மடமையான சட்டங்கள்

இமாமை அறுத்து குர்பானி கொடுக்கலாம்.

மத்ஹபு அறிஞர்கள் எந்த அளவு மூடர்களாக இருந்துள்ளனர் என்பதற்கும், ஆபாசமாகச் சிந்திப்பதையே ஆய்வு என்று கருதியுள்ளனர் என்பதற்கும் பின் வரும் அதிசயச் சட்டம் ஆதாரமாக அமைந்துள்ளது.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஆண் பிராணி (அதாவது ஆடு, மாடு ஒட்டகம் போன்றவை) ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு அதன் காரணமாக அப்பெண் மனித வடிவில் ஒரு பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளையை அறுத்துச் சாப்பிடலாம். அந்தப் பிள்ளை குர்ஆனை மனனம் செய்து, இமாமாகப் பணியாற்றி நமக்கு ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தலாம். அவ்வாறு நடத்தி முடித்தவுடன் அவரையே குர்பானி கொடுக்கலாம். எங்களுக்கு ஒரு இமாம் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தினார். அவரையே நாங்கள் குர்பானி கொடுத்தோம் என்ற விடுகதை இது பற்றியே சொல்லப்படுகிறது.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத்தாலிபீன்

ஆபாசம் பரவலாகாத காலத்திலேயே எவ்வளவு கேவலமாகக் கற்பனை செய்துள்ளனர் என்று பாருங்கள்! ஒரு பெண்ணிடம் ஒரு காளை மாடு உறவு கொண்டு மனிதப் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியுமா? காளை மாட்டின் தோற்றத்தில் அந்தப் பிள்ளை இருந்தால் கூட காளை மாட்டுக்குப் பிறந்தவன் என்று சொல்ல சிறிதளவாவது இடமிருக்கும். மனித வடிவிலும், மனிதனுக்கு உள்ள பகுத்தறிவுடனும் அந்தக் குழந்தை இருக்கும் போது அது மாட்டுக்குப் பிறந்த குழந்தை என்று எப்படிக் கண்டு பிடித்தார்கள்? மத்ஹபு ஆலிம்சாக்களுக்கு ஆபாசமே ஆய்வாக இருந்துள்ளது என்பது இதிலிருந்து விளங்கவில்லையா? பொது அறிவும், விஞ்ஞான அறிவும் அறவே இல்லாத மூடர்கள் எழுதிய சட்டங்களே மத்ஹப் என்பது இதிலிருந்து புலப்படவில்லையா?

பன்றிக்குப் பிறந்த மனிதன்

இது போல் அமைந்த மற்றொரு சட்டத்தைப் பாருங்கள்!

ஒரு நாய், அல்லது பன்றி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு அதன் காரணமாக அப்பெண் மனிதப் பிள்ளையைப் பெற்றெடுத்தால் அப்பிள்ளை அசுத்தமானவனாவான். அப்படி இருந்த போதும் தொழுகை உள்ளிட்ட வணக்கங்களைச் செய்யக் கடமைப்பட்டுள்ளான். அவனைத் தொடும் நிலையைத் தவிர்க்க முடியாது என்பதால் தொடுவது மன்னிக்கப்படும். அவன் இமாமாக தொழுகை நடத்துவதும் செல்லும். அவன் மீது ஈரம் இல்லாவிட்டால் ஜமாஅதுக்காக அவன் பள்ளிவாசலுக்குள் நுழையலாம்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்

கேடுகெட்ட இந்தப் பன்றிகள் தான் அறிஞர்களா? இதன் பிறகும் மத்ஹபைப் பின்பற்ற உங்கள் மனம் இடம் தருகிறதா?

ஊரை அடித்து உலையில் போடலாம்

ஒரு மனிதன் தனக்கு உரிமையானதைத் தான் விற்க முடியும். உரிமையில்லாத எதனையும், எவரும் விற்க முடியாது. அறிவுடைய எந்த மனிதரும் இதை மறுக்கமட்டார். ஆனால் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல் கூறுவதைப் பாருங்கள்.

பொதுவழியை விற்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் செல்லும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

மத்ஹப் நூலில் உள்ள இந்தச் சட்டம் எந்த வசனத்தில் இருந்து, அல்லது எந்த ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டது? இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மத்ஹபு நூல்களை எழுதியவர்கள் எந்த அளவுக்கு அறிவீனர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டாகும்.

விற்கக்கூடாதவைகளைப் பிறர் மூலம் விற்கலாம்

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட வியாபாரத்தை முஸ்லிம் அல்லாதவரை வைத்து செய்யலாம் என்று ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல் கூறுகிறது.

சாராயத்தை வாங்கிவருமாறு, அல்லது விற்குமாறு ஒரு கிறித்தவரிடம் முஸ்லிம் கூறுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹனீஃபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகளை முஸ்லிமல்லாதவர்கள் மூலம் விற்று சம்பாதிக்கலாம் என்ற இந்தச் சட்டத்தை அபூஹனீஃபா அவர்கள் எந்த ஆதாரத்தில் இருந்து எடுத்தார்? தடை செய்யப்பட்டவைகளைப் பிறரை வைத்தும் வியாபாரம் செய்து சம்பாதிப்பதும், தானே வியாபாரம் செய்வதும் சமமானவை என்பது கூட மத்ஹப்வாதிகளுக்கு விளங்கவில்லை.

விபச்சார விடுதி, சாராயக் கடை, மற்றும் சினிமா தியேட்டர்களை முஸ்லிம் அல்லாதவர்கள் மூலம் நடத்தி சம்பாதிக்கலாம் என்று மத்ஹப் ஃபத்வாவை நம்பி செயல்பட்டால் நமது மறுமை வாழ்வு என்னாகும்? என்று சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ் தடை செய்ததற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுமே?

மூத்திர வைத்தியம்

ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினாலும், இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி அவரது நெற்றியிலும், மூக்கிலும் எழுதலாம். அதில் நிவாரணம் இருப்பதாக அறியப்பட்டால் இவ்வாறு செய்யலாம். ஆயினும் அவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று தகவல் இல்லை.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அல்லாஹ்வின் வேதத்தை, வேதத்தின் உயிர் நாடியான அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தால் நெற்றியில் எழுதச் சொல்வது தான் நேர்வழியா? குர்ஆனை இவ்வளவு அவமதிக்கத் துணிந்தவர்கள் இமாம்களா? அல்லது ஷைத்தானின் வாரிசுகளா?

தாகமாக இருப்பவர் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படுவது போல் வறுமை நேரத்தில் செத்த பிணத்தைச் சாப்பிட அனுமதிக்கப்படுவது போல் இதற்கும் அனுமதியளிக்கப்படும். இதுதான் ஃபத்வா!

அதே நூல், அதே பக்கம்

இதற்கு அனுமதி வழங்குவது தான் சரியான கருத்து. இதனடிப்படையில் தான் ஃபத்வா கொடுக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக இந்த நூல் கூறுகின்றது.

ஹவ்வாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டது ஏன்?

தடுக்கப்பட்ட மரத்திலிருந்து ஹவ்வா சாப்பிட்டது தான் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டதற்கான காரணம்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இப்படி அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறியிருக்கின்றார்களா?

அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன.

(திருக்குர்ஆன்:7:19.)

வெட்கத் தலங்கள் வெளியாகின என்று தான் அல்லாஹ் கூறுகின்றானே தவிர இதனால் தான் மாதவிடாய் ஏற்பட்டது என்று கூறவில்லை. மேலும் இந்த வசனத்தில் இருவருமே மரத்திலிருந்து சுவைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களது இந்த அற்புதமான கண்டுபிடிப்பின் படி பார்த்தால் ஆதம் (அலை) அவர்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டிருக்க வேண்டும். மத்ஹபு நூல்களை எழுதியவர்கள் எவ்வளவு பெரிய மடையர்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.

கஅபா இடம் பெயர்ந்தால்?

மத்ஹபுச் சட்ட நூல்களை எழுதியவர்களுக்கு கடுகளவு கூட அறிவு இல்லை என்பதை மேலும் காணுங்கள்!

கராமத் உடையவர்களைச் சந்திப்பதற்காக கஅபா ஆலயம் இடம் பெயர்ந்து விட்டால் அது அமைந்திருந்த இடத்தை நோக்கித் தொழலாம்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அல்லாஹ்வை வணங்குவதற்காக உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் என்ற சிறப்பு கஅபாவுக்கு உள்ளது. ஆனால் கஅபா ஆலயத்துக்குப் பகுத்தறிவு கொடுக்கப்படவில்லை.

கஅபாவின் மீது சத்தியமாக என்று நபித்தோழர்கள் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்து கஅபாவின் இறைவன் மீது ஆணையாக என்று சொல்லுமாறு வழிகாட்டியுள்ளனர்.

ஆனால் மகான்களைக் கண்டுபிடித்து அவர்களைச் சந்திப்பதற்காக கஅபா இடம் பெயரும் என்று எழுதும் அளவுக்கு இவர்களுக்கு மூளை செயலிழந்து உள்ளது. கஃபா ஆலயம் எவரையும் சந்திப்பதற்காக இடம் பெயரும் என்று அல்லாஹ் கூறியுள்ளானா?

கஅபா எனும் புனித ஆலயத்தை மக்களுக்காக நிலையானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 5: 97)

இருக்கும் இடத்தை விட்டு கஅபா அசையாமல் நிலையானதாக இருக்கும் என்று அல்லாஹ் கூறியிருக்க அதற்கு மாற்றமாகக் கதையளந்துள்ளனர்.

கஅபா இடம் பெயரும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக அது மதீனாவிற்குச் சென்றிருக்குமே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய வந்தபோது ஊரின் எல்லையில் அவர்களை வரவேற்கச் சென்றிருக்குமே? இப்படிப்பட்ட அறிவிலிகள் உருவாக்கிய சட்டம் நம்மை நேர்வழிப்படுத்துமா?

பிறையைச் சுட்டிக் காட்டக்கூடாது

பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதை நாம் அறிவோம். தலைப்பிறை ஒளி குறைவாகவும் சிறிய அளவிலும் உள்ளதால் எளிதில் அனைவரின் கண்களுக்கும் புலப்படாது. நூற்றுக் கணக்கானோர் திரண்டு பிறை பார்த்தாலும் சிலருக்கு மட்டுமே தென்படும். யாருடைய கண்களுக்குப் பிறை தென்பட்டதோ அவர்கள் பிறை எங்கே இருக்கிறது என்று விரலால் சுட்டிக்காட்டும் போது மற்றவர்களும் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் மறைகழன்ற மத்ஹப் சட்ட வல்லுனர்கள் வகுத்த சட்டத்தைப் பாருங்கள்!

பிறையைப் பார்த்தால் அதன் பக்கம் சுட்டிக் காட்டுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனென்றால் இது அறியாமைக்கால பழக்கவழக்கங்களில் உள்ளதாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முஹ்தார்

பிறையைப் பார்த்தால் சுட்டிக்காட்டாமல் வேறு எப்படி மற்றவர்களுக்கு காட்ட முடியும்? இது அறியாமைக் காலப் பழக்கம் என்பதற்கு என்ன ஆதாரம்?

சகுனத்தை நியாயப்படுத்தும் மத்ஹபு

இஸ்லாத்தில் சகுனத்துக்கு இடமில்லை என்பதை சிறிதளவு மார்க்க அறிவு உள்ளவர்களும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் மத்ஹபு கூறுவதைப் பாருங்கள்

இப்போது நம்முடைய காலத்தில் புதன் கிழமையன்று நோயாளியை நலம் விசாரிப்பதைக் கெட்ட சகுனமாக மக்கள் கருதுகின்றார்கள். புதன் கிழமையன்று நோயாளியை விசாரிக்கச் செல்வதால் அவருக்கு இதன் மூலம் இடையூறு ஏற்பட்டால் அதை விட்டு விடுவது அவசியமாகும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முஹ்தார்

புதன் கிழமை நோய் விசாரிக்கச் சென்றால் நோய் அதிகமாகும் என்று மக்கள் கருதுவதால் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நாமும் அதைத் தவிர்க்க வேண்டுமாம்.

சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது (ரலி)

நூல் : அபூதாவூத் 3411

நபிமொழிக்கு மாற்றமாக மக்களின் நம்பிக்கை இருந்தால் நபிமொழியைத் தூக்கி வீசலாம் என்று இதன் மூலம் சொல்ல வருகின்றனர். மார்க்கம் தடுத்த காரியங்களை மக்கள் செய்தால் அதைத் தடுப்பதுதான் மார்க்கக் கடமை. இவர்களோ மக்கள் தமது நம்பிக்கைப்படி என்ன செய்தாலும் அதை மறுக்கக் கூடாது என்று போதித்து முஸ்லிம்களை நரகில் தள்ளப் பார்க்கின்றனர்.

ஆலிம்கள் மட்டும் போதைப் பொருள் சாப்பிடலாம்

மத்ஹபு நூல்களில் ஹராம், ஹலாலுக்கு இடையே மக்ரூஹ் என்ற ஒரு வகையை உருவாக்கியுள்ளனர். ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டது என்று பொருள். ஹராம் என்றால் தடுக்கப்பட்டது என்று பொருள். மக்ரூஹ் என்றால் அதைச் செய்யலாம்; ஆனால் வெறுக்கத்தக்கது என்று பொருள். போதைப் பொருட்களான கஞ்சா, அபின் போன்றவைகளை உட்கொள்வது ஹராம் அல்ல. மக்ரூஹுடன் அனுமதிக்கப்பட்டதாகும் என்று ஷாஃபி மத்ஹப் சட்ட நூல் கூறுவதைப் பாருங்கள்!

கஞ்சா, அபின் ஆகியவற்றைக் கொஞ்சமாகச் சாப்பிடலாம் என்பதன் கருத்து என்னவெனில், அது அறிவில் தளர்ச்சியையோ, பாதிப்பையோ ஏற்படுத்தாத அளவாகும். அதிகம் என்பதன் கருத்து, அறிவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். எனவே மக்ரூஹுடன் கொஞ்சம் சாப்பிடுவது கூடும். இது ஹராம் ஆகாது. ஆனால் இதைப் பொதுமக்களிடம் மறைப்பது அவசியமாகும். இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள்.

நூல்: ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத்தாலிபீன்

போதைப் பொருளைக் கொஞ்சமாக சாப்பிடலாம்; ஆனால் பொதுமக்களிடம் இதைச் சொல்லக் கூடாது என்று இந்த நூல் கூறுகின்றது.

போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல் : புகாரி 6124

“அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல்கள் : திர்மிதீ 1788, நஸாயீ 5513

ஆனால் இந்த நபிமொழிகளுக்கு மாற்றமாக போதைப் பொருளைக் கொஞ்சம் சாப்பிடலாம் என்று மத்ஹபு கூறுகின்றது. அதை மக்களுக்குச் சொல்லாமல் ஆலிம்கள் தமக்குள் வைத்துக் கொள்வது கடமை எனவும் கூறுகிறது. பொதுமக்களுக்குக் கூடுதல் குறைவு என்ற அளவு தெரியாது. ஆலிம்களுக்குத் தான் அதன் சரியான அளவு தெரியும் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

ஆலிம்களுக்காக எழுந்து நிற்பது சுன்னத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகக் கூட எழுந்து நிற்கக் கூடாது என்ற இஸ்லாமியச் சட்டத்துக்கு முரணாக மத்ஹப் நூலில் எழுதப்பட்ட சட்டத்தைப் பாருங்கள்!

ஆலிம்களுக்காக எழுந்து நிற்பதைப் போன்று குர்ஆனிற்காக எழுந்து நிற்பது சுன்னத்தாகும். அதைவிடச் சிறந்ததாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்

சுன்னத் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லி இருக்க வேண்டும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை. மற்ற மக்களை விடத் தம்மை உயர்ந்தவர்கள் என்று கருதும் வழிகெட்ட ஆலிம்களால் தான் இச்சட்டம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

முஆவியா (ரலி) அவர்கள் வெளியே சென்ற போது அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும், இப்னு ஸஃப்வான் அவர்களும் அவரைக் கண்டு எழுந்து நின்றார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்கள் நீங்கள் இருவரும் உட்காருங்கள். மனிதர்கள் தனக்காக எழுந்து நிற்பது யாருக்கு மகிழ்ச்சி தருமோ அவர்கள் தங்களது இருப்பிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.

நூல் : திர்மிதி 2679

நபியவர்களை விடவும் நபித்தோழர்களுக்கு மிக நேசத்திற்குரியவர்கள் யாரும் இருக்கவில்லை. நபியவர்கள் எழுந்து நிற்பதை வெறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் நபித்தோழர்கள் யாரும் நபியவர்களைக் காணும் போது எழுந்து நிற்கமாட்டார்கள் .

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதி 2678

நபிகள் நாயகத்துக்கும், மத்ஹபு சட்டங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறதா?

கத்னா விருந்து சுன்னத்

மத்ஹபு அறிஞர்கள் என்ற பெயரில் மக்களை வழிகெடுத்த மூடர்கள் மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை எல்லாம் சுன்னத் என்று கூறி மக்களிடம் பரப்பினார்கள். அதற்கான மற்றொரு ஆதாரம் இதோ:

கத்னா விருந்துக்காக செல்வது போல் ஏனைய விருந்துகளை ஏற்பது சுன்னத்தாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்

கத்னா செய்வதற்காக நபியவர்கள் எந்த விருந்தையும் ஏற்படுத்தவில்லை. அப்படி செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் போது இது எப்படி சுன்னத்தாகும்?

நபிகள் சம்மந்தப்பட்ட சின்னஞ்சிறு விஷயமும் கூட ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பேரப்பிள்ளைகளான ஹஸன், ஹுஸைன் ஆகியோருக்கு எந்த ஆண்டு, எந்த மாதம், எந்தத் தேதியில் கத்னா செய்யப்பட்டது என்று எந்த ஹதீஸ் நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. பேரப்பிள்ளைகளின் கத்னாவுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விருந்து அளித்து இருந்தால் அது பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

தமது பேரப்பிள்ளைகளுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது கத்னா செய்தார்கள் என்ற விபரம் ஒருவருக்கும் தெரியவில்லை என்றால் எந்த அளவுக்கு இரகசியமாக கத்னா செய்து வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. இந்த நபிவழிக்கு முரணாக கத்னா விருந்து சுன்னத் என்று பத்வா கொடுத்து மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி தமது வயிறை வளர்த்துள்ளனர் என்பது தெரிகிறதா?

மொழிவெறியையும், இனவெறியையும் ஆதரிக்கும் மத்ஹபுகள்

குலத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ எந்த மனிதனும் உயர்ந்தவன் அல்லன் என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். இந்தக் கோட்பாட்டுக்கு எதிராக மத்ஹபுகள் நடத்தும் யுத்தத்தைப் பாருங்கள்!

அரபி அல்லாதவன் அரபிப் பெண்ணுக்கு தகுதியானவனாக மாட்டான். அரபி அல்லாதவன் ஆலிமாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் சரியே. இதுவே மிகச் சரியானதாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

நெசவுத்தொழில் செய்பவன் தையல் தொழில் செய்பவனுக்கு நிகரில்லை. தையல் தொழில் செய்பவன் வியாபாரிக்கு நிகரில்லை. இவ்விருவரும் ஆலிமுக்கும், காஜிக்கும் நிகரில்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அரபி அல்லாதவனும், பாமரனுமாகிய அத்தர் வியாபாரி அரபியனான நாவிதனுக்கு நிகராக மாட்டான்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அரபியன் அல்லாத மார்க்க அறிஞன், அரபியனான பாமரனுக்கு நிகராவான்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அரபியருக்கும், குரைஷிகளுக்கும், ஹாஷிமிகளுக்கும் அவர்களைப் போன்றவர்களே சமமாவார்கள். இதற்குக் காரணம் அரபுகள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் என்பதாகும். மேலும் மேற்கண்ட இனத்து மக்கள் தம் இனம் குறித்து அதிகம் பெருமை கொள்வார்கள் என்பது மற்றொரு காரணம்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

இதோ நபியவர்களின் கூற்றைப் பாருங்கள்.

மக்களே உங்கள் இரட்கன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ; அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினார்கள்

நூல் : அஹ்மத் 22391

இனம், மொழி, நிறம் அனைத்தையும் காலில் போட்டு மிதித்த மார்க்கத்தில்தான் இது போன்று இனவெறியை திணிக்க மத்ஹபுகள் முயற்சித்துள்ளன.

ஒரு பெண் அவளுடைய செல்வத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும், அழகிற்காகவும், மார்க்கப் பற்றிற்காகவும் திருமணம் முடிக்கப்படுகிறாள். நீ மார்க்கமுடைய பெண்ணைத் திருமணம் செய்து வெற்றியடைந்து கொள். அல்லது உன்னுடைய இரு கரங்களும் மண்ணாகட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5090

அல்லாஹ்வுக்கு இணையாக மத்ஹபு இமாம்கள்

இஸ்லாத்தின் எந்த வணக்கத்தையும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே செய்ய வேண்டும். இது பாமரனும் அறிந்துள்ள உண்மையாகும். இந்த உண்மை கூட மத்ஹபு சட்ட வல்லுனர்களுக்குத் தெரியவில்லை என்பதைப் பாருங்கள்!

தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை நான் ஓதாவிட்டால் ஷாஃபி இமாம் என்னைத் தண்டித்து விடுவார் என்றும், அதை ஓதினால் அபூஹனீஃபா என்னைத் தண்டித்து விடுவார் என்றும் அஞ்சியதால் நான் இமாமத் பணியைத் தேர்வு செய்து கொண்டேன் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

ஷாஃபி இமாம் கருத்துப்படி இமாமைப் பின்பற்றித் தொழுபவர் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயம் ஓத வேண்டும். அபூஹனீஃபா இமாம் கருத்துப்படி இமாமைப் பின்பற்றுபவர் ஓதக் கூடாது. ஆனால் இரு இமாம்களின் கருத்துப்படியும் இமாமாக இருப்பவர் அல்ஹம்து ஓத வேண்டும்.

இருவரிடமிருந்தும் தப்பிக்க என்ன வழி இமாமாத் பணியில் சேர்ந்தால் தப்பித்துக் கொள்ளலாமாம். இது எவ்வளவு பாரதூரமான விஷயம் என்று பாருங்கள்!

ஷாஃபி இமாமோ, ஹனஃபி இமாமோ மறுமையில் தண்டிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்களா? அந்த இமாம்கள் மறுமையில் தேறுவார்களா என்பதே சந்தேகமானது. அப்படியே அவர்கள் மறுமை விசாரணையில் தேறினாலும் தனது மத்ஹபைப் பின்பற்றாதாவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்காது. மற்றவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர யாருக்காவது உள்ளது என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான். இதுபற்றிக் கூட கவலைப்படாமல் வாயில் வந்தவாறு உளறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.

வேதத்தின் பெயரால் கட்டுக்கதைகள்

மத்ஹபு அறிஞர்களுக்கும், அறிவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரத்தைக் காணுங்கள்!

வானத்திலிருந்து இறக்கப்பட்ட வேதங்களின் எண்ணிக்கை விபரம்: ஷீத் நபிக்கு அறுபது வேதங்களும், இப்ராஹீம் நபிக்கு முப்பது வேதங்களும், மூஸா நபிக்கு தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னர் பத்து வேதங்களும், தவ்ராத், இஞ்சீல், ஸபூர், குர்ஆன் ஆகிய நூற்றி நான்காகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

அல்லாஹ் அருளிய வேதங்கள் நூற்றி நான்கு என்பதற்கு ஆதாரம் என்ன? ஷீத் நபிக்கு அறுபது வேதங்கள் என்பதற்கும், இப்ராஹீம் நபிக்கு முப்பது வேதங்கள் என்பதற்கும், மூஸா நபிக்கு பத்து வேதங்கள் என்பதற்கும் என்ன ஆதாரம்? ஒரு ஆதாரமும் இல்லை. மார்க்கத்தில் பெயரால் துணிந்து இட்டுக்கட்டும் பொய்யர்களால் தான் மத்ஹபுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

எல்லாமே புள்ளியில் அடக்கம்

மேற்கண்ட நூற்றி நான்கு வேதங்களின் கருத்துக்கள் குர்ஆனில் அடக்கமாகும். குர்ஆனின் கருத்துக்கள் அனைத்தும் ஃபாத்திஹா அத்தியாயத்தில் அடக்கமாகும். ஃபாத்திஹா அத்தியாயத்தின் கருத்துக்கள் பிஸ்மில்லாஹ்வில் அடக்கமாகும். பிஸ்மில்லாஹ்வின் கருத்துக்கள் அனைத்தும் அதன் முதல் எழுத்தாகிய பா வில் அடக்கமாகும். பா என்ற எழுத்தின் கருத்துக்கள் அதன் கீழே உள்ள புள்ளியில் அடக்கமாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

மத்ஹபு சட்ட வல்லுனர்கள் எந்த அளவு கூறுகெட்டவர்களாக இருந்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது. ஒரு புள்ளி வைத்தால் நூற்றி நான்கு வேதங்களையும் எழுதியதாக ஆகுமா? கத்தம் ஓதப் போகும் போது பா என்று ஏப்பம் விட்டு முழுக்குர்ஆனையும் ஓதி விட்டோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

நாம் சொல்வதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பா என்பது எத்தனையோ வாக்கியங்களுக்கு முதல் எழுத்தாக இருக்குமே? புள்ளி என்பது எராளமான எழுத்துக்களில் இருக்குமே? என்று கூட சிந்திக்காமல் எழுதி வைத்துள்ளனர்.

ஒரு மஹ்ரமான பெண் கணக்கில்லாத பெண்களுடன் கலந்து விட்டால்..

மத்ஹபு சட்ட வல்லுனர்களின் மேதாவிலாசத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்த மற்றொரு சட்டத்தைப் பாருங்கள்!

எண்ணுவதற்கு சிரமமான பெண்களுடன் உதாரணமாக ஆயிரம் பெண்களுடன் ஒருவனது மஹ்ரமான (மணமுடிக்கத் தடை செய்யப்பட்ட) பெண் கலந்து விட்டால் அவர்களில் கடைசியாக ஒருத்தி மிஞ்சும் வரை யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். திருமணம் செய்ய ஹலாலான பெண்ணை எளிதாக கண்டு பிடிக்க முடிந்தாலும் சரியே. இருபது முதல் நூறு வரை உள்ள பெண்களுடன் ஒரு மஹ்ரம் கலந்து விட்டால் அவர்களில் ஒருவரையும் திருமணம் செய்யக் கூடாது.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்

இந்த அற்புதமான ஆய்வுக்கு என்ன அடிப்படை? இதற்கான ஆதாரம் என்ன? ஒரு ஆதாரமும் இல்லை.

மனைவியுடன் பயணம் கூடாது

பெண்கள் தனியாகப் பயணம் செய்யக் கூடாது என்றும், அன்னிய ஆண்களுடன் சேர்ந்து பயணம் செய்யக் கூடாது என்றும் கூறினால் அதற்கு ஆதாரம் உண்டு. மனைவியை அழைத்துக் கொண்டு கணவன் பயணம் செய்யக் கூடாது மத்ஹபு சட்டம் கூறுகிறது.

மனைவியுடன் கணவன் பயணம் செய்யலாம் என்ற சட்டம் அந்தக் காலத்துக்கான சட்டமாகும். இந்தக் காலத்தில் மனைவியுடன் கணவன் பயணம் செல்லக் கூடாது. காலத்துக்கு ஏற்ப சட்டமும் மாறும் என்பதில் இதுவும் அடக்கமாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

தனியாகவோ, அன்னிய ஆணுடனோ பெண்கள் பயணம் செய்யக் கூடாது என்று சட்டமிருக்க இச்சட்டத்தின் மூலம் பெண்கள் பயணம் செல்வது அறவே கூடாது என்று சொல்லப்படுகிறது. அறிவீனமான இச்சட்டத்தை மார்க்க அறிவு உள்ளவர்கள் இயற்றி இருக்க முடியுமா? ஆதாரமில்லாமல் காலத்துக்கு ஏற்ப நபிவழியை நிராகரிக்கலாம் என்று கூறும் மத்ஹபுகள் மறுமையில் வெற்றி தருமா?

