மக்கத்து காஃபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்

அல்லாஹ்வை நம்பிய மக்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவதேன்?

அல்லாஹ்வை ஏற்ற மக்களுக்கு ஏன் இறைத் தூதரை அனுப்ப வேண்டும்?

கடவுள் விஷயத்தில் அவர்கள் செய்த தவறு என்ன?

திருக்குர்ஆனை ஆராயும் போது அவர்கள் செய்த தவறு என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அல்லாஹ்வைக் கடவுளாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சில வணக்கங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் செய்து வந்தனர். இவர்களை நாம் திருப்திப்படுத்தினால் இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள். நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே நெருக்கத்தை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்கி வந்தனர்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் அவர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை தவறானது என்பதைச் சுட்டிக்காட்டித் திருத்தவே உன்னையே உன்னை மட்டும் வணங்குகிறோம் என்று அவர்களுக்குக் கற்றுத் தருகிறான்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. (அல்குர்ஆன் 12:106)

படைத்தவன், உணவளிப்பவன், அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவன் என்றெல்லாம் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்பியிருந்தாலும், இறைவனுக்கு இணையாக இன்னும் பல கடவுளர்களை அவர்கள் உருவாக்கி வழிபட்டு வந்தனர் என்பதை இந்த வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இதன் காரணமாகவே உன்னை மட்டுமே வணங்குவோம் என்று உறுதிமொழி எடுக்குமாறு நமக்கு அல்லாஹ் கற்றுத் தந்து, அந்தத் தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிகின்றான். அன்றைய மக்கள் எவ்வாறு இணை வைத்தனர் என்பதையும் அல்லாஹ் வேறு சில இடங்களில் அடையாளம் காட்டுகின்றான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

இந்த வசனங்கள் மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) அல்லாஹ்வை நம்பியதுடன் அந்த இறைவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அவர்களை திருப்திப்படுத்த முயன்றனர் என்பதை அறிவிக்கின்றன. அவர்களின் இத்தகைய நம்பிக்கையை முற்றாக மறுத்திடவே உன்னையே வணங்குகிறோம் என்று சொல்லுமாறு அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான்.

மொத்தத்தில் அன்றைய காஃபிர்களுக்கு (இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு) அல்லாஹ்வை வணங்குவதில் ஆட்சேபணை எதுவும் இருந்ததில்லை. அல்லாஹ்வை மதிக்கவும், அவனைப் போற்றவும் அவனை வணங்கவும் அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.

அவர்கள் செய்த தவறு என்னவென்றால் அல்லாஹ்வைக் கடவுள் என்ற முறையில் அவர்கள் வணங்கியதுடன் இறைவனின் அடியார்களை கடவுளிடம் பரிந்துரை செய்பவர்கள் என்ற முறையில் வணங்கி வந்தனர்.

இவ்வாறு பரிந்துரை செய்வார்கள் என்று அவர்களைத் திருப்திபடுத்த எண்ணுவதும் ஒரு சில வணக்கங்களை அவர்களுக்கு செய்ய முன்வருவதும் தவறான கொள்கை என்பதனாலேயே அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) என்றான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65)

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன் 16:53,54,55)

அல்லாஹ்வை வணங்கி அவனிடமே பிரார்த்தனை செய்து வந்த அம்மக்கள் இறைவனல்லாதவர்களையும் வணங்கியதன் மூலம் இணைவைத்து வந்தனர் என்பதற்கு இந்த வசனங்களும் சான்றுகளாக உள்ளன.

அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு இறைவனல்லாதவர்களையும் வணங்கினால் அது இறைவனால் ஏற்கப்படாது. மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) இவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்ததை அல்லாஹ் ஏற்கவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

என்றோ மரணித்து விட்டவர்களை முஸ்லிம்களில் சிலர் அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பெரியார்களைப் பரிந்துரை செய்பவர்களாகத் தானே கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் (இஸ்லாத்தை ஏற்காதவர்களும்) இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) கூறவேயில்லை.

கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நம்பிக்கையை ஒழிக்க அனுப்பப்பட்டார்களோ அதையே இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்வது தான் வேதனையானது.

மகான்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்புவதும் இணை வைத்தல் என்ற கடும் குற்றம் என்பதை விளங்க வேண்டும்.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படக் கூடிய ஒரு சந்தேகத்தை அகற்றுவது அவசியமாகும். மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தானே? மகான்களை அல்லவே? என்பதே அந்தச் சந்தேகம். இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.

மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) நல்லடியார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிகின்ற நபிமார்களின் சிலைகளையும் இவ்வாறு வணங்கி வந்தனர். அந்தச் சிலைகள் மூலம் அவர்கள் நாடியது நபிமார்களைத் தான். நபிமார்களைத் தானே அவர்கள் திருப்திபடுத்துகின்றனர் என்பதால் அல்லாஹ் அதை அங்கீகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது காபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றை தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1601, 3351, 4289

அன்றைய காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடவுள் என்று நம்பவில்லை. மாறாக இறைவனிடம் பரிந்து பேசி நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே நம்பினார்கள். அதற்காக சில வணக்கங்களையும் செய்து வந்தனர்.

இவ்வாறு நல்லடியார்களிடம் போய் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

எந்த நல்லடியாராக இருந்தாலும் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணி அவர்களைத் திருப்திப்படுத்த அனுமதி இல்லை. உன்னையே வணங்குகிறோம் என்று உறுதிமொழிக்கு இது மாற்றமானது என்பதாலேயே அந்தச் சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

நாம் இவ்வாறு கூறுவதால் நபிமார்கள், நல்லவர்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பதை மறுப்பதாக எவரும் கருதலாகாது. இறைவனின் அனுமதி பெற்று இணை வைக்காதவர்களுக்காக நபிமார்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பது உண்மை தான்.

நாம் மறுப்பது என்னவென்றால் இறந்து போனவர்களை அவர்களின் சிலையை சமாதியை பரிந்துரை செய்யுமாறு இம்மையிலேயே வேண்டுவதையும், அவர்களுக்காகவே சில வணக்கங்கள் புரிவதையும் தான்.

உன்னை மட்டும் வணங்குவோம் என்று இறைவனுக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியை மீறி இறைவனல்லாதவர்களை வணங்குவதும், அவர்களிடம் பிரார்த்தனை செய்வதும், இம்மையிலேயே அவர்களின் பரிந்துரையை மக்கா காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) வேண்டியது போல் வேண்டுவதும், இறைவனுக்குச் செய்கின்ற பாவங்களிலேயே பயங்கரமான கடுமையான குற்றமாகும்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *