மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம்

ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஏதேனும் விதத்தில் சார்ந்திருப்பவனாக இருக்கிறான். அவ்வாறு சார்ந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை சர்வ சாதரணமாகப் புண்படுத்திவிடுகின்றனர்.

உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, சொல்லாலோ அல்லது செயலாலோ மற்றவர்கள் புண்படும் படி நடந்துகொள்கின்றனர்.

இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக சம்பந்தபட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தமது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கின்றனர்.

இவ்வாறு சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பு வழங்குவதில்லை. மறுமையில் மிகப்பெரிய கைசேதமும் ஏற்படும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5037

இதுபோன்று மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் காரியத்திலிருந்து நாம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக நாம் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் நமது மரணத்திற்கு முன்னால் அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். இதை கவுரவக் குறைச்சலாக எண்ணக் கூடாது.

அவ்வாறு எண்ணி மன்னிப்பு கேட்காமல் இருந்துவிட்டால் நிலையான வாழ்க்கையாகிய மறுமையில் மிகப்பெரும் அவமானமாகவும் இழப்பாகவும் மாறிவிடும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *