*மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்?*

மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் *இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லாதவரை* நாம் நேசித்துக் கொள்ளலாம்.

நாம் யாரை *நேசித்தாலும் பகைத்தாலும் அல்லாஹ்விற்காக எந்த அடிப்படையிலே* அமைந்திருக்க வேண்டும். *இறை நேசத்தை விட வேறு எதுவும் நம்மிடம் மோலோங்கி* விடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்.* (அவை:)

*1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.*

*2.ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.*

*3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை மறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.*

*அறிவிப்பவர் :* அனஸ் (ரலி)
*நூல் :* புகாரி (16)

நாம் அல்லாஹ்வைப் போன்று யாரையும் நேசிப்பது கூடாது.

*அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.*

*அல்குர்ஆன்:* (2:165)

அல்லாஹ்வை நேசிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லாமல், *அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது* என்றும், அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். *மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூமின்கள்* என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.

*யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார்.* இய்யாக நஃபுது’ (இறைவா உன்னையே வணங்குகிறோம்) எனும் உறுதிமொழியை மீறியவராவார். *இறைவனளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது* என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

*அல்லாஹ் மட்டும் கூறப்படும்போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.*

*அல்குர்அன்:* (39:45)

இறைவனின் பெயரைக் கூறும்போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும்போது ஒருவனுக்கு ஏற்படுமானால் இறைவனின் அழைப்பை, *பாங்கைக் கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும்போது ஒருவனுக்கு ஏற்படுமானால்*, அவனது உள்ளத்தில் *இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடி கொண்டுள்ளது* என்று பொருள். இய்யாக நஃபுது‘ என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை.

இறைவனது கட்டளை இதுதான் என்று கூறப்படும்போது *எனது தந்தை,எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்!* இய்யாக நஃபுது’ என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

பின்வரும் வசனங்களில் நாம் இறைவனை விட வேறு யாரையும் நேசிக்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

*”உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும்,உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும்,நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும்வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!*

*அல்குர்ஆன்:* (9 : 24)

அல்லாஹ்வை நேசித்தல் என்பது இறைச் செய்திகளைப் பெற்றுத் தந்த நபிகள் நாயகத்தை நேசிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

*“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’‘எனக் கூறுவீராக!*

*அல்குர்ஆன்:* (3:31,32)

*நம்பிக்கை கொண்டோருக்கு தங்களைவிட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.*

*அல்குர்ஆன்:* (33 : 6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.*

*அறிவிப்பவர் :* அனஸ் (ரலி)
*நூல் : புகாரி* (15)

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
*நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்என்று சொன்னார்கள்.*

*அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும்வரை (நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள்.*

*உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.*

*நூல் :* புகாரி (6632)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *