மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா?

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா?

பெரு நாள் தினத்தில் சொல்லும் தக்பீரை சப்தமாகச் சொல்ல்லாமா?

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் அல்லாஹு அகபர் என்று சப்தமாகக் கூறலாம்.

என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறினோம். சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று மீண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள், அல்லாஹு அக்பர் என்று கூறினோம். சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று மீண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹு அக்பர்; என்று கூறினோம். நீங்கள் மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு நிற முடியைப் போலத் தான் இருப்பீர்கள். அல்லது கருப்பு நிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை நிற முடியைப் போலத் தான் (குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி 3348, 4741

அல்லாஹு அக்பர் என்று நாங்கள் கூறினோம் என்று இதில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. அனைவரும் சப்தமாகக் கூறியிருந்தால் தான் நாங்கள் கூறினோம் என்று அறிவிக்க முடியும். மனதுக்குள் கூறிக் கொண்டால் அதை அறியவோ, ,அறிவிக்கவோ இயலாது.

எனவே உணர்வுகளை வெளிப்படுத்த அல்லாஹு அக்பர் என்று கூறலாம்.

ஆனால் பெருநாள் தொழுகையில் கூற வேண்டிய தக்பீர்களைச் சப்தமாகக் கூறுவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. பெருநாள் தினத்தில் தக்பீர் கூறுதல் வணக்கத்தில் உள்ளதாகும். அல்லாஹ்வை நினைவு கூரும் திக்ர் ஆகும்.

திக்ருகளைச் சப்தமாகச் சொல்லக் கூடாது என்று தெளிவான தடை திருக்குர்ஆனில் உள்ளது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7:205

முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ் அல்லாஹ்வை திக்ர் செய்வது பற்றிக் கூறவில்லை. மகிழ்ச்சி தரத்தக்க செய்தியைக் கேட்கும் போது எல்லை மீறிய வார்த்தைகளைக் கூறாமல் அல்லாஹு அகபர் எனக் கூறலாம் என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்கம் என்ற முறையில் கற்றுத் தந்த துஆக்களையும், திக்ருகளையும் சப்தமில்லாமல் தான் சொல்ல வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed