மண்ணறை தண்டனைக்கான காரணங்கள்

உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டிட வேண்டும்.

உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. ‘இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உர்வா பின் ஸுபைர் (ரஹ்),
நூல் : புகாரி 3978

வழிகெட்ட கொள்கையைப் பின்பற்றுதல்

பாவமான காரியங்கள் அனைத்தும் தண்டனையைப் பெற்றுத் தரக் கூடியதாக இருந்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களினால் மண்ணறையில் கிடைக்கும் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்தப் பாவங்கள் நம்மிடத்தில் ஏற்படாதவாறு நாம் நடந்து கொண்டால் மண்ணறை தண்டனையிலிருந்து அல்லாஹ் நாடினால் தப்பித்துக் கொள்ளலாம்.
இன்றைக்கு சமுதாயத்தில் பல வழிகெட்ட கொள்கைகள் தோன்றியிருக்கிறது. நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தர்ஹா வழிபாடு, தனிமனிதர் வழிபாடு போன்றவைகளால் ஒரு சாரார் அல்லாஹ்விற்கு இணை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களைப் போன்று மிர்ஸா குலாம் என்பவனும் நபி என்று நம்பி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு தடம் புரண்டு விட்டார்கள். மேலும், குர்ஆன் ஹதீஸ் இந்த இரண்டை மட்டும் மூல ஆதாரமாகக் கொள்ளாமல் மற்றவர்களின் கருத்துக்களையும், புதுமையான விஷயங்களையும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுத்துவதும் மக்களிடையே இருந்து வருகிறது.

குர்ஆனையும், ஹதீஸையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற நேரான கொள்கையை ஏற்று இதைத் தவிர உள்ள அனைத்து வழிகெட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் புறக்கணித்தால் மண்ணறை வாழ்கையில் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் மண்ணறை வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையைப் பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்பர். நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், *”எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் ” நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு *இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.*

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 1338

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *