகளுக்கு முரணாக இது அமைந்திருக்கின்றது.

ஆகவே தான் அல்குர்ஆனுக்கு முரணில்லாத வகையில் அதனைப் புரிய வேண்டும் என்பதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் மாற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாம் வாதிடுகின்றோம். அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்கி வருகின்றான் என்று கூறுவதை விட அல்லாஹ்வின் விசேட கண்காணிப்பைச் செலுத்துகின்றான் என்று கூறும் போது குறித்த ஹதீஸையும் ஏற்றுக் கொண்டு, அல்குர்ஆனின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகின்றது.

ஆகவே தான் இப்படியான மாற்று விளக்கத்தை நாம் கொடுக்கின்றோம். மனோஇச்சைப்படி ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்று நம்மைப் பார்த்து மாற்றுக் கருத்துடையோர் சொல்லும் விமர்சனம் உண்மையென்றால், நாம் இந்த இடத்தில் இறைவன் கீழ்வானத்திற்கு இறங்கும் செய்தியை முழுமையாக மறுத்திருக்க வேண்டுமல்லவா?

ஆனால் நாமோ மாற்று விளக்கம் கூறி ஹதீஸை அது உண்மையான ஹதீஸ் தான் என்று நிறுவியிருக்கின்றோம். இப்போது சிந்தித்துப் பாருங்கள்! ஹதீஸ்களை மனோ இச்சைப்படி தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கிறதா? அல்லது ஏற்றுக் கொள்கின்றதா? என்பது தெளிவாகப் புரிந்து விடும்.

www.eagathuvam.com

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *