தந்திரங்கள் மூலம் சட்டத்தை வளைத்தல்

மார்க்கச் சட்டங்கள் மறுமை வாழ்வுக்கு அஞ்சி கடைப்பிடிக்க வேண்டியவை என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் மார்க்கச் சட்டம் இதுதான் என்று தெரிந்து கொண்டு அதை மீறுவதற்காக மத்ஹப் நூல்களில் தந்திரங்கள் சொல்லித் தரப்படுகின்றன.

அல்லாஹ்வையே ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை எவன் உள்ளத்தில் உள்ளதோ அவன் தான் தந்திரங்களைக் கையாண்டு அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவான். அத்தகைய கேடுகெட்டவர்களால் தான் மத்ஹப் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய சட்டங்கள் மத்ஹப் நூல்களில் மலிந்து காணப்படுகின்றன.

பிறமதத்தவர் மூலம் ஹராமான வியாபாரத்தைச் செய்யலாம்.

மதுபானத்தையும், போதைப் பொருட்களையும் பயன்படுத்துவதும் விற்பதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தை மீறி மதுபான வியாபாரம் செய்ய மத்ஹப்கள் சொல்லித் தரும் தந்திரத்தைப் பாருங்கள்!

 

சாராயத்தை வாங்கவோ, விற்கவோ ஒரு கிறித்தவருக்கு முஸ்லிம் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹனீஃபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

சாராயக் கடை வட்டிக் கடை போன்றவற்றை முஸ்லிமல்லாதவர் வழியாகச் செய்து சம்பாதிக்கலாம் என்று கூறி முஸ்லிம்களைப் பாவிகளாக்கும் இந்த மத்ஹபுகளை நம்பலாமா?

தந்திரம் செய்து ஜகாத் கொடுக்காமல் இருத்தல்

 

ஜகாத் கடமையாவதைத் தடுப்பதற்காக கால்நடைகளின் ஜகாத்திற்குரிய அளவை மற்றவற்றுடன் கலப்பது, அல்லது தனது கைவசத்தில் இருந்து நீக்கி பிறகு தனது கைவசத்தில் எடுத்துக் கொள்வது போன்ற தந்திரங்களைச் செய்தால் அது வெறுக்கத்தக்கதல்ல என்று அபூ யூசுஃப் கூறுகிறார்கள். ஏனென்றால் இது ஜகாத் கடமையாவதை விட்டும் தடுப்பதுதான். அடுத்தவரின் உரிமையை நாசமாக்குவதல்ல. முஹீத் என்ற நூலில் இதுதான் மிகச் சரியானது என உள்ளது. முஹம்மத் அவர்கள் மக்ரூஹ் (சிறுகுற்றம்) எனக் கூறியுள்ளார்கள்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

ஹனஃபி மத்ஹப் சட்டப்படி ஒரு வருடம் ஆனால் ஜகாத் கடமையாகும். ஒருவருடம் முழுமையடையும் நேரத்தில் தனது செல்வத்தை மனைவிக்கோ, மற்றவருக்கோ கொடுத்து விட்டால் அந்த ஆண்டுக்கான ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை. அடுத்த நாள் அந்தப் பொருளை மீண்டும் வாங்கிக் கொள்ளலாம். இனி ஒரு வருடம் நிறையும் போது தான் ஜகாத் கடமையாகும். அப்போதும் இதே தந்திரத்தைச் செய்யலாம். தனது சொத்துக்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஜகாத் கொடுக்காமல் இருக்கலாம் என்று தந்திரம் சொல்லித் தருகின்றனர். அதாவது அல்லாஹ்வையும் ஏமாற்ற முடியும் என்ற இறைமறுப்புக் கொள்கை உடையவர்களாக மக்களை மாற்றத் துணிந்துள்ளனர் என்று தெளிவாகிறதா?

நாற்பது ஆடுகள் முதல் நூற்றி இருபது ஆடுகள் வரை இருந்தால் ஒரு ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும்.

அதற்கு மேல் 200 வரை இருந்தால் இரு ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும்.

மூன்று நபர்களிடம் தலா நாற்பது ஆடுகள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும். இதிலிருந்து தப்பிக்க மூவருடைய பங்கையும் தற்காலிகமாக ஒருவருக்கு உரியது என்று ஆக்கினால் 120 ஆடுகளுக்கும் ஒரு ஆடுதான் ஜகாத் ஆகும். இப்படி ஒரு ஆட்டை ஜகாத் கொடுத்த மூவரும் தத்தமது நாற்பது ஆடுகளை எடுத்துக் கொண்டால் ஜகாத்தில் இருந்து தப்பிக்காலாம் என்று தந்திரம் சொல்லித் தருகின்றனர்.

அல்லாஹ்வைப் பற்றி ஓரளவு அச்சம் உள்ளவர்கள் கூட இதை ஏற்க முடியுமா? எத்தகைய கயவர்கள் மத்ஹப் அறிஞர்களாக இருந்துள்ளனர் என்பது தெரிகிறதா?

பவர் கொடுத்து ஏமாற்றுதல்

ஒருவருக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதாக ஏமாற்ற மத்ஹபுகள் சொல்லித்தரும் தந்திரத்தைப் பாருங்கள்!

 

ஒரு பொருளின் அதிகாரத்தை – பவரை – இன்னொருவருக்குக் கொடுத்து விட்டு அதன்பின் அதைக் கணவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் அது செல்லாது. அன்பளிப்பு கொடுத்து விட்டு அதைச் செல்லாததாக ஆக்கும் தந்திரம் இதுவே!

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இன்னொருவனுக்கு பவர் கொடுத்து விட்டு அதை அன்பளிப்பாக மற்றவருக்குக் கொடுப்பதாகச் சொல்வது மோசடி அல்லவா? இப்படிச் செய்யக் கூடாது என்று போதிக்காமல் அதைச் செய்யத் தூண்டும் கேடுகெட்ட சட்டம் நமக்குத் தேவையா? பித்தலாட்டம் செய்யும் கயவர்களால் தான் மத்ஹபுகள் உருவாக்கப்பட்டன என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா?

வாடகைதாரரை கொடூரமாக வெளியேற்றுதல்

மக்களுக்கு கொடுமை செய்வதற்காக மத்ஹப் சட்ட நிபுணர்கள் எப்படி எல்லாம் ஆய்வு செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள்!

ஒருவன் தனது வீட்டை மாதம் இவ்வளவு வாடகை என்றும், மாதத்தின் இறுதியில் ஒவ்வொருவருக்கும் இந்த ஒப்பந்தத்தை முறிக்கும் உரிமை உள்ளது என்றும் பேசி வாடகைக்கு விடுகிறான். வாடகைக்கு எடுத்தவன் மாதம் முடிவதற்கு முன் மனைவியையும், தனது பொருட்களையும் அவ்வீட்டில் விட்டு விட்டு ஊரைவிட்டு போய்விட்டான். இப்போது வாடகை ஒப்பந்தத்தை அவனது மனைவியிடம் முறிக்க முடியாது. ஏனெனில் அவளிடம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

அவளை வெளியேற்ற தந்திரம் உள்ளது. அதாவது மாதம் முடிவதற்குள் மற்றொருவரிடம் வாடகை ஒப்பந்தம் செய்ய வேண்டும். மாதம் பிறந்த உடன் முதல் ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். இப்போது அவளையும் அவ்வீட்டில் உள்ள பொருட்களையும் இரண்டாவதாக வாடகைக்கு எடுத்தவன் காலி செய்யலாம்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

கணவன் காணாமல் போய்விட்ட நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் அவனது மனைவி இருக்கிறாள். வீட்டை விட்டு காலி செய்தால் அவளது பாதுகாப்பு இன்னும் கேலிக்குரியதாக ஆகும். அவளுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்காமல் தந்திரமாக அவளைத் தெருவில் நிறுத்துவது பற்றி சிந்திக்கும் இவர்கள் சட்ட நிபுணர்களா? சதிகாரர்களா? சிந்தியுங்கள்!

ஒரே பிரச்சனையில் மூன்று மத்ஹபுகளைப் பின்பற்றும் மடமை

மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்குவதே மத்ஹபுகளின் நோக்கம் என்பதைக் கீழ்க்காணும் கேடுகெட்ட சட்டம் தக்க ஆதாரமாக அமைந்துள்ளது. ஒருவன் மனைவியை மூன்று தலாக் கூறிவிட்டால் அவளுடன் இணைய முடியாது. மூன்று விவாகரத்து முடிந்த பின் அவளை இன்னொருவன் திருமணம் செய்து அவன் அவளை விவாகரத்து செய்து அவளது இத்தா காலம் முடிந்து விட்டால் அப்போது முதல் கணவன் அவளைத் திருமணம் செய்யலாம்.

மூன்று தலாக் கூறி விட்டு உடனே அவளை மீண்டும் திருமணம் செய்ய விரும்பினால் அதற்கு ஒரு தந்திரம் உள்ளது என்று கூறி அல்லாஹ்வின் சட்டத்தை எப்படிக் கேலி செய்கிறார்கள் என்று பாருங்கள்!

 

இதற்கு ஷாஃபி மத்ஹபில் ஒரு தந்திரம் உள்ளது. அதாவது பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அவன் அவளுடன் உடலுறவு கொள்வான். இந்தத் திருமணம் செல்லும் என்று ஷாஃபி மத்ஹப் அறிஞர் ஒருவர் ஃபத்வா கொடுக்க வேண்டும். சிறுவன் திருமணம் ஷாஃபி மத்ஹபில் செல்லும். இதன் பின் அச்சிறுவன் அவளைத் தலாக் கூற வேண்டும்.

ஹம்பலி மத்ஹபில் சிறுவன் தலாக் சொன்னால் இத்தா இல்லை என்பதால் அவ்வாறு ஒரு ஹம்பலி அறிஞர் ஃபத்வா கொடுக்க வேண்டும். அல்லது அந்தச் சிறுவன் சார்பில் அவனது பொறுப்பாளர் தலாக் சொல்லலாம்; இதற்கு இத்தா இல்லை என்று மாலிக் அறிஞர் ஃபத்வா கொடுக்க வேண்டும். இதன் பிறகு உடனே முதல் கணவன் அவளை மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இத்திருமணம் செல்லும் என்று ஷாஃபி அறிஞர் ஃபத்வா கொடுக்க வேண்டும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்.

மூன்று தலாக் சொன்னால் இரண்டாம் கணவன் அவளை தலாக் சொல்லி இத்தாவும் முடிந்து இருக்க வேண்டும் என்று இவர்கள் ஒப்புக் கொண்ட சட்டமாகும். ஆனால் இரண்டாம் கணவன் தலாக் சொன்ன மறுகனமே அவளை முதல் கணவன் திருமணம் செய்யலாம் என்று கூறி அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் சாதகமான ஒரு மத்ஹப் சட்டத்தை எடுத்துக் காட்டி அல்லாஹ்வின் சட்டத்தை எப்படி ஏமாற்றலாம் என்று கற்றுக் கொடுக்கும் மத்ஹபுகள் ஒழிக்கப்பட வேண்டாமா?

உம்ராவுக்கு சட்டத்தை உடைத்தல்

ஷாஃபி மத்ஹப் சட்டப்படி மக்காவைச் சேர்ந்த பெண்கள் நஃபிலான உம்ராக்கள் செய்யக் கூடாது. இப்படி இவர்களே சட்டத்தை எழுதி வைத்து விட்டு அதை எப்படி ஏமாற்றுவது என்று சொல்லித் தருவதைப் பாருங்கள்!

 

மக்காவைச் சேர்ந்த பெண்கள் நஃபிலான உம்ராக்கள் செய்வது ஹராமாகும். இதற்கு ஒரு தந்திரம் உள்ளது. மக்காவைச் சேர்ந்த பெண் உம்ரா செய்வதாக நேர்ச்சை செய்ய வேண்டும். நேர்ச்சை செய்து விட்டால் அது கடமை என்ற நிலையை அடைந்து விடும். எனவே இப்போது அவள் உம்ரா செய்யலாம்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்ட தந்திரம்

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சமாக நடக்கக் கூடாது; குறிப்பாக பொருதாரத்தை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. இச்சட்டத்தை மீறுவதற்கு மத்ஹப் சொல்லித் தரும் தந்திரத்தைப் பாருங்கள்!

 

ஒருவன் தனது மரணத்துக்குப் பின் தனது பிள்ளைகளில் ஒருவருக்கு மட்டும் அதிகப்படியாக செய்ய நாடுகிறான். மற்ற வாரிசுகளின் சம்மதமில்லாமலே அந்த ஒரு மகன் மட்டும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறான். இதற்கு ஒரு தந்திரம் உள்ளது. குறிப்பிட்ட சொத்தை ஒரு அன்னியனுக்கு வஸிய்யத் செய்ய வேண்டும். அந்த அன்னியன் அந்தச் சொத்தில் எனது இந்த மகனுக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இவ்வாறு கொடுக்க வேண்டும். இவன் மரணித்ததும் அந்த சொத்தை அன்னியன் டஹ்னதாக்கிக் கொண்டு அதில் இவனது மகனுக்கு குறிப்பிட்ட சொத்தை தானமாக கொடுப்பான். இவ்வாறு பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டலாம்.

நூல் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் அதுபாவம் என்றும் போதிக்கும் மார்க்கத்தில் அதை மீறுவதற்கு தந்திரம் சொல்லித் தருகின்றனர். பெற்ற பிள்ளைகளைப் பாரபடமாக நடக்க ஊக்குவிக்கும் இந்த மத்ஹபுகள் தேவையா?

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *