*மதங்களுக்கு அப்பாற்பட்டதா ஓணம் பண்டிகை?*
ஓணம் பண்டிகை என்பது ஒரு மதச் சார்பற்ற பண்டிகை போலவும், மத பேதமின்றி மலையாளிகள் அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு மாநில விழா போலவும் பள்ளிக்கூடப் பாடங்கள் உட்பட போதிக்கப்பட்டு வருகின்றது.
*சில சிந்தனையற்ற மலையாள முஸ்லிம்களும் கூட, ஓணம் பண்டிகையின் வரலாற்றுப் பக்கங்களை அறிந்து கொள்ளாமல், இது ஏதோ தங்கள் இனத்தின் விழாவாக எண்ணிக் கொண்டாடி மகிழ்கின்றனர்.*
*தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம் எப்படி சூரியனை வணங்குதலில் துவங்கி, படையல் செய்தல், பசு மாட்டை வழிபடுதல் என பிற மதச் சடங்குகளின் பின்புலத்தோடு, தமிழர் இனப் பண்டிகையென வலம் வருகிறதோ, அதே போன்ற மத அடையாளங்களுடன் கூடிய பண்டிகை தான் ஓணம் பண்டிகை.*
இது முழுக்க முழுக்க இந்துக்களின் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
*குலசேகர வம்சத்தைச் சேர்ந்த மகாபலி பெருமாள் என்ற ஓர் அரசன், கேரளா சமஸ்தானத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்ததாகவும்.*
நாட்டை செம்மையாக ஆட்சி செய்த அவனுக்கு இந்துக்கள் வணங்கும் பிரம்மா என்ற கடவுள் பல அற்புத சக்திகளை அருளியதாகவும் இந்து வேதங்களில் ஒன்றாக நம்பப்படும் பாகவத புராணாவில் எழுதி வைத்துள்ளனர்.
இந்த *அற்புத சக்திகளைப் பெற்ற மகாபலி, இந்தப் பூமிக்கு அரசனானது மட்டுமின்றி, வானுலகில் இருக்கும் கடவுள்களையெல்லாம் போரில் சந்தித்து அவர்களைத் தோற்கடித்து இந்திரலோகத்திற்கும் அரசனாக* ஆகி அசைக்க முடியாத பெரும் சக்தியாகத் திகழ்ந்தானாம்.
மகாபலியின் அசுர வளர்ச்சியைக் கண்டு பயமுற்ற குட்டி தெய்வங்கள், பெரிய தெய்வமான விஷ்ணுவிடம் உதவி கேட்டுச் சென்றனர் எனவும், மகாபலியின் சக்தியை வீழ்த்துவதற்காக விஷ்ணு, வாமணனின் அவதாரம் எடுத்து மகாபலியிடம் வரம் கேட்டு வந்தார் என்றும், மூன்று கால் தடங்கள் மூலம் பெரும் நிலப்பரப்பைத் தன் வசம் எடுத்துக் கொள்ளும் வரத்தை வாமணனுக்கு மகாபலி கொடுத்தாகவும் நம்புகிறார்கள்.
*இரண்டு கால் தடங்களிலேயே பூமி, ஆகாயம் என மொத்த லோகத்தையும் வாமணன் அடக்கி விட்டதால், கருணையே வடிவான மகாபலி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, மூன்றாவது காலைத் தனது தலை மீது வைத்துக் கொள்ள வாமணனிடம் சொன்னாராம்*. (அதாவது, தன் மீது முழு ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலை வழங்கினாராம்).
தனது சக்திகள் அனைத்தும் அழிந்தாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்கு முக்கியம் என்று கருதிய மகாபலியைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்த வாமணன் (விஷ்ணு), தேவலோகத்தின் பொறுப்பை மகாபலியிடமே ஒப்படைத்தாராம்,
இருப்பினும், இந்த பூமியில் வசிப்பதே தமக்கு விருப்பமான காரியம் என்று சொன்ன மகாபலி, ஆண்டுக்கு ஒரு முறையேனும் பூமிக்குச் சென்று தனது ராஜ்ஜிய மக்களைக் காண அனுமதிக்க வேண்டும் என்று விஷ்ணுவிடம் கேட்க, விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்தார்.
*இப்படிச் செல்கிறது அவர்களின் நம்பிக்கை…*
இது தான் மகாபலியின் *சுருக்கமான வரலாறு.*
இதன் படி ஒவ்வொரு வருடமும் தனது குடிமக்கள் அனுஷ்டிக்கும் சிங்கம் மாதத்தில் மகாபலி ராஜா வானுலகிலிருந்து கடவுள் (?) விஷ்ணுவின் அனுமதி பெற்று கேரளாவிற்கு விஜயம் செய்கிறாராம்.
அவ்வாறு வருகை தரும் மகாபலியை வரவேற்பது தான் இன்று இவர்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை!
அத்துடன், மகாபலிக்கு இத்தகைய அந்தஸ்தை அளித்த வாமணக் கடவுளை வணங்குவதும் இந்தப் பண்டிகையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
முழுக்க முழுக்க இந்து மத நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்ட புராணங்களையும் இதிகாச நூல்களையும் வைத்து, கற்பனைகளை வரலாறுகளாக எழுதி வைத்துக்கொண்டு, இந்துக்கள் கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை எப்படி மதச்சார்பற்ற பண்டிகையாகக் கருதப்படும்?
இதையும் அறியாமையின் வெளிப்பாடாக, தங்கள் இன அடையாளமெனக் கருதி, அதைக் கொண்டாடும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் இருக்கிறார்கள் என்றால் குர்ஆன் ஹதீஸ் என்ற இறை வார்த்தைகளை நாம் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பயன்?
*‘‘யார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’’* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
நூல்: *அபூதாவூத் 3515*
வரலாற்றை அறிவோம், ஈமானைப் பாதுகாப்போம்!!
ஆக்கம்: அபு ஷஹீன்