அல்லாஹ்வின் தன்மையை அடையும் மந்திரம்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கவும் மத்ஹபுகள் சளைக்கவில்லை என்பதைப் பாருங்கள்!

அல்லாஹ் என்ற பெயருக்கு தனித்தன்மைகளும், அதிசயங்களும் உள்ளன. ஒருவன் தனிமையில் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டே இருந்து தன்னை மிகைக்கும் நிலையை அடைந்தால் அல்லாஹ்வின் ஆட்சியுடைய அதிசயங்களை அவர் கண்கூடாகக் காண்பார். மேலும் அவர் ஆகு என்று கூறினால் உடனே ஆகிவிடும் என்பதும் இப்பெயரின் சிறப்புக்களில் ஒன்றாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

ஆகு எனக் கூறி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனித்தன்மையாகும். அவ்லியாக்கள் இது போன்ற நிலையை அடைய முடியும் என்ற நச்சுக் கருத்தை மார்க்கம் என்ற பெயரில் எழுதி வைத்துள்ளனர்.

இப்படி அல்லாஹ் கூறி இருக்கின்றானா? அல்லது அல்லாஹ்வின் தூதர் கூறி இருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. இப்படி எழுதி வைத்தவன் முஸ்லிமாக இருக்க முடியுமா? அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த முஷ்ரிக்குகள் தான் மத்ஹபு சட்ட அறிஞர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறதா?

பைத்தியத்துக்கு வைத்தியம்

மத்ஹபு சட்ட வல்லுனர்கள் எந்த அளவுக்கு கடைந்தெடுத்த மூடர்களாக உள்ளனர் என்பதை மேலும் பாருங்கள்!

ஒரு காகிதத்தில் 21 தடவை ரஹீம் என்று எழுதி தலைவலி உள்ளவனின் கழுத்தில் தொங்க விட்டால் அல்லாஹ்வின் அனுமதியுடன் அவன் குணமடைவான். பைத்தியம் பிடித்தவனின் உள்ளங்கையில் ஏழு தடவை ரஹீம் என்று எழுதி, அவனது காதில் ஏழுதடவை ரஹீம் என்று கூறினால் அந்த வினாடியில் பைத்தியம் தெளிந்து விடும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

இப்படி அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. இப்படி எந்தப் பைத்தியக்காரனும் குணமடையவுமில்லை. அப்படி இருந்தும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இந்தப் பொய்யைச் சட்டமாக எழுதி வைத்துள்ளனர்.

முஹம்மத் எனப் பெயர் வைத்தல்

ஒவ்வொரு மனிதனும் அவனது செயல்களுக்குத் தான் கூலி கொடுக்கப்படுவான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஒருவன் சிறந்த பெயர் சூட்டப்படுகிறான் என்றால் பெயர் சூட்டப்பட்டவனுக்கு இதில் எந்தச் சம்மந்தமும் இல்லை. எத்தனையோ கயவர்களுக்கு அழகான பெயர்கள் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் மத்ஹபு சட்ட நூல்கள் கூறுவதைப் பாருங்கள்!

யாருடைய பெயர் முஹம்மத் என்று உள்ளதோ அவர்கள் எழுந்து சொர்க்கம் செல்லட்டும் என்று கியாமத் நாளில் ஒரு அழைப்பாளரான வானவர் அறிவிப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் அளிக்கும் கண்ணியமாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

நபியின் மீது பொய் சொன்ன இந்தக் கயவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவேயில்லை. இது போன்ற மடமைகளுக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை அறியாத மூடர்கள் தான் மத்ஹபு சட்டங்களை எழுதியுள்ளனர் என்று தெரிகிறதா?

ஒருவருக்கு முஹம்மத் என்று பெயர் இருந்தால் அவரைக் கண்ணியப்படுத்துவது அவசியமாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்.

இவர்கள் வீட்டில் முஹம்மத் என்ற பெயர் உள்ளவன் திருடினால் மாலை போட்டு மரியாதை செய்வார்களா? சரியான மடையர்களாக மத்ஹபு சட்ட வல்லுனர்கள் இருந்துள்ளனர்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *