இவ்வசனங்களில் (2:30, 6:133, 6:165, 7:69, 7:74, 7:129, 7:142, 7:150, 7:169, 10:14, 10:73, 11:57, 19:59, 24:55, 27:62, 35:39, 38:26, 43:60, 57:7) கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப் போன பின் அவரது இடத்தைப் பெறுபவர்” என்ற பொருளில் இச்சொல் சில வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் என்ற பொருளிலும் கலீஃபா என்ற சொல் சில வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் கணவர் இறந்த பின் இன்னொருவரை அப்பெண் மணந்தால் இரண்டாம் கணவரை முதல் கணவரின் கலீஃபா எனலாம். முதல் கணவரின் இடத்தை அவர் நிறைவு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களிலும் இதற்குச் சான்று உண்டு.

(பார்க்க : முஸ்லிம் 1674, 1675, 1676)

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் கலீஃபா எனக் கூறியது வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் என்ற கருத்தில் தான். அதனால் தான் ஒரு கலீஃபாவைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் கூறியவுடன் “அவர்கள் இரத்தம் சிந்துவார்களே” என்று வானவர்கள் கூறினர்.

இந்தச் சொல்லிலிருந்து ஆதமுக்கு ஒரு துணைவி படைக்கப்படுவார் என்பதையும், அவ்விருவர் வழியாக மக்கள் பெருகி தமக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதையும் வானவர்கள் விளங்கிக் கொண்டனர்.

எனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றி கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும்போது வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலைமுறை) என்ற பொருளிலும், மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும்போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் சில மொழிபெயர்ப்பாளர்கள் ஆதம், அல்லாஹ்வின் கலீஃபா என்று விளக்கம் கொடுத்துள்ளனர். அல்லாஹ்வுக்கு மரணமோ, இயலாமையோ ஏற்படாது. அவனது இடத்தை யாரும் நிரப்பவும் முடியாது. எனவே மனிதன் அல்லாஹ்வுக்கு கலீஃபாவாக பிரதிநிதியாக ஆக முடியாது என்பதால் இது தவறாகும்.

மனிதனுக்கு மற்றொரு மனிதன் கலீஃபாவாக பிரதிநிதியாக இருக்க முடியும் என்பதை 7:142 வசனத்தில் இருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்ட அபூபக்ர் (ரலி) அவர்களை நபிகள் நாயகத்தின் கலீஃபா (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதி) என்று அழைத்ததும் இந்தப் பொருளில் தான்.

இறைவன் மறைய மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான் என்பதால் அவனுக்குப் பிரதிநிதியாக யாரும் இருக்க முடியாது.

அல்லாஹ் மனிதனுக்குப் பிரதிநிதியாவான். (முஸ்லிம் 2612) அல்லாஹ்வுக்கு மனிதன் பிரதிநிதியாக முடியாது.

எனவே கலீஃபாவுக்கு அல்லாஹ்வின் பிரதிநிதி என்று சிலர் மொழி பெயர்த்திருப்பது மிகவும் தவறாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *